பொருளாதாரம் இறுதிமூச்சு இழுக்கும் வரை காத்திருக்கும் அரசியல் சுயநலக் குழுக்கள்! | தினகரன் வாரமஞ்சரி

பொருளாதாரம் இறுதிமூச்சு இழுக்கும் வரை காத்திருக்கும் அரசியல் சுயநலக் குழுக்கள்!

உயிர்பிரியும் தறுவாயிலுள்ள பொருளாதாரத்திற்கு மூச்சுக்காற்றைப் பெற்றுக் கொள்வதற்கு உதவி புரியாமல், பொருளாதாரம் இறுதி மூச்சையும் இழுக்கும் வரை சிலர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதற்கு சிலர் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் கூறியிருந்தார்.

நாடு எதிர்கொண்டுள்ள சவால்களிலிருந்து மீள்வதற்கு வெளிநாடுகளிலிருந்து கோரப்பட்டுள்ள உதவிகள், அவர்களிடமிருந்து வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் மற்றும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்தினை முன்வைத்திருந்தார்.

கடந்த சில வாரங்களாக தான் சந்தித்திருந்த வெளிநாட்டுத் தலைவர்களுடன் கலந்துரையாடிய விடயங்கள் மற்றும் அவர்களால் வழங்கப்பட எதிர்பார்த்திருக்கும் உதவிகள் குறித்து ஜனாதிபதி தனது உரையில் விரிவாகக் கூறியிருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டை எட்டுதல், ஜப்பான்,இந்தியா மற்றும் சீனா ஆகிய கடன் வழங்கிய நாடுகளுடனும் தனியார் கடன் வழங்குனர்களுடனும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பொதுஉடன்பாட்டுக்கு வருதல், அதனைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவாதத்துடன் நாணய நிதியத்திடமும் வேறு நாடுகளிடமும் கடனுதவி பெற்று பொருளாதாரத்தை  பலப்படுத்துதல், பொருளாதார நிலைமையை பலப்படுத்திய பின்னர் அபிவிருத்திப் பொருளாதாரம் வரை பொதுத்திட்டமொன்றின் கீழ் நாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு வருதல் ஆகிய பிரதான நான்கு மூலோபாயத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டே அரசாங்கம் காய்நகர்த்தல்களை மேற்கொண்டிருக்கிறது என்பது அவருடைய இந்த உரையின் மூலம் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெற்றுக் கொள்ளும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் முதலாவது கட்டத்தைத் தாண்டியுள்ளது என்றே கூற வேண்டும். அதிகாரிகள் மட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதுடன், இது குறித்த ஒப்பந்தம் விரைவில் இறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டமாக கடன்மறுசீரமைப்புக்கான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அரசாங்கத்தின் முயற்சியில் ஜப்பான் உறுதுணையாக உள்ளது என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

டன்மறுசீரமைப்பு குறித்ததான பூர்வாங்க கலந்துரையாடல்கள் இந்தியாவுடன் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவுடனான கடன்மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிக்க ஜப்பான் முன்வந்துள்ளது. கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை ஒருபுறம் தள்ளிவைத்து விட்டு மீண்டும் இலங்கைக்கு நேசக்கரம் நீட்டுவதற்கு ஜப்பான் முன்வந்திருப்பது இலங்கையைப் பொறுத்த வரையில் சிறியதொரு ஆறுதல் என்றே கூற வேண்டும்.

இதற்கான முழுமுயற்சிகளையும் எடுத்தமை ஜனாதிபதியையே சாரும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டிருந்த சிறிய விரிசல் நீக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைக்கு நட்புறவு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் ஜப்பான் சர்வதேச வங்கி பிரதிநிதிகள் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் இலங்கையில் முதலீடுகளை அதிகரிப்பதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாக இரு நிறுவன பிரதிநிதிகளும் அறிவித்ததாகவும், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிதா உடனான பேச்சுவார்த்தையில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாகவும் ஜனாதிபதி தனது பாராளுமன்ற உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன், 'கடன் மறுசீரமைப்புப் பணிகளில் மத்தியஸ்தராக ஜப்பான் முன்னணி வகிக்க உடன்பட்டிருப்பது  நல்லதொரு அறிகுறியாகும். கடன் வழங்கிய நாடுகளின் மாநாட்டின் இணைத்   தலைமைத்துவத்தை ஏற்குமாறு ஜப்பானிடம் கோர எதிர்பார்க்கிறேன். கடந்த காலத்தில் நடந்த சில நிகழ்வுகளால் ஜப்பானுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது.

ஜப்பானுடனான உறவை பலப்படுத்த கடந்த சில மாதங்களாக நாம் முயன்று வருகிறோம். ஜப்பான் தற்பொழுது பச்சைக்கொடி காட்டியிருக்கிறது. ஜப்பானுடன் முன்பிருந்த பலமான நட்புறவை மீண்டும் முழுமையாக உருவாக்க நாம் தொடர்ச்சியாக பாடுபட்டோம்' என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையைப் பொறுத்த வரையில் சர்வதேச அணுகுமுறையில் பாரியதொரு முன்னேற்றம் என்றே கூறவேண்டும். நாட்டில் யுத்தம் நிலவிய காலப் பகுதியில் நன்கொடையாளர்கள் மாநாடுகளை நடத்துவதற்கும், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் ஜப்பான் கணிசமான ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தது.

இதற்கான விசேட பிரதிநிதியாக யசூசி அக்காசி செயற்பட்டிருந்தார். பல தடவைகள் இலங்கைக்கு வந்து சென்றிருந்த அவர், நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இருதரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். இவ்வாறான பின்னணியில் ஜப்பான் மற்றுமொரு நெருக்கடி சூழ்நிலையில் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஜப்பானுக்கு வழங்கவிருந்த அபிவிருத்தித் திட்டமொன்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டமையால் இரு நாட்டு உறவுகளில் தற்காலிகமான விரிசல் ஏற்பட்டிருந்தது. எனினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் இந்த நிலைமை மாற்றப்பட்டு மீண்டும் ஜப்பான் எமக்கு உதவ முன்வந்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி 500மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்க முன்வந்திருப்பதாகவும், கடன்மறுசீரமைப்புக் குறித்து உரிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதேசமயம், லண்டன் கிளப், பரிஸ் கிளப் போன்ற தனியார் கடன் வழங்குனர்களிடமிருந்தும் கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்களையும் அரசாங்கம் ஆரம்பிக்கவிருப்பதாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் போன்று உள்நாட்டில் முன்னெடுக்க எதிர்பார்த்திருக்கும் விடயங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்திருந்தார். அதற்கமைய அடிப்படை நுகர்வுப் பொருட்களுக்கு  கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்தல், உள்நாட்டு உற்பத்திகளுக்கு உள்ள தடைகளை நீக்குவதன் மூலம் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரித்தல், அந்நிய செலாவணியை   அதிகரிப்பதற்காக அந்நிய செலாவணி கட்டுப்பாடுகளை சிறிதளவில் தளர்த்தல். அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை குறைப்பதற்கான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தல், மிகவும் சிறப்பான திறந்த பொருளாதார சந்தை பொறிமுறைகளை நடைமுறைப்படுத்தல், வைப்புகளுக்கான  வட்டி வரையறைகளை ஏற்படுத்துவதன் மூலம் வட்டி வீதங்களை குறைந்தளவில் பேணுதல் போன்ற நடைமுறைகளைச் செயற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் என்பதையும் ஜனாதிபதி எடுத்துக் கூறியிருந்தார்.

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதில் வரியின் பங்கு அதிகமாகும். எனவே, வரி வருவாயை அதிகரிப்பது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமை புலனாகிறது.

நாட்டை சரியான பாதையில் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்திருக்கும் நிலையில், அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. 'ஒரு சில குழுக்கள், உலகில் பல தசாப்தங்களுக்கு முன்னர் நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிக்கப்பட்ட கருத்தியல்களை இன்றோடு ஒப்பிட்டுப் பார்க்க முயற்சிக்கின்றன.

அக்காலத்தில், ஒரு சில அரசியல் குழுக்கள் உயிர் பிரியும் சந்தர்ப்பத்தில் உள்ள ஒருவருக்கு நீர்த் துளியொன்றை வழங்கி உயிரைக் காப்பாற்ற வேண்டாம் என்றே கூறினர். பட்டினியால் இறந்த பின்னர் சடலத்தை தோளிலே சுமந்துகொண்டு, நாடு பூராகவும் செல்லுமாறும் கூறினர்.  அந்தக் கருத்தியலை இன்றும் முன்னுதாரணமாகக் கொள்ள ஒரு சில குழுக்கள் முயற்சிக்கின்றன.

உயிர் பிரியும் தறுவாயில் உள்ள பொருளாதாரத்திற்கு மூச்சுக் காற்றை பெற்றுக் கொள்ள உதவி புரியாது, பொருளாதாரம் இறுதி மூச்சையும் இழக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, மக்கள் பட்டினியால் இறக்கும் நிலைமை ஏற்பட்டால், சடலங்களின் மேல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். வரலாறு  முழுவதும் உலகில் எங்கேயும் இவ்வாறான எதிர்பார்ப்புகள் நிறைவேறியது இல்லை என்பதை மட்டும் நான் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவ்வாறு அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டாலும் அந்த அதிகாரம் அதையும் விட துரதிர்ஷ்டவசமான முறையிலே நிறைவடையும்' என்பதையும் ஜனாதிபதி கூறியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த விசேட உரை குறித்து கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு விவாதமும் நடைபெற்றது. இவ்விவாதத்தில் கலந்துகொண்ட பல ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கருத்துக்களுடன் இணங்கியிருந்தபோதும், நடைமுறை ரீதியில் காணப்படும் சவால்கள் குறித்து எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

சம்யுக்தன்

Comments