வீட்டிலே ஒரு காய்கறித் தோட்டம்; வீட்டுத் தோட்டம் அமைப்பதால் பல நன்மைகளைப் பெறலாம் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

வீட்டிலே ஒரு காய்கறித் தோட்டம்; வீட்டுத் தோட்டம் அமைப்பதால் பல நன்மைகளைப் பெறலாம்

எமக்குத் தேவையான உணவுப் பொருட்கள், மருத்துவ மூலிகைகள், விலங்குணவுகள், அரிமரங்கள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சிறியதொரு உற்பத்தி அலகாக வீட்டுத்தோட்டங்களை நாம் கருத முடியும். பொதுவாக வீட்டுத் தோட்டம் என்பது வீட்டைச் சூழவோ அல்லது வீட்டிற்கு மிக அண்மையிலோ காணப்படும் ஓர் உற்பத்தி அலகாகும். வீட்டுத்தோட்டம் என்பது பல பயிர்களையும், விலங்குகளையும் உற்பத்தி செய்யும் சிறியதொரு அலகாகும். எனினும் எமக்குக் கிடைக்கக் கூடிய வளங்களைப் பொறுத்து, குறிப்பாக நிலப் பரப்பிற்கேற்ப நாம் நாளாந்தம் பெற்றுக் கொள்ளும் உணவுப் பொருட்களினதும், வேறு பொருட்களினதும் அளவுகள் வேறுபடலாம். எமக்கு கிடைக்கக் கூடியதாக உள்ள வளங்களிற்கேற்ப நாம் வீட்டுத்தோட்டங்களை அமைத்துக் கொள்ள முடியும். நிலமிருப்பின் நிலத்தில் நடலாம். இல்லாவிடில் பைகளில், சிறிய சாடிகளில் வளர்க்கலாம் அல்லது நீரில் பயிரிடலாம். நவீன விவசாய அறிவுடன்

நிலமற்றவர்கள், மாடி வீடுகளில் வாழ்பவர்கள் என ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கமைய சிறியதொரு வீட்டுத்தோட்டத்தை அமைத்து பயன் பெற்றுக் கொள்ள முடியும். இக்கட்டுரைத் தொடரில் இது பற்றிய பல

விபரங்களை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

 

வீட்டுத்தோட்டத்தின் நன்மைகள்

நாட்டின் இன்றைய நிலைமையில் உணவிற்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதன் காரணமாக மக்களது போசாக்கு நிலைமை மிகவும் மோசமான நிலைமையை அடைந்துள்ளது. இந்நாட்டில் 79வீதமான குடும்பங்கள்

போசணை எதனையும் கவனத்திற் கொள்ளாது, குறைந்த விலையிலுள்ள உணவுகளையே தற்போது நுகர்கின்றனர். 37சத வீதமான குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. 40வீதமான குடும்பங்கள்

தங்களது உணவு வேளைகளை குறைத்துள்ளனர். இவற்றின் விளைவாக நாட்டின் போசாக்கு நிலைமை மிகவும் மோசமான நிலைமையை அடைந்துள்ளது. ஆனால் வீட்டுத் தோட்டங்களில் எம்மால் இயலுமானவற்றை உற்பத்தி செய்து கொள்ள

முடியுமாயின் இந்த நிலைமைகளை ஓரளவிற்கேனும் சீர் செய்து கொள்ள முடியும். ஒரு வீட்டுத்தோட்டத்தை நிலைபேறாகப் பராமரிக்கும் போது நாளாந்தம் தேவைப்படும் உணவில் ஒரு பகுதியையேனும் பெற்றுக் கொள்ள முடியும். இதனை விட இன்னொரு முக்கியமான விடயம் வீட்டுத்தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் கீரைகள், பழங்கள் போன்றவற்றை நுகர்வதன் மூலம் நாளாந்தம் நமக்கு சிபாரிசு செய்யப்பட்ட விட்டமின்கள், கனிபொருட்கள் போன்றவற்றை ஓரளவிற்கேனும் நாம் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

வீட்டுத்தோட்டங்களில் உணவுப் பயிர்களிற்கு மேலதிகமாக இட வசதியைப் பொறுத்து கோழிகள், கால்நடைகள் போன்றவற்றை வளர்க்கும் போது முக்கிய போசாக்கான புரதத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள

முடியும். உதாரணமாக பத்து நாட்டுக் கோழிகளையேனும் வளர்க்கும் போது நாளாந்தம் ஐந்து முட்டைகளையேனும் ஒரு குடும்பம் பெற்றுக் கொள்ள முடியும்.

எப்போதும் பசுமையான மரக்கறிகளையும், ஏனைய உணவுகளையும் பெறலாம்

கடைகளிலோ அல்லது சந்தைகளிலோ வாங்கும் போது பெரும்பாலும் உணவுப் பொருட்களை அறுவடை செய்து பல நாட்கள் கடந்திருக்கும். ஆனால் எமது வீட்டுத்தோட்டங்களில் இவற்றை இயலுமான வரை உற்பத்தி செய்து கொள்ளும் போது எப்போதும் நாம் பசுமையான மரக்கறிகளையும், பழங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.  வீட்டுத்தோட்டங்களை உயிருள்ள உணவுக் களஞ்சியங்கள் என்று கூட நாம் அழைக்க முடியும்.

நஞ்சற்ற உணவுகள்

வர்த்தக நோக்கத்திற்காக செய்கைபண்ணப்படும் தோட்டங்களில் பீடை நாசினிகள் போன்ற விவசாய இரசாயனங்களைப் பிழையாகப் பயன்படுத்துவதன் காரணமாக ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ள முடியும். ஏனெனில் விவசாய இரசாயனங்களை நாம் பயன்படுத்துவதில்லை.

* மூலிகைத் தாவரங்களும், வாசனைத் திரவியங்களும் ஒரு வீட்டுத் தோட்டத்தினைப் பராமரிக்கும் போது அதில் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்களையும் இலகுவாகப் பயிரிட்டுக் கொள்ள முடியும். இதனால் சில நோய்களுக்கு எமது வீடுகளிலேயே தேவையான மருத்து மூலிகைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இஞ்சி, மஞ்சள், ஏலம் போன்றவற்றைப் பயிரிட்டுக்கொள்வதன் மூலம் எமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

* தட்டுப்பாடான காலங்களில் உணவுப் பொருட்களிற்கு அதிகளவில் செலவிட வேண்டியதில்லை மரக்கறிகள், பழங்கள் போன்றன சில பருவகாலங்களில் குறைவாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன.

இதனால் அவற்றின் விலை ஆகாயத்தை எட்டி விடும். ஆனால் ஒரு வீட்டுத்தோட்டத்தை தொடர்ச்சியாக நிலைபேறாகப் பராமரிக்கும் போது இவ்வாறு அதிகளவில் செலவிட வேண்டிய தேவை ஏற்படாது. எனவே செலவையும் மீதப்படுத்திக் கொள்ள முடியும். உதாரணமான பச்சை மிளகாய், தக்காளி போன்றவற்றை குறிப்பிட முடியும்.

* உயிரியல் பல்லினத்தன்மை வீட்டுத்தோட்டங்களில் எப்போதும் நாம் பல பயிர்களை செய்கை பண்ணும் போது ஒரு அலகு

நிலப்பரப்பில் அதிக எண்ணிக்கையான தாவரங்கள் காணப்படும். இது எமது தோட்டங்களில் உயிரியற் பல்லினத் தன்மையையும் அதிகரிக்கும். பொதுவாக வீட்டுத்தோட்டங்களில் நாம் பாரம்பரிய இனங்களை நடுவதால் பல்லினத்தன்மை மிக அதிகளவிற் காணப்படும். உதாரணமாக கத்தரி, தக்காளி போன்ற பயிர்களில்

எத்தனை வகையான உள்நாட்டு வர்க்கங்கள் உள்ளன. வீட்டுத்தோட்டங்களில் மரக்கறிகள், பழங்கள், வாசனைப் பயிர்கள் போன்றவற்றிற்கு மேலதிகமாக உள்நாட்டு கிழங்கு வகைகள், கீரைப் பயிர்கள் போன்றவற்றை நட்டுப் பராமரிப்பதால் பல்லினத் தன்மையான தானாவே இத்தோட்டங்களில் மிக அதிகளவிற் காணப்படும். இதனால் உணவுப் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

 நுண் சுற்றாடால்

எமது வீடுகளுக்கருகே தோட்டங்களைப் பராமரிக்கும் போது எம்மைச் சுற்றியுள்ள நுண் சூழல் நன்கு விருத்தியடையும். எப்போதும் குளிர்ச்சியான தன்மையை நாம் உணரக் கூடியதாக இருப்பதோடு, மனதிற்கும் இதமானதாக அமையும். வீட்டைச் சுற்றி மரஞ் செடிகள் போன்ற செறிவாகக் காணப்படுவதன் காரணமாக

பல்வேறு வகையான பறவைகள் இங்கு தமது வாழ்விடங்களை அமைத்துக் கொள்ள முயற்சிக்கும். இது நமது பறவைகளின் பல்லினத்தன்மையையும் விருத்தி செய்ய உதவும். பீடை நாசினியாகவும் இவை செயல்படும்.

மீள் சுழற்சி செய்யப்படும் கழிவுகள்

 வீடுகளிலும், அதன் சுற்றாடலிலும் சேரும் சிதைவடையக் கூடிய அதாவது உக்கக் கூடிய கழிவுகளை கூட்டெருவாக்கி அதனைப் பயன்படுத்தக் கூடியதாயிருப்பதால் கழிவுகளை மீள்சுழற்சி செய்து கொள்ள முடியும்.

 வளமாகும் மண்

தொடர்ச்சியாக ஒரு வீட்டுத்தோட்டத்தை நிலைபேறாக நாம் பராமரிக்கும் போது, அதன் மண் வளம் நன்கு விருத்தியடையும். பொருத்தமான மண் காப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தி வீட்டுத்தோட்டங்களைப் பயிரிடும்

போது மண்ணரிப்பில் இருந்து மண்ணைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.

 மன அமைதியும், உடற் பயிற்சியும்

நாளாந்தம் வீட்டுத்தோட்டங்களைப் பராமரிக்கும் பணிகளில் ஈடுபடும் போது மனதிற்கு அமைதி கிடைப்பதோடு, வேலை செய்வதன் காரணமாக உடலிற்கு பயிற்சியும் கிடைக்கும்.

இன்றை உலகில் நாம் நாளாந்தம் முகம் கொடுக்கும் மன அழுத்தங்களை தவிர்த்துக் கொள்ள முடியும். இதனால் எம்மை அறியாமலே

நாம் உளரீதியாக நல்ல பலாபலன்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இது எமது பல நோய்களை இயற்கையாகவே கட்டுப்படுத்திக் கொள்ள உதவும்.

* பரிசோதனைக் களமாகும் வீட்டுத்தோட்டங்கள்

வர்த்தகப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்கு ஆர்வமுள்ள ஆனால் இதில் போதியளவான அறிவும், அனுபவமும் இல்லாதவர்கள் வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கையில் முதலில் ஈடுபடுவதன் மூலம் அனுபவத்தையும்,

அறிவையும் பெற்றுக் கொள்ள உதவும். இதன் மூலம் அவர்கள் வர்த்தகப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் போது இந்த அறிவும், அனுபவமும் உதவும். இதனைத் தவிர தாம் பல்வேறு ஊடகங்களில், தனிப்பட்ட முறையிலும்

அறிந்து கொள்ளும் நவீன அல்லது பாரம்பரிய பயிர்ச்செய்கை முறைகளை எவ்விதமான பொருளாதார இழப்பும் இல்லாது இந்த வீட்டுத்தோட்டங்களில் பரிசோதித்துப் பார்த்துக் கொள்ள முடியும்.

சிறுவர்கள் வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் போது சுற்றாடல் பற்றிய புரிந்துணர்வு

ஏற்படுவதோடு, பல புதிய விடயங்களையும் அவர்கள் அறிந்து கொள்ள முடியும்.

பொருளாதார நன்மைகள்

மேற்குறிப்பிட்ட அனைத்து வகையான நன்மைகளையும் விட மிகப் பிரதானமாக எமக்கு நாளாந்தம் ஏற்படும் பொருளாதாரச் சுமையை ஓரளவிற்கேனும் குறைத்துக் கொள்ள முடியும். 

மேலதிகமாக உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை ஏனையோரிற்கு விற்பனை செய்வதன் மூலம் சிறிதளவு வருமானத்தையேனும் பெற்றுக் கொள்ள முடியும்.

இது எமது பொருளாதார அபிவிருத்திக்கும் பங்களிப்புச் செய்யும். மேலதிகமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அயலவர்களிற்கு வழங்கும் போது அவர்களிடையே ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டு எமது வாழ்வும் அர்த்தமுள்ளதாக விளங்கும். இதற்கு நாம் பணப் பெறுமதியையும் குறிப்பிட முடியாது.

வளங்களின் உச்சப் பயன்பாடு

நல்லதொரு வீட்டுத்தோட்டத்தைப் பராமரிப்பதன் மூலம் எமக்குக் கிடைக்கும் வளங்களை உச்ச அளவிற் பயன்படுத்திக் கொள்ள முடியும். உதாரணமாக சூரிய ஒளி, காணிகள், சுற்று மதில்கள், வேலிகள், மழை

நீர், வீட்டு மாடிகள் போன்ற எல்லா வளங்களையும் மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தி எமது வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள முடியும்.இந்தக் கட்டுரைத் தொடரில் அடுத்தடுத்த வாரங்களில் வீட்டுத்தோட்டங்களை எவ்வாறு அமைப்பது, எவ்வாறு பராமரிப்பது, காணி நிலமற்றவர்கள் எவ்வாறு வீட்டுத்தோட்டங்களை அமைத்துக் கொள்வது நவீன நுட்பங்கள்எவை என்பது பற்றிய பல விபரங்களை தெளிவாக அறிந்து கொள்வோம்.

சீரங்கன் பெரியசாமி
ஓய்வுநிலை பணிப்பாளர்,
விவசாயத் திணைக்களம்

 

Comments