ஈரானில் தொடரும் கிளர்ச்சிகளும் அமெரிக்க இஸ்ரேலிய அரசியலும்! | தினகரன் வாரமஞ்சரி

ஈரானில் தொடரும் கிளர்ச்சிகளும் அமெரிக்க இஸ்ரேலிய அரசியலும்!

உலகின் புராதன வரலாறு முழுவதும் நாகரீகங்களாலும் அவற்றுக்கிடையிலான மோதலாகவுமே நகர்ந்துள்ளது. இன்றும் அத்தகைய வரலாற்றுக்குள் மூழ்கியுள்ள தேசங்களும் மீண்டெழ முடியாத ஆட்சியாளர்களையும் காணமுடிகிறது. அதேபோல் அத்தகைய நாகரீகங்களால் பிற தேசங்களை மூழ்கடிக்கும் அதிகாரப் போட்டியை முதன்மைப்படுத்தும் தேசங்களையும் வல்லரசுகளையும் காணமுடிகிறது. மேற்கு லகத்திற்கும் கீழைத்தேசத்திற்குமான மோதல் எவ்வாறுள்ளதோ அவ்வாறே இஸ்லாமிய தேசங்களுக்கும் மேற்குலகத்திற்குமான மோதல் நிகழ்ந்து வருகிறது. இஸ்லாமிய நாகரீகத்திற்கு எதிராக எழுந்த பயங்கரவாத போர் மேற்குலகத்தின் ஆக்கிரமிப்புக்கான இன்னோர் வடிவமாக காணப்பட்டது. அதன் நீட்சியாகவே மேற்காசியா முழுவதும் போரும் படையெடுப்பும் முரண்பாட்டுக்கான அடிப்படையும் காணப்படுகிறது. இஸ்லாமிய நாகரீகத்தின் பிறப்பிடமான ஈராக்கினை அழித்தொழித்தது போல் ஈரான் மீதான நடவடிக்கையை முதன்மைப்படுத்தும் மேற்குலகம் பொருளாதார ரீதியிலும் இராணுவ மற்றும் அணுவாயுத அடிப்படையிலும் அதிக நெருக்கடியை ஈரானுக்கு ஏற்படுத்திவருகிறது. ஈரானும் கடந்த காலத்தில் அதிகம் தப்பிப்பிழைத்த போதும் சமகாலத்தில் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சிக்கு முகங்கொடுக்க முடியாது திணறிவருகிறது. இக்கட்டுரையும் ஈரானில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சியையும் அதன் அரசியல் விளைவுகளையும் தேடுவதாக உள்ளது.

17.09.2022ஈரானிய பொலிஸாரால் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்ற குற்றச்சாட்டில் தடுத்துவைக்கப்பட்ட போது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் கோமா நிலையிலிருந்த 22வயதுப் பெண்ணான மாசா அமினி என்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் ஈரான் முழுவதுமாக பெண்களை போராட்டத்துக்குத் தூண்டியது. ஈராக்கின் வடமேற்கிலுள்ள சாகீஸ் நகரைச் சேர்ந்த குர்து இனப் பெண்ணான அமினி ஹிஜாப் சரியாக அணியாததற்காகவும் தளர்வான உடை அணிந்ததற்காகவும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது தாக்குதலில் கோமா நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அமினியின் ஊரான சாகீஸ்ஸில் தொடங்கிய போராட்டம்,  அதனை அடுத்து ஈரான் முழுவதும் பெண்கள் அமினியின் படுகொலைக்கு நீதி கேட்டுப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் ஈரானின் தலைநகரான தெஹ்ரானை மையப்படுத்தி போராட்டம் நிகழ்ந்தாலும் பின்னர் நாடு முழுவதும் பரவியது. இஸ்லாமியச் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்திவரும் ஈரானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஈரான் ஒர் இஸ்லாமிய நாடு என்ற வகையில் அதன் சட்டதிட்டங்கள் தனித்துவமானவையாக அமைந்திருப்பதோடு மேற்குலகத்திற்கு எதிராக இஸ்லாமிய நாகரீகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படை எண்ணத்துடன் செயல்படும் நாடாகவும் ஈரான் விளங்குகிறது. 1979ஆம்  ஆண்டு ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சியானது அமெரிக்காவுக்கு எதிரானதாக அமைந்திருந்ததுடன் அமெரிக்கா ஈரானிய மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டது. அன்றிலிருந்து அமெரிக்கா பாரிய முயற்சிகள் முன்னெடுத்த போதும் ஈரானிய மண்ணில் காலூன்ற முடியாத நிலை காணப்படுகிறது. ஈரானும் அமெரிக்காவின் அனைத்து நகர்வுகளையும் முறியடித்துக் கொண்டே இருகிறது. தற்போது கூட இஸ்லாமியப் பெண்களது போராட்டம் ஈரானிய ஜனாதிபதி இப்ராகிம் ரைசி இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தூண்டுதலினாலேயே நிகழ்வதாக குற்றம்சாட்டியுள்ளார். ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 133பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாகவும் 06.10.2022அன்று மேலும் ஒரு பெண் அமினி கொல்லப்பட்டது போன்றே கொல்லப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.  

ஈரானிய மக்களது போராட்டத்திற்கான அடிப்படைக் காரணங்களை தேடுவதென்பது புதிய ஜனாதிபதி ரைசி பதவியேற்ற காலம் முதல் அவதானித்தல் அவசியமானது. ஏனெனில் இப்ராகிம் ரைசி அடிப்படையில் மனித உரிமையை மதித்த தலைவராக மட்டுமன்றி இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் தலிபான்களுக்கு ஒப்பானவர் என்ற பெயரை கொண்டவர். அத்துடன் அமெரிக்கா உட்பட மேற்குலகத்திற்கு விரோதமான கொள்கையைக் கொண்டவர். அணுவாயுதத்தை உருவாக்குவதிலும் ஈரானை மேற்காசியாவில் வலுவான அரசாக மாற்றவும் கூடியவர் என்ற அடிப்படையில் அபாயமானவராக விளங்குகிறார். கடந்த காலங்களில் அமெரிக்காவும் மேற்கு அணியும் ஈரானுக்கு எதிராக முன்வைத்த நெருக்கடிகள் அனைத்தையும் எதிர்கொண்டதுடன் அணுவாயுத பரிசோதனையை மேற்கொள்ளும் திறனில் ஈரான் முன்னோக்கி நகர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுவாயுத முகவர் அமையம் அறிக்கையிட்டுள்ளது. ஈரான் அணுவாயுத தாயாரிப்புக்கான யூரேனியத்தை செறிவூட்டும் திறனை ஈரான் கொண்டுள்ளதாக அவ்வமையம் தெரிவித்துள்ளது. இதுவே பிரதான பிரச்சினையாக இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் பலதடவை பல தாக்குதலை மேற்கொண்டு ஈரானின் அணுவாயுத பரிசோதனையை முடிவுக்கு கொண்டுவர முயன்றது. ஈரானின் இராணுவத் தளபதி மட்டுமன்றி அணு விஞ்ஞானியையும் தாக்குதலில் அழித்துள்ளது. ஆனால் ஈரானோ அதனையும் தாண்டி தனது அணுவாயுத பரிசோதனையை திட்டமிட்டபடி நகர்த்த முனைகிறது. தற்போது ரஷ்யாவுடனும், சீனாவுடனும் இணைந்து அணுவாயுத பரிசோதனையை மேற்கொள்ள முனைகிறது. சீனாவைக் காட்டிலும் ஈரான் அணுவாயுத விடயத்தில் ரஷ்யாவை அதிகம் தங்கிநிற்க முயலுகிறது. இஸ்ரேலுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மேற்காசியாவைப் பொறுத்த கொள்கையே அதற்கான அடிப்படையாக தெரிகிறது. ரஷ்யா இஸ்ரேலை பகைத்துக் கொண்டாலும் ஈரானைக் கைவிடாது என்ற கொள்கையை ஈரான் நன்கு விளங்கி வைத்துள்ளது. இதுவே மேற்குக்கும் ஈரானுக்குமான நெருக்கடிக்கு காரணமாகும். அதாவது ஈரானின் அணுவாயுதப் பரிசோதனையை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அமெரிக்க-இஸ்ரேல் கூட்டின் உபாயமாகும்.  

குறிப்பாக ஈரானின் பொருளாதார நெருக்கடியை முழுமையாக உருவாக்க முயன்ற அமெரிக்கா அதற்கான போராட்டங்களை ஈரானுக்குள் அதிகரித்தது. அதற்கான ஈரானின் அணுகுமுறையை ஈரான் வெற்றி கொள்ள ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா மீண்டும் அதிகரித்துள்ளது. தங்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க போராடிவரும் ஈரானிய குடிமக்களுக்கும் துணிச்சல் மிக்க பெண்களுக்கும் அமெரிக்கா என்றும் துணைநிற்கும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளுக்கு மேலதிகமாக ஈரானின் உள்துறை, தகவல் தொடர்பு, மற்றும் சட்ட அமைச்சுகளுக்கு பொருளாதார தடைவிதித்துள்ளது. இதன் மூலம் ஈரானியப் பொருளாதார இருப்பினை முழுமையாக அழித்தொழிக்க முடியும் எனவும் ஈரானிய பாதுகாப்புக் கட்டமைப்பை இல்லாது செய்ய முடியுமெனவும் அமெரிக்கா திட்டமிடுகிறது. 

இத்தகைய சூழலில் போராட்டம் பாடசாலை, பல்கலைக்கழகம் மற்றும் தொழில் நிலையங்களையும் நோக்கி விஸ்தரிக்கப்படுவதாகவும் ஹிஜாப் அணிவதை கைவிடுவதாகவும் அதற்கு எதிரான போராட்டமாக மாறிவருவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இஸ்லாமிய மரபுகளைக் கொண்ட ஈரானியர்கள் மட்டுமல்ல மேற்காசிய அராபியர்கள் தமது பண்பாட்டை முழுமையாக மாற்றிக் கொள்வார்களா என்பது பிரதான கேள்வியாகும். ஹிஜாப் என்பதை அணிவதில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள கட்டுப்பாடுகளையே அந்த மக்கள் நிராகரித்துவருகின்றனர். அத்தகைய கட்டுப்பாட்டினால் அமினி கொல்லப்பட்டதற்கு நியாயம் கேட்கிறார்களே அன்றி தமது பண்பாட்டையும் மரபையும் நிராகரிப்பதற்கானதாக அவர்களது போராட்டம் அமையப் போவதில்லை. அத்தகைய மரபுக்குள்ளேயே ஈரானியர்களது அரசியல் இருப்பு காணப்படுகிறது. அமெரிக்காவையும் இஸ்ரேலையும் முன்னிறுத்துகின்ற நிலையை ஈரானிய அரசாங்கம் பலமானதாக முன்னெடுக்குமாயின் போராட்டத்தின் கனதி பலவீனமடையும். அது மட்டுமன்றி அத்தகைய போராட்டங்களுக்கு சரியான நியாயத்தை வழங்க முன்வருவதென்பது பண்பாட்டையோ மரபையோ நிராகரிப்பதாக அமையாது. அதனை அந்த நாட்டு மக்கள் அதாவது அராபியர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை. மாறாக பொலிஸாரின் அடாவடியையும் அரசாங்கத்தின் ஹிஜாப் மீதான அதீத கட்டுப்பாடுகளையும் நிராகரிப்பதாகவே போராட்டம் அமைந்துள்ளது. இதற்கு பதிலாக மேற்கு ஊடகங்களும் அதன் பிரதி ஊடகங்களும் குறிப்பிடுவது போல் ஈரானிய மக்கள் தமது பண்பாட்டை நிராகரிக்கும் போராட்டத்தை முன்னெடுப்பதாக கருத முடியாது.  

எனவே ஈரானிய மக்கள் கிளர்ச்சிக்கு பின்னால் பொருளாதாரச் சுமை மட்டுமன்றி அடிப்படைவாதத்தை அதிகம் கொண்டுள்ள கட்டுப்பாடான ஆட்சியை தகர்ப்பது அதில் காணப்படும் அபாயமான விடயங்களை முடிவுக்கு கொண்டுவருவதென ஈரானிய மக்கள் போராடுகின்றனர்.

அதனை முதன்மைப்படுத்தும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நாடுகள் அரபு பண்பாட்டுக்கு எதிரானதாக ஈரானிய மக்களை மாற்றலாம் என பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேற்கின் பிரசார உத்தி ஒருபுறம் அமைய மறுபக்கத்தில் ஐ.நா.சபையின் மூலம் ஈரானியர்களுக்கு எதிரான பொருளாதாரத் தடையையும் முதன்மைப்படுத்துவதன் மூலம் ஈரானை முழுமையாக தோற்கடிக்க முயலுகின்றன. ஆனால் ஈரானியர்கள் தமது இருப்பினை பாதுகாப்பதற்கு பதிலாக தமது எதிரிகளுக்கு வாய்ப்புக்களையும் தோற்கடிக்கும் வழிமுறைகளையும் அடிக்கடி ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். இது அபாயமான நிகழ்வாகவே தெரிகிறது. ஒரு நாட்டின் குடிமக்களே அந்த நாட்டின் பலமாக அமையும். எதிரி நாடுகளின் ஊடுருவலால் இத்தகைய கிளர்ச்சிகள் ஏற்படுவதாக இருந்தால் அது ஈரானிய ஆட்சியாளர்களது பவலவீனமாகதே அமையும். ஈரானிய ஆட்சியாளரது பலவீனமே அமெரிக்காவுக்கான பலமாக அமையும். எதுவாயினும் ஈரானிய குடிமக்கள் கொல்லப்படுவதும் சிறையில் அடைக்கப்படுவதும் ஈரானிய இருப்புக்கு அபாயமானதாகவே அமையும்.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments