
இலங்கை புகையிரத பாதைகளில் மிகவும் விசாலமானதும் அற்புதமான திகில் அனுபவங்களை தரும் சிங்கமலை சுரங்கம் உலகில் பேசப்படும் ஒரு பிரதான சுரங்க பாதையாகும்.
புகையிரத பயணம் என்றால் எமது வாழ்வில் பெரியோர் முதல் சிறியோர் வரை மறக்க முடியாத அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் தரும் ஒன்றாகும். அதிலும் மலையக புகையிரத பயணம் முற்றிலும் வித்தியாசமானதும் கலைத்துவமிக்கதும் ஆகும்.
இதற்கு பிரதான காரணமாக அமைவது மலையக புகையிரத பாதையில் அமைந்துள்ள சுரங்க வழிபாதைகளும், இயற்கை காட்சிகளும் எழில் கொஞ்சும் மலை பிரதேசங்களில் அமைந்துள்ள தேயிலை மலைகளும், நீர் வீழ்ச்சிகள், சரிவுகள் வளைவுகள் நிறைந்த மிகவும் ரம்மியமான பாதைகள் என்றால் அது மிகையாகாது இதில் குறிப்பாக புகையிரத பயணம் என்றாலே எமது கண்முன் தோன்றுவது சுரங்க வழி பாதைகள்.
சிங்கமலை சுரங்கம் உலகில் பேசப்படும் ஒரு பிரதான சுரங்கப் பாதையாகும்.
கொழும்பிலிருந்து பதுளை வரையுள்ள புகையிரத பாதையில் சுமார் 44சுரங்கங்கள் உள்ளன.
இதில் மிக நீண்ட சுரங்க பாதையாக இருப்பது நுவரெலியா மாவட்டத்தில் ஹற்றன் நகருக்கும் கொட்டகலை நகருக்கும் 108 4/3மைல் கல்லுக்கும் 109 4/1மைல் கல்லுக்கும் இடையில் அமைந்துள்ள 14இலக்க சிங்கமலை சுரங்கபாதை. இது ஹற்றனில் ஆரம்பித்து கொட்டகலையில் முடிகிறது.
பார்ப்பவர்களுக்கு இதில் என்ன விசேஷம் என்று எண்ணத் தோன்றும். ஆனால் அற்புதங்கள் நிறைந்த அனுபவம் தரும் பாதை தான் சிங்கமலை சுரங்கம்.
ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட குறித்த சுரங்க வழி பாதை சுமார் 1844அடி நீளமும் 18அடி அகலமும் கொண்டது. இந்த நீண்ட சுரங்க வழிபாதை வழியாக புகையிரதங்கள் மட்டுமன்றி, கொட்டகலை பகுதியில் உள்ள எரிங்டன், யுலிபீல்ட், கொட்டகலை, தகரமலை, தொப்பி தோட்டம் உள்ளிட்ட பல தோட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், பாடசாலை மாணவர்கள், தொழிலாளர்கள் இந்த சுரங்க வழி பாதை வழியாக ஹற்றன் நகருக்கும் ஹற்றன் நகரில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கும் வருகை தருகின்றனர்.
இருள் நிறைந்த பாதுகாப்பற்ற பாதையில் அச்சமின்றி, உயிரை துச்சமாக மதித்தே வருகிறார்கள். இந்த சுரங்க வழி பாதையில் ஏனைய சுரங்க வழி பாதையினை விட மாறுபடுவதற்கு காரணம் இந்த சுரங்க வழி பாதையின் நடுவில் ஒரு பெரிய வளைவு காணப்படுவதும் இதனை கடப்பதற்கு 25நிமிடங்கள் வரை எடுப்பதும் அடிக்கடி அபூர்வமான மாறுபட்ட ஓசைகள் தோன்றுவதும் காரணம் என இதனை கடக்கும் பலர் தெரிவிக்கின்றனர்.
காதல் முரண்பாடுகள், வாழ்க்கையில் விரக்தியடைந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் ஒரு இடமாக இது காணப்படுவதாகவும் இதனால் இதில் அடிக்கடி பயங்கரமான அமானுசிய சத்தங்கள் சில நேரங்களில் கேட்பதாகவும் இவ்வாறான சம்பவங்கள் நிகழும் போது ஒரு சில தினங்கள் செல்லும் வரை நெஞ்சில் பயம் இருப்பதாகவும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆரம்பத்தில் இந்த சுரங்கத்தினை கடப்பதற்கு பந்தங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் தற்போது தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக டோச் லைட் களையும், செல்லிடப்பேசிகளையும் பயன்படுத்தி கடப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 150வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த குறித்த சுரங்க பாதை 1865 – தொடக்கம் 1871ஆண்டு காலப்பகுதியில் அப்போதை சிலோன் புகையிரத சேவையில் தலைமை அதிகாரியாக பணியாற்றிய சேர் கில்போட் லின்சி மோல்சுவத் என்பவரால் எந்த வித தொழில்நுட்ப வசதியும் இல்லாத காலகட்டத்தில் கருங் கல்லினை குடைந்து இந்த சுரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கம் உருவாக்குவதற்கு பெரும்பாலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்பதற்கு அந்த சுரங்கப்பகுதியில் உள்ள கருங்கற்களில் அவர்களது பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ள கற்கள் சான்று பகிர்கின்றன.
மிகவும் ரம்மியமான சூழுலில் காட்டுப்பகுதியில் சிங்கத்தின் முகத்தின் தோற்றமுடைய ஒரு மலைப்பாங்கான பிரதேசத்தில் இது அமைந்துள்ளதனால் இதற்கு சிங்கமலை சுரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
எது எவ்வாறான போதிலும் அதிகமான மக்கள் கடக்கும் பிரதான பயண பாதையாக இது காணப்படுகின்றது.
இந்த பாதையில் மிகவும் ஆபத்துக்கள் காணப்படுகின்றன. குறிப்பாக பாடசாலை மாணவிகள், இளம் யுவதிகள் எவ்வித பாதுகாப்பும் இன்றி கடும் இருட்டில் ஒரு ஒளி பந்ததத்தின் துணையுடன் மாத்திரம் தன்னந் தனியே செல்கின்றனர். அதிகமானவர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிக பணம் பொது போக்குவரத்திற்கு செலவிட வேண்டியுள்ளதனாலும் அதிக வறுமை காரணமாகவும் தமது உயிரை துச்சமாக மதித்து இவ்வாறு பயணிக்கின்றனர்.
இவ்வாறு இருட்டில் பயணிப்பவர்களின் பாதுகாப்பு கருதி சுரங்கத்தினுள் குறைந்தது மின் விளக்குகளையாவது பொருத்தி கொடுத்தால் பேருதவியாக இருக்குமென பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது இவ்வாறிருக்கு ஹற்றன் பகுதிக்கு நீர் பாசன பிரதேசமாக குறித்த சுரங்கப்பகுதி காணப்படுகின்றது. ஹற்றன் புகையிரத நிலையத்திற்கும் புகையிரத நிலைய விடுதிகளுக்கும் பிரதான குடி நீர் பெற்றுக்கொடுக்கும் பிரதேசமாகவும் இந்த பகுதி காணப்படுகின்றன.
இதை விட இந்த சுரங்கத்தில் ஆயிரக்கணக்கான மழைக்குருவி கூடுகள் காணப்படுகின்றன. சுரங்கத்தின் மேலுள்ள காட்டுப்பகுதியில் காட்டுக்கோழிகள் மான், மறை, முயல், பன்றி, சிறுத்தை உள்ளிட்ட எமது நாட்டிக்கு உரித்தான அரிய வகை தாவரங்களும் பறவைகளும் வாழ்கின்றன. ஆகவே இந்த பிரதேசத்தினை ஒரு சுற்றுலா பிரதேசமாக விருத்தி செய்வதற்கான வசதிகள் காணப்படுவதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமே.
இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்,..
இந்த சுரங்கத்தின் வழியாக பல ஆண்டுகளாக பயணஞ் செய்வதாகவும் இதில் பயணிப்பதற்கு ஆரம்பத்தில் அச்சம் காணப்பட்ட போதிலும் தற்போது எவ்வித அச்சமும் கிடையாது என தெரிவிக்கின்றனர்.
முன்பெல்லாம் புகையிரம் வரும் போது ஒலி எழுப்புவதாகவும் இப்போது அவ்வாறு ஒலி எழுப்புவதில்லை என்றும் அதிக வேகத்தில் பயணிப்பதாகவும் இது மிகவும் ஆபத்தானது எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதே நேரம் சனி ஞாயிறு தினங்களில் பாடசாலை மாணவர்கள் இந்த சுரங்கத்தினை தவறாக பயன்படுத்துவதாகவும் இதனால் ஏனைய மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் சீரழிவதற்கு வழி சமைப்பதாகவும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே இது குறித்து உரிய அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டும் எனவும் பலர் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஹற்றன் விசேட நிருபர்