உலகத் தமிழாராய்ச்சி மாநாடு எங்கே, எப்போது? | தினகரன் வாரமஞ்சரி

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு எங்கே, எப்போது?

(செப்டெம்பர் 18இதழ் தொடர்) இலங்கையில் உலக தமிழாராய்ச்சி மாநாட்டு இலங்கை கிளையொன்று 80களில் இயங்கிவந்துள்ளது. அக்காலத்திலேயே இதில் பிரிவுகளும் பிளவுகளும் காணப்பட்டன. குரும்பசிட்டி கனகரட்ணத்தின் பண்பாட்டு அமைப்பும் சில காலம் ஒரு கிளையாக இயங்கியுள்ளது. இறுதியாக பேராசிரியர் பத்மநாதன் மற்றும் குமரன் பதிப்பு இல்லத்தின் உரிமையாளர்  க. குமரன் செயலாளராக இருந்துள்ளனர். 90களின் பின் இவ்வமைப்பு காணாமற் போனது. 2000மிலேனிய காலத்திலும் பின்னர் 2010மற்றும் 2020வரையிலும் எவ்வித அமைப்பும் இங்கே கிளையாக இயங்கியதில்லை.

இக்கட்டுரையாளரான நான் 2013ஆம் ஆண்டு உலக தமிழியல் மாநாடு ( லண்டன்), செம்மொழி மாநாடு 2009 (கோவை), 9வது  உலக தமிழாராச்சி மாநாடு 2015 (கோலாலம்பூர் மலேசியா) ஆகியவற்றில் கலந்து கொண்ட போதும், சென்னை தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பிராந்திய மாநாடுகளான மூன்று மாநாடுகளில்  கலந்து கொண்ட போதும், இலங்கையில் எவ்வித கிளை அமைப்பும் இயங்கி வந்ததாக நான் அறியவில்லை. 2019இல் 10வது உலக தமிழாராய்ச்சி நடைபெற்ற போதும்  இலங்கை கிளை இயக்கத்தில் இல்லை. இருவர் அல்லது மூவர் தனிப்பட்ட முறையிலேயே மாநாட்டில் கலந்து கொண்டனர்.

2015இல்  ஒன்பதாவது தமிழாராச்சி மாநாடு மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்ற போது அதில் 19பேர் இலங்கை சார்பாகக் கலந்து கொண்டனர். இவர்களில் பலர் ஒன்றிணைந்து இலங்கை குழு என்ற ஓர் சந்திப்பினையும் நடாத்தி ஒரு புகைப்படமும் எடுத்தனர்.

கலந்து கொண்டவர்களில் சிலர் புலம்பெயர்ந்த நாடுகளைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்களாவர். இவை எல்லாம் நடந்த போது இலங்கைக் கிளை எங்கே இருந்தது? இலங்கைக் கிளை ஆற்றிய விடயங்கள் யாவை?  ஏன் இலங்கைக் கிளை இயங்கவில்லை? இவை பற்றி நாம் நிறையவே கலந்துரையாட வேண்டும். விமர்சனத்துக்கும் உள்ளாக்க வேண்டும்.

இந்த நிலையில் தான் சர்ஜா மற்றும் சிங்கப்பூரில் 11வது மாநாடு என்ற அறிவித்தல் வந்தது. வந்தவுடன் இலங்கை கிளையொன்றும் திடீரென முளைத்துள்ளது.

30வருடத்திற்கு முன் இருந்த சிலரும் இலங்கை பல்கலைகழகங்களில் தமிழ்த்துறைச் சார்ந்தவர்களினதும் பெயர்களைக் கொண்ட கடிதத் தலைப்பும் (letter head) தயாரிக்கப்பட்டு உலகத்திற்கு ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளனர்! 11வது மாநாடு பற்றிய இவர்களது அபிப்பிராயம் பக்கசார்பாகவும் காணப்படுகின்றது.

இக்கிளையமைப்பு இதுவரை உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளில் கலந்து கொண்டவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டதாக இவர்களது ஒற்றுமையை வலியுறுத்தும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளில் கலந்து கொண்ட எனக்கு இப் புதிய கிளை  பற்றி எவ்வித அறிவித்தலும் அனுப்பப்படவில்லை.

எனவே மேல் விவரங்களுக்காக கடிதத் தலைப்பில் காணப்பட்ட பெயர்களுடைய சிலரை தொடர்பு கொண்டு வினவிய போது இவ்வாறான கூட்டம் ஒன்று நடைபெறவில்லை என்றும் ஆனால் தமது பெயர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினர். ஆனால் இவ்வாறானதொரு அமைப்பு அல்லது கிளையானது அவசியமானதே!.

இக்கடிதத் தலைப்பில் தமிழ்த்துறை சார்ந்தோர் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் தமிழ்த் துறைச் சாரா தமிழ் ஆய்வாளர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ் என்பது எல்லோருக்கும் பொதுவானதொன்றாகும்.

தான்தோன்றித்தனமாக யாரும் உரிமை கோர முடியாது. இக்கடிதத் தலைப்பில் இறந்தவர்களது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதோடு,  இலங்கை பிரஜைகளாக இல்லாதவர்களது பெயர்களும் காணப்படுகின்றன. இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில் இதுவரை உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஒரு கட்டுரை கூட  சமர்ப்பிக்காதவர்களின் பெயர்களும் பட்டியலில் காணப்படுவதாகும்.

11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சார்ஜாவிலா? சிங்கப்பூரிலா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!. இந்நிலையில் 12வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இந்தியா தமிழ்நாடு சென்னையில் நடைபெறும் என மற்றொரு விளம்பரம் தற்பொழுது தமிழ் நாட்டு செய்திகளில் வெளியாகியுள்ளது. எனவே, இவற்றைக் கட்டுப்படுத்த சர்வதேச ரீதியில் ஒரு சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு  சகலரையும் இணைப்பதாக அமைக்கப்பட வேண்டும்.

உலகில்  பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் படைப்பாளர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும்.

ஏனெனில் தமிழாய்வை ஒருமுகப்படுத்தவும் அதன் முலம் மொழியை வளப்படுத்தவும் தமிழறிஞர்கள் கூடி நடத்தும்  உலக மாநாடே தமிழாய்வு மாநாடுகளாகும்.

'11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தொடர்பாக சில ஐரோப்பிய நாடுகளுக்கும், மத்தியகிழக்கு நாடுகளுக்கும் அறிவித்தல்களை அனுப்பி உள்ளோம்.

நானும் இது குறித்து சில நாடுகளுக்கு செல்ல இருக்கிறேன். ஒவ்வொரு நாட்டில் இருந்தும் தமிழறிஞர்கள், மொழி வல்லுனர்கள், தமிழ் அமைப்புகள் மற்றும் சங்களில் இருந்து எவ்வளவு பேராளர்களை அழைப்பது போன்ற விடயங்கள் குறித்து செயற்குழுவில் விவாதித்து IATR தலைவர் டான்ஸ்ரீ மாரிமுத்து அறிவிப்பார்' என்று ஒரு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, நான்தான் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர்  என்று, தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் மு.பொன்னவைக்கோ அறிவித்திருப்பதோடு அந்த மன்றத்தின் 11-ஆவது மாநாட்டை நடத்தும் பொறுப்பு தன்னிடமே உள்ளது’ என்றும் தெரிவித்துள்ளார். என்ன புதுசு புதுசாக குழப்பங்கள் என்கிறீர்களா? என்னதான் ஆகப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்ப்போமே!

ஆர். மகேஸ்வரன்,
நூலகர் - பேராதனை பல்கலைக்கழகம்

Comments