‘மன்கட்’;சரியா தப்பா? | தினகரன் வாரமஞ்சரி

‘மன்கட்’;சரியா தப்பா?

பந்துவீச்சாளர் பந்தை தனது கையில் இருந்து விடுவிக்கும் வரை, பந்துவிச்சாளர் முனையில் இருக்கும் துடுப்பாட்ட வீரர் (Non striker) கோட்டைத் தாண்டக் கூடாது என்பது ஐ.சி.சி விதியில் தெளிவாக இருக்கிறது. என்றாலும் அவ்வாறு வெளியே செல்லும் வீரரை பந்தை வீசுவதற்கு முன்னர் பந்துவீச்சாளர் ஆட்டமிழக்கச் செய்வது இன்றும் கூட கிரிக்கெட் உலகில் தீர்க்கப்படாத வழக்கு.

இப்படி ஆட்டமிழக்கச் செய்யும் முறையை இத்தனை காலமும் நியாயமற்ற ஆட்டமுறை என்ற வகைப்படுத்தலின் கீழ் வைத்திருந்த ஐ.சி.சி ஒரு வாரத்துக்கு முன்தான் அதனை சாதாரண ரன் அவுட் வகைப்படுத்தலுக்கு மாற்றியது.

ஆனால் இந்த மாற்றம் நிகழ்ந்து ஒருசில நாட்களிலேயே மீண்டும் சர்ச்சை வெடித்திருக்கிறது. இத்தனை காலமும் ஆண்கள் கிரிக்கெட்டில்தான் இந்த குழப்பம் இருந்தது என்று பார்த்தால், இப்போது பெண்கள் கிரிக்கெட்டுக்கும் இது தொற்றிவிட்டது.

கடந்த செப்டெம்பர் 24ஆம் திகதி இங்கிலாந்துக்கு எதிரான லோட்ஸில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற ஒரு விக்கெட் கைவசம் இருக்க 18ஓட்டங்களை பெற வேண்டி இருந்தது.

44ஆவது ஓவரை வீசவந்த தீப்தி ஷர்மா அதன் மூன்றாவது பந்தை வீசவந்தபோது, பந்தை வீசுவதற்கு முன் துடுப்பாட்ட வீராங்கனை சார்லி டீன் முண்டியடித்துக் கொண்டு முன்னாள் ஓட, பந்து வீசுவதை நிறுத்தி ரன் அவுட் செய்துவிட்டார்.

இந்திய பெண்கள் ஒருநாள் தொடரை 3–0என முழுமையாக கைப்பற்றினார்கள். தனது கன்னி அரைச்சதத்தை பெற்று இங்கிலாந்தை வெற்றி பெறச் செய்ய காத்திருந்த டீன் 47ஓட்டங்களைப் பெற்று கண்ணீருடன் வெளியேறினார்.

தான் அநியாயமாக ஆட்டமிழக்கச் செய்யப்பட்டதாக டீன் நினைப்பதை அவரது கண்ணீர் காட்டிக் கொடுத்தது. ஆனால் இந்திய அணியின் வெற்றிக் கொண்டாட்டம் தனது பக்கம் நியாயம் இருப்பதை சொல்வது போல் இருக்கிறது.

இந்த ஆட்டமிழப்பு முறையின் நியாய, அநியாயங்களைத் தாண்டி இதன் சரச்சை முடிந்தபாடில்லை.

1947இல் சிட்னியில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் இந்தியாவின் வீனு மன்கட், ஆஸி. துடுப்பாட்ட வீரர் பில் பிரெளனை கோட்டை வீட்டு வெளியே போனாதால் இந்த முறையில் ஆட்டமிழக்கச் செய்தது கிரிக்கெட் வரலாற்றில் முதல் சம்பவம். கிரிக்கெட் ஓட்டைக்குள் புகுந்து இப்படி ஒரு ஆட்டமிழப்பை செய்ததால் பெரும்பாலானோர் முகம் சுளித்தே மன்கட்டை பார்த்தனர். அன்று தொடக்கம் இந்த முறையிலான ஆட்டமிழப்பை மன்கட் என்று அழைப்பது வழக்கமாகிவிட்டது.

“இந்த ஆட்டமிழப்பு முறை முரண்பாட்டுக்குரியது. இதற்கு நான் ஆதரவாக இல்லை. ஆனால் இந்தியா அதற்கு வரவேற்பு அளிக்கிறது” என்கிறார் இங்கிலாந்து அணித் தலைவி ஆமி ஜோன்ஸ்.

ஆனால் நாம் புதிதாக ஒன்றும் செய்யவில்லை. அது ஐ.சி.சி விதியில் இருக்கிறது என்கிறார் இந்திய அணித் தலைவி ஹார்மன்பிரீத் கவுர்.

வழக்கமாகக் கிரிக்கெட் ஆடுபவர்கள் பந்துவீச்சாளர் முனையில் இருந்தால் பந்துவீச்சாளர் ஓடிவரும்போதே அதனோடு சேர்த்து ஓட்டம் பெறுவதற்கு முன்னோக்கி நகர்வது, இயல்பானது. அது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்.

“பந்து கையில் இருந்து விடுபடும்வரை நொன் ஸ்ட்ரைக்கர் கோட்டுக்குள் இருப்பது கடினமானது” என்கிறார் இங்கிலாந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்.

என்றாலும் “இது நீண்ட காலமாக கேள்வி எழுப்பப்படும் ஒன்று. ஆனால் இது போட்டி விதிகளில் இருப்பது. மன்கட் முறையில் ரன் அவுட் செய்ய முடியும். இது போட்டி விதியில் இருக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்” என்கிறார் இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மொன்டி பெனிஸர்.

கிரிக்கெட்டில் மன்கட் முறை என்பது மிக அரிதாக நிகழும் ஒன்று. நூற்றாண்டு கடந்த டெஸ்ட் வரலாற்றில் இதுவரை நான்கு தடவையே நிகழ்ந்திருக்கிறது. அதுவே ஆடவர் ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் நான்கு தடவைகளே இடம்பெற்றிருக்கின்றன.

கடைசியாக 2014ஆம் ஆண்டு எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சச்சித்ர சேனநாயக்க, ஜோஷ் பட்லரை இந்த முறையில் ரன் அவுட் செய்தார். இது நடந்து எட்டு ஆண்டுகள் கடந்த போதும் சேனநாயக்க தனது செயலை இன்றும் கூட நியாயப்படுத்த வேண்டிய சூழலே இருக்கிறது.

இதுவே டி20போட்டிகளில் இந்தப் போக்கு சற்று வேகமாக நிகழ்கிறது. குறுகிய வரலாற்றைக் கொண்ட டி20இல் இதுவரை மூன்று முறை மன்கட் அட்டமிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

பொதுவாக பந்துவீச்சாளர் தாம் பந்து வீசும்போது அந்த முனையில் இருக்கும் துடுப்பாட்ட வீரர் கோட்டை தாண்டிச் செல்லுபோதும் பந்துவீசுவதை நிறுத்திவிட்டு துடுப்பாட்ட வீரரையும் எச்சரித்து நடுவருக்கும் அதுபற்றி கூறுவார். தொடர்ந்து அந்த செயல் தீவிரம் பெற்றாலேயே இந்த சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழப்பைச் செய்ய தைரியம் பெறுவார்.

1992இல் போர்ட் எலிசபத்தில் நடந்த தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் போட்டியில் பீட்டர் கேர்ட்ஸனை, கபில் தேவ் மன்கட் முறையில் ரன் அவுட் செய்தது எச்சரித்து எச்சரித்து முடியாத பட்சத்திலாகும். முந்தைய போட்டிகளில் இப்படி கோட்டை விட்டு வெளியே போக வேண்டாம் என்று கேர்ட்ஸனை குறிப்பிட்டு இரு முறை கபில் தேவ் எச்சரித்திருந்தார். முடியாதபோதே அவர் இதனைச் செய்தார்.

ஆனால் அப்போது கபில் தேவின் செயலுக்கு தென்னாபிரிக்க வீரர்களிடம் இருந்தும் ரசிகர்களிடம் இருந்தும் உடனடியாக மைதானத்திலேயே எதிர்ப்புக் கிளம்பியது. தென்னாபிரிக்க அணித்தலைவர் இரண்டு விரல்களைக் காட்டி கபில் தேவுக்கு எதிர்ப்பை வெளியிட்டதோடு இந்திய களத்தடுப்பாளர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கேர்ட்ஸன் மைதானத்தை விட்டு வெளியேற மறுக்க கடைசியில் நடுவர் அவரை வெளியேறும்படி உத்தரவிட வேண்டி ஏற்பட்டது. இதற்காக கேர்ட்ஸனுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

இன்றும் கூட மன்கட் முறை என்பது ஜீரணிக்க முடியாத ஒன்றுதான். ஆடுகளத்தில் இருக்கும் எல்லா வீரர்களும் அதனை ஒரே மாதிரியாகப் பார்ப்பதில்லை. ஒருவருக்கு ஐ.சி.சி அங்கீகரித்த விதியாக இருந்தாலும் மற்றவருக்கு அது கிரிக்கெட் மாண்பையே கெடுக்கும் ஒன்று.

அதுவே போட்டியின் சமநிலைப்போக்கை கெடுக்கிறது. அதாவது பந்துவீச்சாளர் முனையில் இருக்கும் துடுப்பாட்ட வீரர் கோட்டை விட்டு வெளியேறும்போது ரன் அவுட் செய்வது கிரிக்கெட் மாண்புக்கு உகந்ததில்லை என்று ஒரு தரப்பு தவிர்க்கும் நேரத்தில் மற்றத் தரப்பு, அவ்வாறான ஆட்டமிழப்பு முறையைச் செய்தால் போட்டியின் முடிவில் அது வேறு மாதிரியான தாக்கத்தையே செலுத்தும் என்கின்றனர்.

ஐ.சி.சி எத்தனை தான் அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கினாலும் மைதானத்தில் இன்னும் சூழல் மாறவில்லை. 1932–1933பருவத்தில் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களை குறிப்பாக டொன் பிரட்மனை கட்டுப்படுத்துவதற்கு இங்கிலாந்து உடலுக்கு பந்தை எறிந்ததாகட்டும், 1981இல் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் கடைசி பந்தில் போட்டியை சமன் செய்ய ஆறு ஓட்டங்களை பெற வேண்டி இருந்தபோது ட்ரவோர் செப்பல் பந்தை உருட்டிவிட்டதாகட்டும் எல்லாமே அப்போதைய சூழலில் சட்டத்தின் பிரகாரம் தப்பில்லை.

ஆனால் எல்லாமே கிரிக்கெட் மான்புடன் தொடர்புபட்ட விவகாரங்களாகவே பார்க்கப்பட்டன. வீரர்கள் இப்படிச் செய்ய மாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கையிலேயே விதிகளில் ஓட்டை இருந்தது. ஆனால் பின்னர் அந்த ஓட்டைகள் அடைக்கப்பட்டன.

மன்கட் முறை கிரிக்கெட் விதியில் இருக்கும் ஓட்டையாகவே நீண்ட காலம் இருந்து வந்தது. ஐ.சி.சி அந்த ஓட்டையை அடைக்கு முயற்சியாகவே இப்போது அதற்கு முழு அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. அதனை முழுமையாக செயற்படுத்துவதற்கு கிரிக்கெட் உலகம் ஒருமித்து அங்கீகாரம் அளிக்க வேண்டும். அதுவரை குழப்பம் தொடர்ந்தும் நீடிக்கும்.

எஸ்.பிர்தெளஸ்

Comments