இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தொடர்ந்தும் உதவுவோம் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தொடர்ந்தும் உதவுவோம்

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வியாழக்கிழமை (22) நடைபெற்றுள்ள நிலையில், பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும்   இலங்கைக்கு தொடர்ந்து உதவுவதாக அமெரிக்கா  உறுதி  யளித்துள்ளது.  ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77ஆவது கூட்டத்தொடர் கடந்த 13ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஆரம்பமான நிலையில், பொதுச்சபை அமர்வின் உயர்மட்ட விவாதம் கடந்த செவ்வாய்க்கிழமை (20) ஆரம்பமானது. 

அதில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அங்கு பொதுச்சபை அமர்வில் உரையாற்றியதுடன் மேலும் பல முக்கிய உயர்மட்ட சந்திப்புக்களிலும் பங்கேற்றிருக்கின்றார். 

அதற்கமைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராப்போசன விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அங்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது பாரியார் ஜில் பைடன் ஆகியோரைச் சந்தித்து  கலந்துரையாடியுள்ளார். 

இதன்போது பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்றும், சுதந்திரமானதும் சுபீட்சமானதுமான பிராந்தியத்தை உறுதிசெய்வதற்குத் தாம் ஒன்றிணைந்து பணியாற்றத்தயாராக இருப்பதாகவும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நூலண்ட் அமைச்சர் அலி சப்ரியிடம் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments