தொழிலாளர் இடைவிலகலால் பாரிய சிக்கலில் தோட்டங்கள் | தினகரன் வாரமஞ்சரி

தொழிலாளர் இடைவிலகலால் பாரிய சிக்கலில் தோட்டங்கள்

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி பெருந்தோட்ட துறையில் பெரும் பாதிப்பை வருங்காலத்தில் ஏற்படுத்துவதற்கான சாதக நிலைமைகள் தற்போது மெல்ல உருவெடுத்துக் கொண்டு வருகின்றது. அதில் பிரதான காரணியாக தொழிலாளர் இத் துறையை விட்டு விலகிச் செல்லுதல் அதிகரித்துள்ளது. அதனால் நாட்டுக்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தரும் பெருந்தோட்ட தொழிலில் வருங்காலத்தில் தொழிலாளர்களின் பற்றாக்குறை பூதாகரமாக உருவெடுக்கலாம் என தோன்றுகிறது.

200வருட காலத்தை எட்டியுள்ள தேயிலை தொழில்துறை இன்று ஒவ்வொரு தோட்டப்பகுதிகளிலும் அருகிவருவதை அவதானிக்க கூடியதாக காணப்படுகிறது.

இந்த நிலையில் பெருந்தோட்ட தொழில் துறையில் தேயிலை பயிர்ச்செய்கையில் தம்மை தொழிலாளியாக ஈடுபடுத்தி வாழ்வாதார தொழிலாக முன்னெடுத்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கின்றது.

இவ்வாறு தொழிலாளர்கள் குறைந்து செல்வதற்கு பிரதான காரணங்கள் பல உண்டு.

இதில் வருமானம் குறைவு, இத் தொழில் துறையை முகாமைத்துவம் செய்பவர்கள் தொழிலாளர்கள் மீது திணிக்கும் கெடுபிடிகள்,தொழிலாளர்கள் உரிமை விடயங்களில் வஞ்சிக்கப்படுதல், சலுகை குறைபாடு என அடுக்கி கொண்டு செல்லப்படும் பல பிரச்சினைகள் உண்டு.

இவ்வாறு நாளுக்கு நாள் பல்வேறு கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற தொழிலாளர்களுக்கு தேயிலை தொழில் துறையில் வெறுப்பு ஏற்பட்டு நாளாந்தம் குடும்ப சுமைக்கு ஏற்ற வருமானத்தை ஈட்டிக்கொள்ளக்கூடிய மாற்று தொழில்களை தேடிச் செல்ல வேண்டிய நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில் தோட்டத் துறையில் எட்டு மணிநேரத்திற்கு அதிகமாக தொழிலாற்றி ஆயிரம் ரூபாவுக்கு குறைவான நாள் சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கு அப்பால் நாளாந்தம் 2000/=ரூபாவுக்கு அதிகமான வருமானம் வரக்கூடிய விவசாய காணிகளில் வேலை,ஹோட்டல்களில் வேலை உட்பட கூலி வேலைக்காக தொழிலாளர்கள் சென்று விடுகிறார்கள்.

இருப்பினும் நமது நாட்டில் காணப்படும் தொழில் துறைகளில் நாளாந்த வருமானத்தில் அதி குறைவான வருமானத்தை பெற்றுக்கொள்பவர்கள் தோட்டத் தொழிலாளிகள் என்பதற்கும் மாற்றுக் கருத்தில்லை.

உடல் ரீதியாக கஷ்டப்பட்டு தொழில் செய்பவர்கள் தோட்ட தொழிலாளர்கள் என்பது யாவரும் அறிந்த விடயம்.

இந்த நிலையில் தமது வருமானத்தை அதிகரித்து கொள்வதற்காகவும், குடும்பத்தை வறுமையில் இருந்து பாதுகாக்கவும் தொழிலாளர்கள் பலர் தோட்ட தொழிலில் இடைவிலகி மாற்று தொழிலுக்கு செல்கின்றனர்.

இன்னும் சிலர் தொழிலில் இடைவிலகி நாளாந்தம் கிடைக்கும் வருமானத்தில் சிறிய தொகையை வீட்டுக்காகவும் பாரிய தொகையை தமது உடல் வலியை போக்க மதுவுக்கும் செலவு செய்து வருகின்றனர்.

இந் நிலையில் தோட்ட தொழிலை இழந்து மாற்று இடங்களுக்கு நாளாந்த வருமானத்திற்கென செல்லும் தொழிலாளர்களின் உழைப்பை தோட்டப்பகுதிகளில் ஒரு சிலர் சுரண்டும் நிலையும் உருவாகியுள்ளது. அதாவது பிரதான நகரில் இருந்து தூரப் பிரதேச தோட்டங்கள் பல மலையகத்தில் காணப்படுகிறது.

இவ்வாறு காணப்படும் தோட்டங்களில் ஒரு சிலர் தொழிலாளர்களின் நாளாந்த உழைப்பை சுரண்டும் வகையில் சட்ட விரோத மது விற்பனையை செய்து வருவதுடன், இவர்கள் விற்பனக்கு கொண்டு வரும் சட்ட விரோத மதுவுக்கு

உழைக்கும் சில தொழிலாளர்கள் அடிமையாகி தமது உழைப்பை வீண் விரயம் செய்து வருகின்றனர்.

இது இன்று நேற்று உருவான பிரச்சினை அல்ல தோட்டப்பகுதியில் காலம் காலமாகவே இடம்பெற்று வரும் பாரிய பிரச்சினை என்றும் சொல்ல முடியும். ஆனால் இதை மாற்றியமைத்து,சேமிப்பு என்ற பழக்க வழக்கத்தை தொழிலாளர்களிடம் கொண்டு செல்கின்ற போது தோட்ட பெண்கள் சேமிப்பில் ஆர்வம் காட்டினாலும் குடும்ப பெண்கள் சேமிப்பதை ஆண்கள் எடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உடபுஸ்ஸலாவை பிரதேசத்தில் உள்ள தோட்டங்கள் சிலவற்றில் சட்டவிரோதமான கசிப்பு விற்பனை செய்யப்படுவதாகவும்,இதனால் எமது ஆண்கள்,இளம் சமூகத்தினர் கசிப்புக்கு அடிமையாகி நாளாந்தம் உழைக்கும் வருமானத்தை கசிப்புக்கு இரையாக்குகின்றனர்.

அதனடிப்படையில் உடப்புஸ்ஸலாவை ஓல்டிமார் தோட்டத்தின் பிரிவான ஊவா பரனகம, அம்பஸ்தோவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாம்பரத்தை மற்றும் கீரியகொலை ஆகிய தோட்டங்களில் வழமைக்கு மாறாக சட்ட விரோத மதுபான பாவனைக்கு இளைஞர்களும் அடிமையாகி உழைக்கும் பணத்தை கசிப்பு குடிக்கவே செலவு செய்து பாரிய பொருளாதார பாதிப்புக்கும் ஆளாகி வருவதாக தோட்ட பெண்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக குடும்ப கஷ்டம்,குடும்ப பிணக்கு, அடி, தடி,பொலிஸ் பிரச்சினை என பல்வேறு துன்பங்களுக்கு தோட்ட பெண்கள் முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தும்பவத்தை தோட்டப் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாகவும்,அதை கீரியகொலை தோட்டத்தில் மறைவிடம் ஒன்றில் விற்பனை செய்யப்படுவதாகவும் தோட்ட பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தொழிற்சங்கங்கள்,பொலிஸ் நிலையங்கள், சமூக தொண்டு நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் இன்னும் சரியான தீர்வு கிட்டவில்லை,

எனவே இந்த பிரச்சினைக்கு பொலிசார் மூலம் தீர்வு கிடைக்கப்பெற வேண்டும். பொலிஸாரால் சட்டவிரோத மதுபானம் தயாரிப்போர், விற்பனை செய்வோர் கைதுசெய்து தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் தோட்ட வேலையில் இருந்து விலகி அதிக வருமானத்தை ஈட்டி அதை சட்டவிரோத மதுபானத்துக்கு செலவு செய்யும் பாரிதாப நிலையில் இருந்து தொழிலாளரை மீட்கலாம்.

ஆ.ரமேஸ்

Comments