பெருந்தோட்ட குடியிருப்புகளில் மின் ஒழுக்குகளால் தீ | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட குடியிருப்புகளில் மின் ஒழுக்குகளால் தீ

மலையக பெருந்தோட்ட குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு 25வருடங்கள் கடந்து விட்டன. இன்றைய நிலையில் 99சதவீத தோட்டங்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுவிட்டது. 

மக்கள் மிக ஆர்வத்தோடு மின்சாரத்தை பெற்றுக் கொண்டனர்.வசதிகள், பாதுகாப்பு இருக்கின்றதா என்பது பற்றி ஆராயவில்லை. 

இதேசமயம் இலங்கையில் அதிகமான மின் ஒழுக்குகள் மற்றும் தீவிபத்துகள் மலையக தோட்டப் பகுதிகளிலேயே இடம்பெற்று வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.இந்த மின் ஒழுக்கு தீவிபத்துக்களால் இன்றுவரை நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. 

தமது வீட்டிலும் மின் குமிழ் ஒளிரவேண்டும் ரிவி வேலைசெய்ய வேண்டும் பிள்ளைகள் படிக்க உதவியா இருக்கும் என எண்ணி ஆசையுடன் மின்சாரத்தை பெற்றுக் கொண்டனர். மின்சாரம் வந்த புதிதில் தோட்டங்கள் தோறும் வீடுகளுக்கு வெளியே மின் விளக்குகளை போட்டு திருவிழாகோலமாக இருந்தது.  சில வருடங்கள் மின்சாரம் கிடைத்த மகிழ்ச்சியில் வாழ்ந்த இந்த மக்கள் மின்சாரத்தின் மறுபக்கத்தை இப்போது அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர்.

குருவி சேர்ப்பது போல் சிறிது சிறிதாக சேகரித்து வாங்கிய வீட்டுத் தளபாடங்கள். ரிவி, பிரிஜ் போன்றவற்றை பயன்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இப்போது எப்போ தீ பிடிக்கும் எப்போ எல்லாம் எரிந்து சாம்பலாவோம் என்ற அச்சத்துடன் வாழ்கின்றனர். 

பாட புத்தகங்கள், திருமண, பிறப்பு, மரண சான்றிதழ்கள், கல்வி சான்றிதழ்கள் எல்லாம் திடீர்த் தீக்கு இரையாகி வருகின்றன. 

தொடர்வீடுகள், தனிவீடுகள் என்ற பாகுபாடு இன்றி மின் ஒழுக்கில் சிக்கி வீடுகள் தீப்பிடிக்கின்றன. 

சரி, ஏன் வீடுகள் தீப்பிடிக்கின்றன? பெருந்தோட்ட குடியிருப்புகளுக்கு வயரிங் செய்தவர்களில் பலர் முறையான பயிற்சி பெற்றவர்களாகவும் முன் அனுபவம் கொண்டவர்களாகவும் இருக்கவில்லை என்பது பிரதான காரணம். 

விலையும் தரமும் குறைந்த மின் உபகரணங்களே இவ்வீடுகளில் பொருத்தப்பட்டன. 

மின்சுற்று அமைக்கப்பட்டு நீண்ட நாட்களாக மின் இணைப்புக்காக பல வீடுகள் காத்துக் கிடந்தன.   

அரசியல் தரகர்கள் வீட்டு மின்சுற்றை அமைக்கவும் அதற்கான பொருட்களை வாங்கவும் அதிக வட்டியில் வங்கிகளில் கடன்களை குடியிருப்பாளர் பெயர்களில் பெற்றுக் கொண்டு அந்த பணத்தை தாம்வைத்துக் கொண்டனர். 

பின்னர் ஒப்பந்த அடிப்படையில் அரைகுறை திறன் கொண்டவர்களை அமர்த்தி வீட்டு மின் சுற்றுகளை அமைத்து கொடுத்தனர். இந்த மின் கட்டமைப்புக்கு மேலாக புது புது இணைப்புகளை குடியிருப்பாளர்களே தமது இஷ்டத்துக்கு அமைத்து கொள்கின்றனர். இது அதிக அழுத்தத்தை கொடுக்கிறது. 

மழைக் காலங்களில் வீட்டுக் கூரைகள் ஒழுகி மின் இணைப்புகளுக்குள் நீர் புகுந்து விடுகிறது. கடந்த புதன்கிழமை புஸ்ஸல்லாவ, கட்டுகித்துல, எல்பொட, பம்பேகமுவ பகுதியில் 52வீட்டுதிட்ட பகுதியில் ஏழுபேர்ச் காணியில் அமைக்கப்பட்ட வீடு மின் ஒழுக்கால் தீக்கிரையானது. 

தீயை அணைக்க நீர்கூட இல்லை இந்த பம்பேகம தோட்டத்தில்.நேர்த்தியற்ற மின் இணைப்பும்,தரமற்ற மின்சார பொருட்களால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு தீர்வு கிடைக்குமா? 

இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்களா?

ஆர் நவராஜா.  
(படங்கள்: தெல்தோட்டை தினகரன் நிருபர்)

Comments