ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்;சஹ்ரானின் மனைவி மீதான வழக்கு நவம்பர் 18க்கு ஒத்திவைப்பு | தினகரன் வாரமஞ்சரி

ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்;சஹ்ரானின் மனைவி மீதான வழக்கு நவம்பர் 18க்கு ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான பயங்கரவாதி சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா மீதான வழக்கு, கல்முனை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி ரொக்ஸி முன்னிலையில் (30) முன் விளக்க மாநாட்டுக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு மேலதிக முன் விளக்க மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கின் வாதி தரப்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுகர்ஸி ஹேரத்துடன் அரச தரப்பு சட்டத்தரணி மாதினி விக்கினேஸ்வரனும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

நேற்றைய முன் விளக்க மாநாட்டின் போது, வழக்கின் வாதி தரப்பினலால் முன்மொழியப்பட்ட ஏற்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 

சாய்ந்தமருது, வெளிவேரியன் கிராமத்தில் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதையும், இதில் சஹ்ரானின் மகன் இறந்ததையும் சஹ்ரானின் மகள் காயமடைந்ததையும் சஹ்ரானின் மனைவி காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டதையும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி ஏற்றுக்கொண்டதாக சட்டத்தரணி மாதினி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். 

அத்துடன், சந்தேகநபரின் வாக்குமூலங்கள் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்வதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் அச்சுறுத்தல், வாக்குறுதி அல்லது வேறு ஏதேனும் எதிர்பார்ப்புகளின் நிமித்தம் வழங்கப்பட்டதாகவும் அந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் சுயவிருப்பின் பேரில் வழங்கப்படவில்லையெனவும் இவை குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களின் சுயாதீன தன்மையை  கேள்விக்குட்படுத்துவதாகவும் பிரதிவாதி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் வாதி தரப்புக்கு தமது ஆட்சேபனைகளை எழுத்து மூலமாக சமர்பிப்பதற்கு தவணை கோரப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, மேலதிக முன் விளக்க மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Comments