மனித உரிமைகள் பேரவையின் வரம்பை மீறிய குற்றச்சாட்டுகள்! | தினகரன் வாரமஞ்சரி

மனித உரிமைகள் பேரவையின் வரம்பை மீறிய குற்றச்சாட்டுகள்!

இலங்கையில் பொருளாதாரக் குற்றங்கள் இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வரம்புக்கு மீறியவை என்பதாலேயே அதனை நாம் எதிர்க்க நேரிட்டது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை நிலைவரம் குறித்து எமது நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டியில் அவர் பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

கே: ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவான நாடுகள் வெளிப்படுத்திய கருத்துக்கள் எவை?

பதில்: பொதுவாக, முன்னர் எமக்கு ஆதரவளித்த நாடுகள் இம்முறையும் எமக்கு ஆதரவளிப்பதுடன், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீண்டெழுந்து வருவதற்கு அவர்கள் அனைவரும் ஆதரவளிக்க விரும்புகின்றனர் என்றே கருதுகின்றோம்.

கே: இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வரைவுத் தீர்மானத்தில் முதல் தடவையாக பொருளாதாரக் குற்றங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை ஐ.நா மனித உரிமை பேரவையின் வரம்புக்குப் புறம்பானவையெனக் கருதுகின்றீர்களா?

பதில்: ஆம். இது ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணைக்கும், நடைமுறைக்கும் அப்பாற்பட்டது என்பதே எமது நிலைப்பாடு. நமக்கான உள்நாட்டுப் பொறிமுறையைக் கண்டறிந்து ஒரு குற்றம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் நடந்ததா என்பதை கண்டறிய ஏற்கனவே சிலர் உயர்நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளனர். இந்த விடயங்கள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் ஒன்றிணைக்கப்பட உள்ளன. எங்களின் கருத்துப்படி அது ஏற்றுக்கொள்ள முடியாதது, அதனால்தான் அதனை எதிர்த்தோம்.

கே: ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதான நாடுகள் மற்றும் பிறநாடுகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை உறுதியான முன்னேற்றம் கண்டுள்ளதா?

பதில்: ஆம் நிச்சயமாக. வேறு யாரும் கோருகின்றார்கள் என்பதற்காக அன்றி, நாம் அதனைச் சிறப்பான முறையில் செய்துள்ளோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் பின்னர், 12,194புலிகள் சரணடைந்தனர். அவர்கள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டு மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டனர்.

அன்றைய காலகட்டத்தில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளில் 94வீதமானவை மக்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மூன்று வருடங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஒரு பிரச்சினை கூட இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

துரதிர்ஷ்டவசமாக, இலங்கையில் நடந்தது ஒரு பொருளாதார நெருக்கடி, அது சமூக நெருக்கடிக்கு இட்டுச் சென்று அரசியல் நெருக்கடியில் உச்சக்கட்டத்தை அடைந்தது. சர்வதேச சமூகமும் இதைப் புரிந்து கொள்வது அவசியம் என்று நான் நினைக்கிறேன். இதிலிருந்து இலங்கை மீண்டு வருவதற்கு சமூக ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு உரிய முறையில் இருக்க வேண்டும் என்பது முக்கியமாகும். அதனை அடைய சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும். அந்த நோக்கத்தில் சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும். இலங்கை அரசியலமைப்பின் மூலம் கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, அந்த போராட்டங்கள் அமைதியாக இருக்கும் வரை அனைவரும் தங்கள் உரிமையை வெளிப்படுத்தலாம்.

எவ்வாறாயினும், பாரம்பரியமாக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாத மறைமுக நிகழ்ச்சி நிரலைக் கொண்ட சில தனிநபர்கள் அதை அபகரிக்க அனுமதிக்க முடியாது. தற்போது அவர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சமூக ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. எனவே, அதனை சர்வதேச சமூகத்திற்கு விளக்கினேன்.

கே: பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச் செய்து, தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், மக்கள் இன்னமும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இது இலங்கையின் நிலையை எவ்வாறு பாதிக்கும்?

பதில்: உண்மையில் பயங்கரவாத தடைச்சட்டம் மார்ச் மாதத்தில் திருத்தப்பட்டது என்பதை நாங்கள் அவர்களுக்கு விளக்கியுள்ளோம். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து நான் நீதியமைச்சராக இருந்தபோது பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தினோம். இப்போது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவது நீதிமன்றங்களில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் பிணை விதிகளும் உள்ளன.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக மிகவும் சமநிலையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வருவதற்கு நாங்கள் ஏற்கனவே அமைச்சரவைக்கு சென்றுள்ளோம். அந்த விஷயங்கள் நடைபெறும். ஆனால் இடைப்பட்ட காலத்தில், நாசவேலை, சதி அல்லது நாசவேலைச் செயல்களுக்கான ஆதாரங்கள் இருந்தால், சட்ட அமுலாக்க அதிகாரிகளின் கருத்துப்படி, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும். அந்த பொறிமுறையில் அரசாங்கம் தலையிட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

ஆனால் முன்னோக்கிச் செல்லும்போது, பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக, தேசிய பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் சுதந்திரம் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையைக் கொண்டிருக்கும் ஒரு சமநிலையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நாங்கள் மாற்றுவோம்.

கே: ஒக்டோபர் 7ஆம் திகதி நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை வாக்கெடுப்பில் இலங்கை எவ்வாறான ஆதரவை எதிர்பார்க்கிறது?

பதில்: நாம் யதார்த்தமாக இருக்க வேண்டும். உலகில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 47நாடுகள் மட்டுமே வாக்களிக்க முடியும். எனவே, நீங்கள் அந்த நாடுகளை கவனமாகப் பார்த்தால், நமது நண்பர்கள் சிலர் இப்போது அங்கு இல்லை. மாலைதீவு, பங்களாதேஷ், ரஷ்யா என கடந்த சில சந்தர்ப்பங்களில் எங்களுடன் வாக்களித்த நாடுகள் அங்கு இல்லை, புதியவர்கள் வந்துள்ளனர்.

எனவே, பிரதான குழுவான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா போன்ற சக்திவாய்ந்த நாடுகள் வரும் போது, கொஞ்சம் செல்வாக்கு உள்ளது. எங்கள் வாய்ப்புகளைப் பற்றி நாங்கள் யதார்த்தமாக இருக்கிறோம்.

முடிவுகளைப் பொருட்படுத்தாமல், இலங்கைக்கு எதிரான ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையானது இலங்கையின் சட்டக் கட்டமைப்பிற்கு அப்பாற்பட்டது என்பதாலும், அதில் எங்களால் உடன்பட முடியாது என்பதாலும், எம்மீது சுமத்தப்படும் ஒன்றை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர்களிடம் கூறுவோம்.

கே: இந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் மீது தடைகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதா?

பதில்: இல்லை. அந்தக் கேள்விக்கே இடமில்லை. எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இலங்கையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணை அல்லது குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்கள் அல்லது குற்றங்கள் இலங்கைக்குள்ளேயே விசாரிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று நமது அரசியலமைப்பு நேரடியாகக் கூறுகிறது.

கே: புலி ஆதரவு அமைப்புகள் பலவற்றின் மீதான தடைநீக்கம் புலம்பெயர் குழுக்களாலும் பல மேற்கத்திய நாடுகளாலும் வரவேற்கப்பட்டுள்ளது. இலங்கையில் முதலீடு செய்யுமாறு புலம்பெயர் தமிழ்க் குழுக்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இந்த நடவடிக்கைகள், இலங்கைக்கு  உதவுமா?

பதில்: கண்டிப்பாக... ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் என்ன நடந்தாலும், வெளியில் இருக்கும் இலங்கையர்களை நாம் அணுக வேண்டும், இதுவே எங்களின் பிரச்சினை. எமது நாட்டை கட்டியெழுப்ப அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைய வேண்டும். பல்லின, பன்முக கலாசார மற்றும் பல மொழி சமூகம் கொண்ட நாடு இதுவென்பதை நாங்கள் எப்போதும் ஏற்றுக்கொள்கிறோம். நமது அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைவருக்கும் சம உரிமை உண்டு. எனவே, அவர்களை அணுகி பேசுவதே முன்னோக்கி செல்லும் வழி. நாம் அவர்களை வெல்ல வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன்.

அர்ஜூன்

Comments