வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே | தினகரன் வாரமஞ்சரி

வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே

கடந்த காலத்தில் நாட்டில் எங்கு பார்த்தாலும் வரிசைகள்தான் காணப்பட்டன. எரிபொருள் முதல் அத்தியாவசியப் பொருட்கள் வரை அனைத்தையும்  பெற்றுக்கொள்வதில் வரிசைதான் காணப்பட்டது என்கிறார் ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார். தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் வழங்கிய நேர்காணலில் அந்த யுகத்தை  முடிவுக்கு கொண்டு வந்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதான் என்கிறார். நேர்காணலின் முழுவிபரம்.....

ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் என்ற ரீதியில் எவ்வாறான பணிகளை இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை காலம் முன்னெடுத்துள்ளீர்கள்?

நான் முதல் முறையாக 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐ.தே.கவின் சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டேன். அப்போது ஐ.தே.க மிகவும் வலுவிழந்து காணப்பட்ட காலப்பகுதியாகும். என்றாலும் கட்சி என்னை நம்பி அளித்த பாரிய பொறுப்பை நிறைவேற்றும் நோக்கில் குறித்த தேர்தலில் நான் போட்டியிட்டதுடன், பன்னிரெண்டாயிரதுக்கும் அதிகமான வாக்குகளையும் பெற்றேன். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு அடுத்தபடியாக நான்தான் கட்சியில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றேன். இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்கள் என்மீது வைத்த அந்த நம்பிக்கைக்கு நன்றி கூறுவதுடன், இன்றும் அவர்களுக்கு உண்மையாக பணியாற்றி வருகிறேன்.

கொரோனா காலப்பகுதியில் எனது தனிப்பட்ட நிதியில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிவாரணம் வழங்கினேன். நான் எப்போதும் கட்சி பேதம் பார்ப்பதில்லை. இந்திய வம்சாவளி மக்கள் அனைவருக்கும் பொதுவானதாக எனது உதவிகள் இருக்கும். கொரோனா காலப்பகுதியில் நான் முன்னெடுத்த உதவித்திட்டங்கள் தொடர்பில் இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால் அங்கு பாரம்பரியமாக அரசியல் செய்து மக்களை ஏமாற்றிய நபர்களை விட்டு இன்று மக்கள் என்னுடன் கைகோர்த்துள்ளனர்.

அதேபோன்று பல வறுமையான குடும்பங்களுக்கு நான் தனிப்பட்ட ரீதியில் உதவிகளை செய்துள்ளேன். இதனை நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விளம்பரப்படுத்திக்கொள்ளவில்லை. மாவட்டத்தில் பல பாடசாலைகளுக்கும் உதவிகளை செய்துள்ளேன். மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வையும் பெற்றுக்கொடுத்துள்ளேன். நாம் அதிகாரத்தில் இல்லாத சந்தர்ப்பத்தில் இவ்வாறு எனது உதவித் திட்டங்களை முன்னெடுத்திருந்தேன். தற்போது எமது ஜனாதிபதி தெரிவாகியுள்ளார். நிச்சயமாக எதிர்காலத்தில் பல திட்டங்களை மக்களுக்காக முன்னெடுப்பேன்.

இரத்தினபுரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும் தற்போது உங்கள் ஆட்சியால் பொறுப்புமிக்க பதவியில் இருக்கின்றீர்கள். இது தொடர்பில் என்ன நினைக்கின்றீர்கள்?

பல தசாப்தங்களாக ஐ.தே.கவுக்கு ஜனாதிபதி பதவி கிடைத்திருக்கவில்லை. தற்போதைய ஜனாதிபதியின் கீழ் பல சந்தர்ப்பங்களில் நாட்டின் ஆட்சியை நாம் கைப்பற்றியிருந்த போதிலும் அந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் மாற்றுக் கட்சிகளின் ஜனாதிபதிகளே அதிகாரத்தில் இருந்தனர். அதனால் எம்மால் பல முக்கிய தீர்மானங்களை எடுத்து பணியாற்ற முடியாது போனது. பல சந்தர்ப்பங்களில் மக்கள் எடுத்த தவறான தீர்மானங்களால் இன்று நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்தில் உள்ளது.

இந்த நாட்டின் பொருளாதாரத்தை தலைநிமிர்த்தி நாமும் உலக நாடுகளுடன் போட்டிபோட வேண்டும் என்ற ஒற்றை சிந்தனையில் செயல்படும் ஒரே நபர் ரணில் விக்கிரமசிங்கதான். அவருக்கான முழுமையான வாய்ப்பை மக்கள் கடந்த காலத்தில் வழங்கியிருக்கவில்லை. தற்போதைய இக்கட்டான நிலையில்தான் அவர் நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். அவர் மீண்டும் நாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்வார். அதற்கான செயல்பாடுகளை இன்று மக்கள் நேரில் காண்கின்றனர். ஜனாதிபதிக்கு உலகம் முழுவதும் கிடைக்கும் வரவேற்பை அனைவரும் பார்க்கின்றனர்.

ஜனாதிபதி மற்றும் எமது கட்சியில் எனக்குள்ள தொடர்ப்புகள் ஊடாக இரத்தினபுரி மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே எனது முதன்மை குறிகோளாகவுள்ளது. அதற்கான அனைத்து பணிகளையும் நான் முன்னெடுத்து வருகிறேன்.

எமது மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளேன். சமூர்த்தி வழங்கும் புதிய நடைமுறையில் இரத்தினபுரி மாவட்ட தோட்டப்புற மக்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளேன். அதேபோன்று மாவட்டத்தில் காணப்படும் பாடசாலைகள், மாணவர்களது பிரச்சினை குறித்து கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாருடன் அண்மையில் கலந்துரையாடினேன். உறுதியாக கல்விப் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதாக அவர் கூறினார்.

அதேபோன்று ஜனாதிபதியின் செயலாளராக உள்ள எமது கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவுடன் மாவட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளேன். நிச்சயமாக நான் மக்கள் எதிர்பார்க்கும் பணிகளை எதிர்காலத்தில் செய்ய உள்ளேன்.

உங்களின் தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?

நான் எப்போதும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே பழக்கப்பட்டுள்ளேன். செய்ய முடியாத வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றும் மோசமான எண்ணங்களும் என்னுள் இல்லை. இதனால்தான் நான் தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் மக்கள் இன்றும் என்னோடு கைகோர்த்து செயல்படுகின்றனர். பாராளுமன்றத்தில் எமது கட்சிக்கு ஒரு ஆசனம் மாத்திரமே உள்ளது. பெரும்பான்மையான அமைச்சுப் பதவிகள் பொதுஜன பெரமுன வசம்தான் உள்ளன. ஜனாதிபதி மாத்திரமே எமது கட்சியை சார்ந்தவர். நாம் இணைந்து பயணிக்க வேண்டியுள்ளது. ஆகவே, என்னால் முடிந்த அனைத்து விடயங்களையும் எமது மக்களுக்கு செய்வேன்.

ஐ.தே.கா வின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் என்ற ரீதியில் உங்கள் மாவட்டத்தில் முன்னெடுக்கவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் யாவை?

பாரிய அபிவிருத்திட்டங்களை செய்யக்கூடிய நிலையில் நாட்டின் பொருளாதாரம் இல்லை. நாம் இக்கட்டான காலப்பகுதியில் பயணிக்கிறோம். அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்பில் பல சிக்கல்கள் உள்ளன. எரிபொருள், எரிவாயு மற்றும் மக்களுக்கான அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதே ஜனாதிபதியின் முதன்மை இலக்காக உள்ளது. சர்வதேச நாயண நிதியம் உட்பட எமது கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம்.

இந்த இக்கட்டான காலப்பகுதியை நாம் கடக்க வேண்டியுள்ளது. அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் மீண்டும் எமது பொருளாதாரம் வழமைக்கு திரும்பும் என ஜனாதிபதி கூறியுள்ளார். இந்தக் காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய விடயங்களை பெற்றுக்கொடுப்பதே எமது முதன்மையான பணியாகும். அபிவிருத்திப் பணிகள் குறித்து தற்போது எதனையும் கூற முடியாது. ஆனால், நாடு வழமைக்கு திரும்புவது கட்டாயம். பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க ஐ.தே.க திட்டமிட்டுள்ளது.

நாட்டில் பொருளாதார சுமையை குறைக்கவும் நாட்டை அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்லவும் ஐ.தே.காவின் புது திட்டங்கள் ஏதும் உள்ளனவா?

ஆம். பல திட்டங்களை ஐ.தே.க வைத்துள்ளது. ஐ.தே.கவின் திட்டம் என்பது ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்கள்தான்.

கடந்த காலத்தில் நாட்டில் எங்கு பார்த்தாலும் வரிசைகள்தான் காணப்பட்டன. எரிபொருள் முதல் அத்தியாவசியப் பொருட்கள் வரை அனைத்தையும் பெற்றுக்கொள்வதில் வரிசைதான் காணப்பட்டது. அந்த யுகத்தை ஜனாதிபதி முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். மக்களின் பொருளாதார சுமையை குறைக்க இதுதான் ஜனாதிபதியின் முதன்மை திட்டமாக இருந்தது. அதில் நாம் வெற்றி கண்டுள்ளோம். இன்று மக்கள் வரிசை நிற்கும் நிலை மாற்றப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தகட்ட பணி அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதாகும்.

அதற்கான கொள்கைகளை ஜனாதிபதி வகுத்துள்ளார். சிங்கப்பூர், ஜப்பான், இந்தியா உட்பட பல நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துகொள்ள ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். அவரது அண்மைய வெளிநாட்டு விஜயங்களின் போது இவை தொடர்பில் பேசப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம்.

அதேபோன்று வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்ப அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஊடாக பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுக்க ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார். அத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எல்லாவற்றுக்கும் அப்பால் நாட்டை உணவு உற்பத்தியில் தன்னிறைவடைந்த நாடாக மாற்றுவது ஜனாதிபதியின் முக்கிய இலக்காக உள்ளது. அதேவேளை, நாட்டின் ஏற்றுமதியையும் அதிகரிப்பதும் அவரது பிரதான தீர்மானமாகும். இந்த விடயங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்படும் போது நாடு மீண்டும் சுபீட்சத்தை நோக்கி நகரும்.

மறைமுகமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஐ.தே.க பாதுகாப்பதாக சிலர் கூறுகின்றனரே இதில் எந்தளவு உண்மையுள்ளது?

பொதுஜன பெரமுனவை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி அதிகாரத்துக்கு வரவில்லை. அவரது நோக்கம் நாட்டையும் நாட்டு மக்களையும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுசெல்வதாகும். அதற்கான பணிகளைதான் அவர் முன்னெடுத்துவருகிறார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதிக்கு ஆதரவை வழங்குவதில்லை. பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான வாக்குகளால்தான் அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். எனவே, பொதுஜன பெரமுனவை இணைத்துக்கொண்டுதான் பயணிக்கவேண்டுடியுள்ளது. பொதுஜன பெரமுனவை பாதுகாப்பது என்பது முட்டாள்தனமான கருத்து மக்களுக்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்க எவர் வேண்டுமானாலும் ஜனாதிபதியுடன் கைகோர்த்து செயல்படலாம். அதனால்தான் அவர் சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

மலையகத்தில் இன்றுவரை பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாள் வேதனத்துக்கு போராடி வருகின்றனர். இதை பற்றி உங்கள் கருத்து என்ன?

இந்த நிலைமை முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டும். தொழிசங்கங்கள் மக்கள் குறித்து சிந்திக்க வேண்டும். காலம் காலமாக மக்கள் சம்பளத்துக்கு போராடிவருகின்றனர். கூட்டு ஒப்பந்தம் முறை குறித்து பல குற்றச்சாட்டுகள் உள்ளன. முறைமை மாற்றத்தை பலர் வலியுறுத்துகின்றனர். மலையக தொழிற்சங்களுக்கு இடையில் ஒற்றுமையின்மையே இந்த நிலைமைக்கு பிரதான காரணமாக உள்ளது.

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட இரண்டு வருடங்களை நெருங்கவுள்ளது. இன்னமும் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாய்க்குதான் போராடிக்கொண்டிருக்கின்றனர். ஆயிரம் ரூபாவையை முழுமையாக பெற்றுக்கொடுக்க முடியவில்லை. அன்று இருந்த வாழ்க்கைச் செலவுக்கும் இன்றுள்ள வாழ்க்கைச் செலவுக்கும் பாரிய வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.

எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றாலும் முதலில் அனைத்து தொழிற்சங்களும் ஒன்றுகூடி கலந்துரையாடி ஒரு பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வை எட்ட முடியும். கட்டாயம் இந்த கூட்டு ஒப்பந்த நடைமுறையில் பல மாற்றங்களை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்.

உங்கள் அரசியல் பயணம் மீண்டும் பாராளுமன்றம் நோக்கியதா அல்லது இடையில் வரவுள்ள மாகாணசபை அல்லது உள்ளுராட்சி மன்ற தேர்தலை நோக்கியதா?

பாராளுமன்றம் செல்வதன் ஊடாகவே இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் என்பதில் உறுதியாக உள்ளேன். பல தசாப்தங்களாக துன்பங்களை எதிர்கொள்ளும் மக்களாக இவர்கள் உள்ளனர். அவர்களது பிரச்சினைகள் நாட்டின் அதி உயர் சபையாகவுள்ள பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். அதனை அடுத்த பொதுத் தேர்தலில் நிச்சியமாக இரத்தினபுரி மாவட்ட தமிழ் பேசும் மக்கள் நிறைவேற்றுவார்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

Comments