கண்டுகொள்ளப்படாத சமூகமாக பெருந்தோட்ட சேவையாளர்கள் | தினகரன் வாரமஞ்சரி

கண்டுகொள்ளப்படாத சமூகமாக பெருந்தோட்ட சேவையாளர்கள்

இலங்கைக்கு 200வருடங்களாக அன்னியச் செலாவணியை ஈட்டித்தரும் பெருந்தோட்டத்துறையில் தோட்டத் தொழிலாளர்களை தவிர்த்து பெருந்தோட்ட சேவையாளர்கள் சமூகம் அதிகம் பேசப்படாதவர்களாகவும் அவர்களின் நன்மை, தீமைகளுக்கு ஊடகங்கள் முக்கியத்தும் வழங்கியதாக தெரியவில்லை. இலங்கை பெருந்தோட்ட சேவையாளர்களின் 2022/2025ஆகிய மூன்று வருடங்களுக்கான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அதற்கான ஒரு சமூக மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றதாக எமக்கு தோன்றவில்லை. தோட்ட தொழிலாளர்களினால் சம்பள பிரச்சினைக்கு முழு நாட்டு மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பெருந்தோட்ட சேவையாளர்களின் பிரச்சினைகள் அநேகம் கண்டு கொள்ளப்படவில்லை அல்லது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லையா? தோட்ட தொழிலாளர்களை விட அதிகம் சம்பளம் பெறுவதால் அவர்களுக்கு பிரச்சினை ஒன்றும் இருக்காது என்ற மனப்பான்மையில் இருப்பதாலா?அவர்கள் செய்யும் வேலைக்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை அவர்களும் ஒரு நூற்றாண்டை கடந்து போராடி வருகின்றனர். 

தோட்டங்களை அரசு நிர்வகித்த போதும் பின்னர் தனியார் துறைக்கு கையளிக்கப்பட்டு இன்றுவரை நிர்வாக கட்டமைப்பை கட்டிக் காத்து வருபவர்கள் பெருந்தோட்ட சேவையாளர்களே. தோட்ட நிர்வாகத்தை பற்றி கதைக்கும் போது எமது கண்முன் வருவது பெரியதுரை மற்றும் சின்னதுரை. அதைவிட அலுவலகத்தில் பணிபுரியும் தலைமை லிகிதர் முதல் அலுவலக சிற்றூழியர், சமையல்காரர்கள், வெளிக்கள வேலைகளில் ஈடுபடும் FIELD OFFICER ஆகியோரை எம்மில் பலருக்கு தெரியாது.

பெரியதுரை, சின்னத்துரை இலட்சக்கணக்கில் சம்பளம் எடுப்பவர்கள். ஆனால் தோட்டங்களுக்கு அவர்களின் பங்கு மிகக்குறைவு. தோட்டங்களில் உருவாகும், உருவாக்கப்படும் அனைத்து பிரச்சினைகளும் இறுதியில் தீர்வு பெற்றுக் கொடுப்பவர்கள் தோட்ட சேவையாளர்களே ஆவர்.  

ஆனால் அவர்களின் ஊதியம் அவர்களின் வாழ்க்கை ஓட்டத்திற்கு போதாமலே இருக்கிறது. அதுவும் இன்றைய பொருளாதார நெருக்கடியில் சாதாரண நிலையில் இருக்கும் மக்களே 'மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டிய' நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தோட்ட சேவையாளர்களும் நாம் குறிப்பிட்ட சாதாரண மக்களுள் மத்திய தர வர்க்கத்தில் இருப்பதால் பெரும் பாதிப்புகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். 

அதேநேரம் தோட்ட சேவையாளர்களும் கூட்டு ஒப்பந்த முறையிலேயே அவர்களின் சம்பள உயர்வு, இதர சேவைகளை பெற்றுக் கொள்கின்றனர். மூன்று வருடத்திற்கான அவர்களின் கூட்டு ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் முதலாளிமார் சம்மேளனத்துடன் மூன்று சுற்று பேச்சுக்கள் நடந்தும் அது இழுபறி நிலையில் உள்ளது. இன்று நாடு இருக்கும் சூழ்நிலையில் தோட்ட சேவையாளர்களின் சங்கம் 70சதவீத ஊழிய உயர்வை கோரி நிற்கிறது.  

எமது பார்வைக்கு அது ஒரு நியாயமான கோரிக்கையே, முதலாளிமார் சம்மேளனம் எப்போதும் கூறும் ஒரு வார்த்தை தோட்டங்கள் நட்டத்தில் இயங்குகின்றன என்பதாகும். தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையும் அரசு தலையிட்டு முடிவு கட்ட முடியாமல் நீதிமன்ற தீர்ப்பும் தாமதித்து இன்றைய சூழலில் 1000ரூபா சம்பளம் வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் இன்றைய பணவீக்கம், வாழ்க்கை செலவுகள் உச்சம் தொட்டுள்ள சந்தர்ப்பத்தில் 1000ரூபா 'யானை பசிக்கு சோளப்பொரி' அளித்த கதையாகும். 

ஒரு நூற்றாண்டு மகிமை கொண்ட தோட்ட சேவையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் அண்மையில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் கூறிய கருத்துக்களைக் கொண்டு சில விடயங்களை கூறுகின்றோம். 

மூன்று வருட கூட்ட ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தோட்ட சேவையாளர் சங்கம் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் இராஜகிரியவில் அமைந்துள்ள முதலாளிமார் சம்மேளனத்தின் தலைமையகத்தில் மூன்று சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அவற்றில் முதலாளிமார் சம்மேளனம் நட்டத்தை காரணம் காட்டி 25சதவீத சம்பள உயர்வையே தர முடியும் 70சதவீதம் சாத்தியப்படாது என்று தெரிவித்ததால் மூன்று பேச்சுவார்த்தைகளும் முடிவின்றி முடிந்துள்ளன. 70சதவீத சம்பள அதிகரிப்பு தோட்ட சேவையாளர் சங்க உறுப்பினர்களிடம் பல கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு உயர்மட்ட குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சாதாரண அதிகரிப்பாகும் என சேவையாளர் சங்கம் தெரிவிக்கிறது. 

தோட்டத்தில் ஒரு Junior Clarek க்கு அடிப்படை சம்பளம் 28,000ரூபாவாகும். இன்று புதிதாக சேர்த்துக் கொள்ளப்படுபவர்களுக்கும் இந்த அடிப்படை சம்பளமே வழங்கப்படுகிறது. இதை வெளியில் சொல்லவே வெட்கப்படுகின்றனர் சங்கத்தினர். இந்த நிலையில் 25%அதிகரிப்பு எவ்வாறு சாத்தியமாகும்.  

தோட்டங்கள் ஏன் நட்டத்தில் இயங்குகின்றன என்பதற்கு சங்கத்தினர் கொடுக்கும் விளக்கம்,  

தோட்டங்களின் மீள் நடுகைத் திட்டம் இல்லை, பயிர் பராமரிப்பு செய்வதில்லை, இலாபத்தில் குறியாக செயற்படும் நிறுவனங்கள் இதர செலவுகளை குறைப்பதாக கூறி தோட்டங்களை காடாக்கி வருகின்றன. அத்தோடு அன்று பெருந்தோட்டங்களில் தேயிலை, இறப்பர் இரண்டையும் பயிரிட்டார்கள் ஏனென்றால் மழை காலங்களில் தேயிலையும் வெயில் காலங்களில் இறப்பர் பால் என்று தோட்டங்கள் நட்டமடையா கட்டமைப்பை கொண்டிருந்தன. ஆனால் இன்று இறப்பர் மரங்கள் பிடுங்கப்பட்ட விற்கப்பட்டு இறப்பர் தோட்டங்கள் அழிக்கப்பட்டு விட்டன குறிப்பிட்டு கூற கூடிய சில பிரதேசங்களிலேயே இறப்பர் மரங்கள் சிலவற்றுடன் இறப்பர் தோட்டங்கள் காட்சியளிக்கின்றன. மத்துகம மற்றும் தெரணியகல, யட்டியந்தோட்ட, கேகாலை போன்ற பகுதிகளிலே இன்றும் இந்த இறப்பர் தொட்டங்கள் காணப்படுகின்றன. 

வெள்ளைக்காரர்கள் பெருந்தோட்ட பயிர் செய்கையை ஆரம்பிக்கும் போதே தூர நோக்கோடு பல திட்டங்களை வருத்திருந்தனர். ஆனால் இன்று அவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு தூரநோக்கற்ற சிந்தனைகளின் செயற்பாடுகளால் பெருந்தோட்ட துறையில் இருந்து எமது நாட்டுக்கு கிடைக்கும் அன்னிய செலாவணி அற்றுப் போகும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.எமது நாட்டின் ஏற்றுமதி துறையில் மூலப் பொருட்களே அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுவதால் தூய இலாபம் எமது நாட்டுக்கு கிடைப்பது குறைவு, ஆனால் முடிவுப் பொருளான தேயிலையில் எமக்கு தூய இலாபம் கிடைப்பதால் இத் துறையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமதனைவருக்கும் உண்டு. 

இவ்வாறான செயற்பாடுகளே தோட்டங்கள் நட்டமடையக் காரணமாகும். அத்தோடு ஊடுபயிர்களான கருவா, ஏலம், சாதிக்காய், மிளகு போன்றவையும் இருந்தன.

ஆனால் இன்று அவை ஒன்றும் இல்லை. இவ்வாறான எதிர்கால நோக்கில்லா செயற்பாடுகளே நட்டத்துக்கு காரணமாகும்.

கே.வசந்தகுமார்  
(நாவலப்பிட்டி சுழற்சி நிருபர்)

Comments