தாயகத்தில் முதலீடு செய்வதில் புலம்பெயர் இலங்கையர் ஆர்வம் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

தாயகத்தில் முதலீடு செய்வதில் புலம்பெயர் இலங்கையர் ஆர்வம்

சுவிட்சர்லாந்தை தலைமையகமாகக் கொண்டுள்ள பைனஸ் நிறுவனத்தினால் பொருளாதார நெருக்கடித் தீர்வுக்கு உதவும் வகையில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி ஆளணி பிரதானியுமான சாகல ரட்நாயக்காவிடம் நிதியுதவி கையளிக்கப்படுகையில்...

இலங்கையானது அந்நிய செலாவணி பற்றாக்குறையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு தற்போது முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இதன் அழுத்தங்களையும் தாக்கங்களையும் நாடும் மக்களும் உணர்ந்த வண்ணமுள்ளனர். குறிப்பாக அந்நியச் செலாவணியை அடிப்படையாகக் கொண்டுள்ள பொருட்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்த வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதோடு அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட எல்லா பொருட்களது விலைகளும் அதிகரித்துள்ளன.  

இந்நிலையில் இப்பொருளாதார நெருக்கடி மக்களுக்கு சுமையாக அமைவதைத் தவிர்க்கும் வகையிலான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு இந்நெருக்கடியில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கவும் கட்டியெழுப்பவும் தேவையான நடவடிக்கைகளும் விரிவான அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டும் உள்ளன.  

இவ்வாறான சூழலில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 'பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிக்க முன்வருமாறு நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் ஏற்கனவே அழைப்பு விடுத்திருக்கின்றார். அத்தோடு புலம்பெயர் இலங்கையருக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். எலிசபெத் மகாராணியின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்ளவென பிரித்தானியாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி, புலம்பெயர் இலங்கையருடன் விசேட சந்திப்பொன்றை நடாத்தியதோடு இலங்கையில் முதலிட முன்வருமாறு அங்கும் கேட்டுக்கொண்டார். புலம்பெயர் இலங்கையருக்கான அலுவலகத்தை ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

இந்நாட்டின் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட குடிமக்கள் புலம் பெயர்ந்தவர்களாக ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் உள்ளனர். அவர்களில் பலர் நாட்டில் நிலவிய மூன்று தசாப்த கால யுத்த காலத்தில் புலம்பெயர்ந்தவர்களாவர். என்றாலும் புலம்பெயர்ந்துள்ள இலங்கையரில் குறிப்பிடத்தக்களவிலானோர் முதலீட்டாளர்களாவும், வர்த்தகர்களாகவும், தொழில் வல்லுனர்களாகவும், புத்திஜீவிகளாகவும்  உள்ளனர்.

இப்பின்புலத்தில் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து தாய்த்திருநாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கு தமது பங்களிப்பையும் ஆதரவையும் நல்கவென புலம்பெயர்ந்துள்ள இலங்கையரில் பலர் விருப்பம் கொண்டுள்ளனர். இதன் நிமித்தம் தம் முதலீடுகளை மேற்கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு ஜனாதிபதியின் அழைப்பை புலம்பெயர்ந்த இலங்கையரில் பெரும்பாலானவர்கள் சாதகமாக நோக்கியுள்ளனர். இந்தப் பின்னணியில் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர் தாயகத்திற்கு வருகைதரவும் ஆரம்பித்துள்ளனர்.  

அந்த வகையில் சுவிட்சர்லாந்து நாட்டைத் தலைமையகமாகக் கொண்டு உலகில் 05நாடுகளில் பணிகளை முன்னெடுக்கும் பைனஸ் தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகள் தற்போது தாயகத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்நிறுவனத்தின் சார்பில் மூன்று மில்லியன் ரூபா பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள தாயகத்தைக் கட்டியெழுப்ப உதவும் வகையில் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி ஆளணி பிரதானியுமான சாகல ரட்நாயக்காவிடம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்நிதி உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வாழைச்சேனை மற்றும் எம்பிலிப்பிட்டிய கடதாசி தொழிற்சாலைகளின் முன்னாள் தகுதிகாண் அதிகாரி மங்கள செனரத்தும் கலந்து கொண்டிருந்தார்.  

இதேவேளை இந்நிறுவனத்தின் சார்பில் இவ்வார முற்பகுதியில் ஜேர்மன் நாட்டில் இருந்து தாயகத்திற்கு வருகை தந்துள்ள புலம்பெயர் முதலீட்டாளர்களில் ஒருவரான மாட்டின் ஜெயராஜ் அடங்கலான குழுவினரும் ஜனாதிபதி செயலக உயரதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளதோடு இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு தம்மாலான பங்களிப்புகளை முதலீடுகளாக மேற்கொள்ளத் தயாராக இருப்பதையும் உறுதி செய்துள்ளனர்.  

ஜனாதிபதி செயலக உயரதிகாரிகளுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடாத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் புலம்பெயர் முதலீட்டாளர் மாட்டின் ஜெயராஜ், 'தற்போதைய சூழலில் சந்திப்புகளும் கலந்துரையாடல்களும் ஆக்கபூர்வமாகவும் நம்பிக்கை தரக்கூடிய வகையிலும் அமைந்துள்ளன. அதனால் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமமான நிலையில் பயணித்துக் கொண்டிருக்கும் எமது தாய்த்திருநாட்டில் ஜனாதிபதியின் அழைப்பினை அடிப்படையாகக் கொண்டு எமது பைனஸ் நிறுவனத்தின் ஊடாக நல்ல பல திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம். எனவே புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என அனைவரும் அச்சம் களைந்து இச்சந்தர்ப்பத்தில் தாய்த்திருநாட்டில் முதலீடுகளை மேற்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும்' என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.  

இச்செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பைனஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் பி. ஜோன் வசந்தபாலன், 'எமது நிறுவனத்தின் தலைவரும் நிறைவேற்று அதிகாரியுமான சிவபாதம் விக்னேஷ்வரனின் எண்ணக்கருவுக்கு அமைய இவ்வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் அதன் ஊடாக தாய்த்திருநாட்டைத் தன்னிறைவு அடையச் செய்வதற்கும் உதவி ஒத்துழைப்புகளை நல்கவும் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். இந்நிறுவனத்தின் மற்றொரு பணிப்பாளரான என்.எம்.எம். சபீஹ்ஹும் இச்செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார்.  

இதேவேளை சுவிட்சர்லாந்து நாட்டை தலைமையகமாகக் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் தலைவரும் நிறைவேற்று அதிகாரியுமான சிவபாதம் விக்னேஷ்வரன் விஷேட அறிக்கையொன்றை விடுத்து பொருளாதார நெருக்கடியில் இருந்து தாய்நாட்டைக் கட்டியெழுப்ப முன்வருமாறு புலம்பெயர் இலங்கையருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.  

அவ்வேண்டுகோளில், 'தற்பொழுது எமது புலம்பெயர் உறவுகளின் ஒத்துழைப்புடன் தாயக உறவுகளுக்கு உதவும் முகமாக பைனஸ் என்ற நிறுவனத்தினை ஆரம்பித்து தலைமை தாங்கி வருகின்றேன். இந்நிறுவனத்தினூடாக இலங்கையில் வாழும் தமிழ் பேசும் வடக்கு, கிழக்கு மக்களின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பும் முகமாக சிறு கைதொழில் முயற்சியாளர்களுக்கு நிதிமூலங்களை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துவது எமது நிறுவனத்தின் பிரதான நோக்கமாகும். 

தற்பொழுது தாய்த்திருநாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான சூழலில் எமது புலம்பெயர் உறவுகளின் ஒத்துழைப்பானது மிகவும் அத்தியாவசியமானதாகும். எனவே இந்த இக்கட்டான நிலையில் புலம்பெயர் உறவுகள் எமது பைனஸ் நிறுவனத்தினூடாக தங்கள் முதலீடுகளை தாயக உறவுகளுக்கு வழங்க முன்வரவேண்டும்' எனக் கேட்டுள்ளார்.  

புலம்பெயர் முதலீட்டாளர் மார்டின் ஜெயராஜ் ஜேர்மனியில் இருந்து தாயகத்திற்கு வருகை தந்துள்ள நிலையிலும் பைனஸ் நிறுவனத் தலைவர் சிவபாதம் விக்னேஷ்வரன் சுவிட்சர்லாந்தில் இருந்தபடியும், பொருளாதார நெருக்கடியில் இருந்து தாயகத்தை மீட்டெடுக்க முதலீடுகளைச் செய்ய முன்வருமாறு புலம்பெயர் இலங்கையருக்கு விடுத்திருக்கும் அழைப்பும் வேண்டுகோளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவ்ழைப்பானது புலம்பெயர்ந்துள்ள இலங்கையர் மத்தியில் புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் உருவாக்க வழிவகுப்பதோடு அவர்கள் மத்தியில் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.  

தற்போதைய சூழலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் விவசாயம், கடற்றொழில் மற்றும் சுயதொழில் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து பைனஸ் நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது. குறிப்பாக விவசாயத் துறையில் முதலீடுகளை மேற்கொள்வதன் ஊடாக நாட்டின் விவசாயப் புரட்சிக்கு பங்களிக்க எதிர்பார்ப்பதாக மார்டின் ஜெயராஜ் தெரிவித்திருக்கிறார்.  

குறிப்பாக சோளம் பயிர்ச்செய்கையில் முதலீடு செய்து, அதன் ஊடாக கோழித் தீவனம், மாட்டுத் தீவனம் மற்றும் திரிபோஷா உள்ளிட்டவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து தன்னிறைவு அடைய முடியும். இதன் ஊடாக கால்நடை தீவன இறக்குமதிக்காக வருடாந்தம் செலவிடப்படும் பெருந்தொகை அந்நியச் செலாணியை மீதப்படுத்திக் கொள்ளலாம். இதேவேளை  மரவள்ளி செய்கையில் முதலீடுகளை ஆரம்பித்துள்ள போதிலும் அதனை விஸ்தரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், மரவள்ளி கிழங்கை மாவாக்கி ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் அங்கு ஆபிரிக்கர்கள் மத்தியில் மரவள்ளி கிழங்கு மாவுக்கு நல்ல கேள்வி உள்ளது. அதாவது இலங்கையருக்கு அரிசி எவ்வாறு பிரதான உணவாக உள்ளதோ அதேபோன்று ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ள ஆபிரிக்கர்களின் பிரதான உணவாக மரவள்ளி கிழங்கு மா விளங்குகிறது. இதனை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலையொன்றை பத்து கோடி ரூபா செலவில் வவுனியாவில் அமைக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன' எனவும் கூறினார்.  

இவை இவ்வாறிருக்க, இலங்கைக்கு தேவையான காகிதாதிகளை உற்பத்தி செய்து கொள்வதற்கு தேவையான மூலப்பொருட்களைப் போதியளவில் உள்நாட்டில் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள் காணப்படுகின்றன. அதனால் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்தும் பைனஸ் நிறுவனப் பிரதிநிதிகள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இப்பின்னணியில் புலம்பெயர் முதலீட்டாளர் மார்டின் ஜெயராஜ் உள்ளிட்ட புலம்பெயர் முதலீட்டாளர்கள் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.  

அதேநேரம் ஜனாதிபதியின் அழைப்பினை அடிப்படையாகக் கொண்டு மேலும் பல புலம்பெயர் இலங்கை முதலீட்டாளர்கள் எதிர்வரும் நாட்களில் தாயகத்திற்கு வருகை தரவிருப்பதாக நம்பமாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

ஆகவே பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்க முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளின் ஒரங்கமாக புலம்பெயர் முதலீட்டாளர்கள் தாயகம் திரும்புவதும் முதலீடுகளில் ஆர்வம் காட்டுவதும் பெரிதும் வரவேற்கத்தக்கவையாகும். இது நாட்டின் பொருளாதார மீட்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் வித்திடும். பொருளாதார நெருக்கடிச் சூழலில் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிறுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அழைப்புக்கு கிடைத்துள்ள பிரதிபலன்களே இவை.

மர்லின் மரிக்கார்

Comments