அதிகரித்துச் செல்லும் வறுமை நிலை; புள்ளிவிபரத் திணைக்களம் கூறும் தகவல்கள் | தினகரன் வாரமஞ்சரி

அதிகரித்துச் செல்லும் வறுமை நிலை; புள்ளிவிபரத் திணைக்களம் கூறும் தகவல்கள்

இலங்கையின் தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள இற்றைப்படுத்தபட்ட உத்தியோகபூர்வத் தரவுகளின் படி கடந்த செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 69.8சதவீதம் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாண்டின் ஜனவரி மாதத்தில் இது 14.2சதவீதமாகப் பதிவாகியிருந்தது. இவ்வாண்டின் ஆரம்பத்தில் காணப்பட்ட பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் இது நான்கு மடங்கு அதிகரிப்பாகும். அதே வேளை உணவுப்பொருள்களின் விலை அதிகரிப்பை அளவிடும் உணவுப் பணவீக்கம் இதே காலப்பகுதியில் 25சதவீதத்தில் இருந்து 94.9சதவீதமாக அதிகரித்திருந்தது. இது மூன்று மடங்கு அதிகரிப்பாகும்.  

நாட்டில் குறுகிய காலத்துக்குள் பணவீக்கமானது சடுதியாக அதிகரித்துச் சென்றுள்ள அதே வேளை அதன் பொருளாதார வளர்ச்சி சடுதியான வீழ்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது. 2022இன் ஜூலை, ஓகஸ்ட், செப்டெம்பர் ஆகிய மாதங்களை உள்ளடக்கிய மூன்றாம் காலாண்டில் இலங்கைப் பொருளாதாரம் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 8.4சதவீத எதிர்க்கணிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதாவது பொருளாதாரம் 8.4சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என்பது இதன் கருத்தாகும். இதனால் மக்களின் வருமானங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. நிரந்தர வருமானங்கள் உழைப்போரின் வருமானங்கள் மாறாத போதும் நாட்டின் தலைக்குரிய வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்களின் வருமானங்கள் வீழ்ச்சியடையும் அதேவேளை விலைகள் பாரியளவில் அதிகரிப்பதால் மக்களின் கொள்வனவு செய்யும் ஆற்றல் மிக மோசமாகப்பாதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக 2022ஜனவரியில் 14.2ரூபா கொடுத்து வாங்கிய ஒரு பொருளுக்கு செப்டெம்பரில் 69.8ரூபா கொடுத்து வாங்கவேண்டியிருக்கும். அதனால் கையில் உள்ள சிறியளவு வருமானத்தைக் கொண்டு முன்னரைப்போல தேவையானளவு பொருள்களைக் கொள்வனவு செய்ய முடியாது. அதுவே வறுமைக் கோடு என்ற எண்ணக்கருவினாலும் விளக்கப்படுகிறது. இலங்கையில் வாழும் ஒரு நபர் குறைந்த பட்ச உணவுத்தேவையைப் பூர்த்தி செய்து வாழ ஆகக் குறைந்தது மாதம் ஒன்றிற்கு 7395ரூபா தேவையென 2020இல் மதிப்பிடப்பட்டிருந்தது. பெறக்கூடியதாக உள்ள இற்றைப்படுத்தபட்ட தரவுகளின் படி கடந்த ஜூலை மாதத்தில் இலங்கையில் ஒருவர் உயிர்வாழ 13138ரூபா தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி வருமானங்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதோடு உயிர்வாழ அவசியமான குறைந்த பட்ச பணத்தின் அளவு அதிகரித்துள்ளது. ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இதனளவு மேலும் அதிகரித்திருக்கும். அதன் காரணமாக நாட்டில் வறுமை நிலை தீவிரமாக அதிகரிக்கும்.  

உலக வங்கி இலங்கை தொடர்பில் ஒக்டோபர் மாத வறுமை மற்றும் ஒப்புரவு பற்றிய செய்திக்குறிப்பில் தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக இலங்கையின் வறுமை நிலை 2022இல் 25.6சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்வு கூறியுள்ளது. இதனால் 2021-2022காலப்பகுதியில் இலங்கையர்களில் இருபத்தைந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வறுமையில் வீழும் அதேவேளை இது இலங்கையை 2009ஆண்டில் காணப்பட்ட வறுமை மட்டத்திற்கு மீண்டும் கொண்டு செல்லும் எனவும் உலக வங்கி கூறுகிறது. இலங்கை மக்களில் சுமார் 40சதவீதத்தினர் போதியளவு உணவைப் பெற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என சர்வதேச கணிப்பீடுகள் கூறுகின்றன. இலங்கையின் சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார் மத்தியில் போசாக்கின்மை அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் கூறியதை பிழையென அரசு கூறியது. இதே போல வறுமை பற்றிய தரவுகளையும் அரசு மறுக்கக் கூடும். ஆனால் தொகை மதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் உண்மையை உரத்துக் கூறுகின்றன. தமது சொந்தத் தகவல்களை எவ்வாறு மறுக்க முடியும்?  

கலாநிதி
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments