சிங்கள சினிமா, சின்னத்திரையில் அனைவரையும் தன்வசப்படுத்திய தர்ஷன் | தினகரன் வாரமஞ்சரி

சிங்கள சினிமா, சின்னத்திரையில் அனைவரையும் தன்வசப்படுத்திய தர்ஷன்

தர்ஷன் தர்மராஜ் தமிழ் மகன் தமிழ் பெயரை கொண்டு சிங்கள சினிமா முதல் சின்னத்திரை வரை 14வருடங்களாக பெருமளவான சிங்கள இரசிகர்களை கொண்ட சாமான்ய நடிகன். திரையிலும் சின்னத்திரையிலும் இவரின் நடிப்பில் மயங்காதவர் எவரும் இல்லை. நடிப்பு இவரின் இரத்தத்தில் ஊரிப் போய்விட்டது என்று தான் கூறவேண்டும். எந்த பாத்திரமானாலும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடிக்கும் வல்லமை கொண்டவர். சிறுவயதில் இருந்து நடிக்கும் ஆசையை வளர்த்து கொண்டு பாடசாலையிலும் இளமை காலத்தில் பல நாடகங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் தர்மராஜ். நடிக்க வேண்டும் என்ற இலட்சியத்திற்காக கொழும்புக்கு வந்தவர். அவர் கொழும்பில் காலெடுத்து வைக்கும் அக்காலத்தில் இலங்கையில் உள்ளாட்டு இனப்பிரச்சினை யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அக் காலத்தில் கொழும்பில் தமிழர்களுக்கு வேலை தேடிக் கொள்வது குதிரைக் கொம்பாகவே இருந்தது. பொலிஸ் ரிபோட், கிராம சேவகர் ரிபோட் என்று அநேகமான ரிபோட்களை கொடுத்தாலே வேலை தேடிக் கொள்ளலாம். ஆனாலும் தனது குடும்ப சுமையை அவர் தோல் மேல் சுமந்து கொண்டு கொழும்பு வந்தார். குடும்ப சுமையை போக்க மூட்டை தூக்க ஆரம்பித்தார். ஏனென்றால் அந்த தொழிலுக்கு மட்டும் தான் எந்த ரிப்போட்டும் தேவையில்லை. மூடை தூக்கும் சுமையோடு அவரின் மனதில் இன்னொரு சுமையும் இருந்தது. அது அவரின் இலட்சிய பயணமான நடிப்பு. அதை எப்படியாவது அடைய வேண்டும் என்ற தேடலில் இறங்கினார். நடிப்புக்காக அதிக விண்ணப்பங்கள் செய்து நேர்முகத் தேர்வுகளை சந்தித்தவர். தொடர் முயற்சியும் வேற்றுமைகள் துன்பங்களை கடந்து மனதிலுள்ள தெம்புடன் சிரச T.V தயாரிப்பான A-9நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு எவ்வாறு கிடைத்தது என்று எழுத வேண்டும் ஆனால் அதைவிட அவரின் இழப்பின் பின்னரான சமகால நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்தே இப் பத்தி வடிக்கப்பட்டுள்ளது. என்னடா கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்று நினைக்க கூடும். ஏனென்றால் தமிழ் ஊடகங்கள் குறிப்பாக இலங்கையிலுள்ள தமிழ் ஊடகங்கள் தர்ஷனுக்கு பெருவாரியான முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் தினகரன் பத்திரிகை அவருக்கு பல சந்தர்ப்பங்களில் வாய்ப்பை வழங்கியுள்ளன. தினகரன் ஓர் தேசிய பத்திரிகை என்ற நம்பிக்கையை மக்களுக்கு நிரூபித்துள்ளது. 'செந்தூரத்தில்' தர்ஷன் தொடர்பான ஒரு பத்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. சிங்கள சினிமா மன்றும் சின்னத்திரையை தமிழ் மக்கள் வெறுக்கவில்லை. ஆனால் இந்திய திரைப்படங்கள் மற்றும் இந்திய தமிழ் சின்னத்திரையின் வேரூண்டல்கள் மிக ஆழமானதும் பழையையானதாகும். அதன் தாக்கத்திலிருந்து எமது தமிழ் சமூகத்தை மீட்டெடுக்க முடியாத நிலை உள்ளது. அத்தோடு வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சிங்கள மொழியின் பரீட்சியம் மற்றும் மொழியில் விருப்பமற்ற தன்மை இன்றும் தொடர்கிறது. அதனால் என்னவோ தமிழ் மக்கள் அநேகருக்கு தர்ஷனை தெரியவில்லை என்று நினைக்க தோன்றுகிறது. தர்ஷன் பிறந்து வளர்ந்த இறக்குவானை மண் கலைத்துவம் மிக்கது. மலையும் மலைசார்ந்த குறிஞ்சி சூழல் அத்தோடு அமைதியான சூழல் கலைஞர்கள் உருவாவதற்கு உருவாக்கப்படுவதற்கு ஏற்ற சூழலாகும். அத்தோடு இறக்குவானை நகரம் மூவின மக்கள் சேர்ந்து வாழும் ஒற்றுமையின் சின்னமாகும்.

நகரில் தமிழர் நிறைந்து வாழ்கின்றனர். அத்தோடு நகரை சூழ உள்ள பகுதியில் சிங்கள மக்களும் வாழ்வதால் தமிழ், சிங்கள உறவு மிகவும் நெருக்கமாகும். அங்கு நாம் பிரிவினைகளை காணவில்லை. அச்சூழலும் தர்ஷன் சிங்கள நடிப்புத்துறையில் காலூன்ற ஏதுவாக இருந்திருக்கும். சிரேஷ்ட ஊடகவியலாளர் விசு கருணாநிதி முகநூல் குறிப்பில் தர்ஷனின் எளிமையை சிங்கள சினிமா பயன்படுத்திக் கொண்டதென்று எழுதியுள்ளார். சிங்கள சினிமாவைவிட சிங்கள சின்னத்திரை சிங்கள மக்கள் மத்தியில் முன்னணியில் உள்ள ஊடகமாகும். சின்னத்திரையில் எளிமையும் யாதார்த்தமும் நிறைந்திருக்கும். அவரிடம் இருந்த எளிமை தன்மை சிங்கள ரசிகர்களை கவர்ந்திழுத்துவிட்டது. விசுவின் கூற்று உண்மையே.தர்ஷன் தர்மராஜ், தர்மம் அதிகம் செய்தால் எண்ணவோ எமதர்மன் அவரை இவ்வளவு சீக்கிரம் அழைத்து சென்று விட்டார் போலும். எவ்வளவோ சாதனைகளை படைத்து விட்டு சிங்கள சினிமாத்துறை சார்ந்தோர் மரணித்துள்ளனர். ஆனால் தர்ஷனுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம். அவன் தமிழன் என்பதனாலா? இல்லை சிங்கள மக்கள் அந்த கலைஞனை தங்களில் ஒருவனாக கருதிவிட்டதனாலா? அந்த பாசம் அன்பு தர்ஷனின் மறைவு எல்லோரதும் மனதையும் உருக வைத்துவிட்டது. கண்ணீர் சிந்த வைத்துவிட்டது. அவருடன் நடித்த சக கலைஞர்களுக்கும் அவரின் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஜயரத்தின மலர்ச்சாலைக்கு வந்த அத்தனை கலைஞர்களும் ஒருசொட்டு கண்ணீர் சிந்தாமல் போகவில்லை. ரவீந்திர ரந்தெனிய, ரஞ்சன் ராமநாயக்க முதல் அனைத்து கலைஞர்களும் சோகத்தில் முகம் வாடிய தருணத்தில் கண்ணீரை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் சிலர் நினைத்திருக்கலாம் நடிகர்கள் தானே நடிக்கிறார்கள் என்று. இல்லை கட்டுப்பத்த முடியவில்லை அவரின் பிரிவை அவர்களிடம் அவ்வளவு ஒன்றித்து விட்டான் தர்ஷன்.

நடிகை சுசிலா சொல்கிறார்,...

"வயதான என்னை விட்டு விட்டு தர்ஷன் போன்ற இளம் வயதினரை ஏன் கொண்டு செல்கிறாய் என்று கடவுளை திட்டிக் கொள்ளும் அவர், எனது மகன், சகோதரன் என்று விழித்து பேசிய அவர் தர்ஷனை தனது சகோதரனாக நேசித்துள்ளார். தர்ஷனிடம் நேருக்கு நேர் நடித்த நான். சில காட்சிகளில் எனக்கு ஏசி நடித்த பின்னர். ஐந்து நிமிடம் என்னை கட்டித்தழுவி அக்கா உங்களை ஏசி விட்டேன், என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை என்று கூறுவானாம். தர்ஷன் நேர்மையானவன், பொறுப்புடன் வேலை செய்யக் கூடியவர் அவரின் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது என்றார்."

"மட்ட மகே பனத் அரி சுது மெனிக்கத் அரி... ஆத்ம சிய்யக் ஆதரே! அய்யே ஒயாட்ட பன வகே ஆதரே கொடாக்... தர்ஷன் தர்மராஜ் (ஜெயராஜ்) கே அயிமிவீம சுது மெனிகே கோமத தராகன்னே... சுமந்தா

எனக்கு என் உயிரும், சுது மெனிக்கவும் ஒன்று தான்.....

தர்ஷன் அண்ணே (ஜெயராஜ்) நூறு ஆத்மாக்கள் கடந்த அன்பு... உங்களுக்கு உயிரிலும் மேலான அன்பு என்னிடம் உள்ளது... உங்களின் இழப்பை சுது மெனிக்கே எப்படி தாங்கிக் கொள்வது..." "ரெல்ல வெரலட்ட ஆதரே" தொடர் நாடகத்தில் தர்ஷனுடன் நடித்த சமந்தா என்ற நடிகையின் முக புத்தக பதிவில்... சொன்ன வார்த்தைகள் உயிரிலும் மேலாக மதித்து விட்ட தர்ஷனை எமது மக்கள் போற்றவில்லை என்ற குற்ற உணர்வு எப்போதும் நீங்கப்போவதில்லை.

தர்ஷனை பற்றி கூறுவதற்கு வசனங்கள் போதாது. அவர் தமிழராக இருந்தாலும் சிறந்த இலங்கையர். அவனின் கலை வாழ்க்கையில் எப்போது நாட்டின் கீர்த்திக்கு களங்கம் ஏற்படுத்தியவர் அல்ல. எப்போதும் எமது நாட்டின் சம்பிரதாயங்களை கடைபிடித்தவர் "அடேய் நீ இல்லாமல் எனக்கு தனிமை உறுத்துகிறது... அடுத்த ஜெம்மத்தில் நாங்கள் சந்தித்து கதைபோம்... சொல்லாமல் போய்விட்டாய் சோகம் வாட்டுகிறது...

நடிகர் விமல் ஜயகொடியின் பதிவில்...

நிரஞ்சனி சண்முகராஜா...

கண்ணீர் விட்டதை விட அவரால் பேச முடியவில்லை. தர்ஷனின் இழப்பை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை விம்மி விம்மி அழுதார்.

கலையின் மூலம் நாட்டை வெல்லலாம் மக்களின் அன்பை பெற்றுக் கொள்ளலாம் என்பதை தர்ஷன் நிரூபித்து விட்டார். அவரின் வாழ்நாளில் விரும்பியது எக்ஸன், கட் மற்றும் இரசிகர்களின் கை தட்டும் ஒசையை மட்டுமே என்று நிரஞ்சனி கூற, இறுதி கிரியையில் அனைவரும் கைதட்டி ஒசை எழுப்பினர். இது கலைஞனுக்கு கிடைத்த மாபெரும் கௌரவமாகும்.

இவ்வாறான அநேக பதிவுகளில் தர்ஷனை நினைவு கூரும் கலைஞர்களின் வார்த்தைகள் எமது கண்களில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. சிங்கள சினிமா சின்னத்திரை உலகில் தர்ஷனின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதே எமது ஆணித்தரமான கருத்தாகும். இவ்வளவு கலைஞர்களையும் சிங்கள மக்களையும் கவர்ந்த நடிகர் தர்ஷன் கடந்து வந்த பாதையும் சந்தித்த துன்பங்களும் துயரங்களும் வார்த்தைகளில் சுருக்கிவிட முடியாது.

தர்ஷனின் உண்மையான பெயர் லிங்கநாதன் தர்மராஜ், அவரின் அப்பா திருமண பந்தல் மற்றும் மணவறை அமைத்தல் தொழில் செய்து வந்தவர். தர்மராஜ் இறக்குவானை சென். ஜோன்ஸ் தமிழ் (தேசிய பாடசாலை) கல்லூரியில் க.பொ.த.சாதாரண தரம் வரை படித்துள்ளார். ஒரு தம்பியும் தங்கையும். தங்கை நாட்டிய ஆசிரியர், யாழ். பல்கலைக்கழகத்தில் நாட்டியத்துறையில் பட்டம் பெற்றவர். தம்பி அப்பாவின் தொழிலை செய்து வருகிறார். மனைவி ஆசிரியர். ஒரு மகள்.

1997ம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் நடப்பதற்கு அழைப்பு வருகிறது. அச் சந்தர்ப்பத்தில் தர்ஷன் தன் தொழிலை விட்டு படத்தில் நடிக்க ஆயத்தமானார். ஆனால் படபிடிப்பு நடக்கவில்லை. மீண்டும் சொந்த ஊரான இறக்குவானைக்கு செல்கிறார். அங்கு செய்வதற்கு ஒன்றுமில்லாமல் 1998ம் ஆண்டு மீண்டும் கொழும்புக்கு வருகிறார். ஒரு வேலையும் இருக்கவில்லை. நாட்டாமை வேலைதான் செய்தார். ஏழு அடி கென்டேனரிலுள்ள பொருட்களை தனி மனிதனாக இறக்கியுள்ளார். அதிகாலையிலே மீன் கடைக்கு சென்று மீன் பெட்டிகள் இறக்குவேன் அதுவும் போதாததால் வெங்காயம், கிழங்கு மூடைகளும் இறக்குவேன். என்னுடன் வேலை செய்யும் நாட்டாமைமார்களில் பல்வேறுபட்டவர்கள் இருந்தார்கள் தினமும் மது அருந்துபவர்களே அதிகம். எனக்கு தங்குமிடத்துக்கான பணம் செலவழிக்க பணம் இருக்கவில்லை. புறக்கோட்டையில் இருந்து ஆமர் வீதிக்கு நடந்து சென்று அங்கிருந்த பலகை கடையில் தான் இருப்பேன். ஆனாலும் நடிக்க வாய்ப்பு தேடுவதை கைவிடவில்லை. நிறைய நேர்முக தேர்வுகளுக்கு செல்வேன். நான் நாட்டாமை வேலை செய்து 12ரூபாவிற்கு ஒரு கண்ணாடியை வாங்கினேன். அதற்கு முன்னால் நின்று கொண்டு வசனம் பேசி நடிப்பேன் என்று சொல்லும் தர்ஷன். ஒரு நாள் ஒரு நாட்டாமைக்கு சத்திர சிகிச்சைக்கு பண தேவைப்பட்டு என்னிடம் வந்து கேட்டார். நான் குருவி போல் சேர்த்து வைத்திருந்த 9,460/= ரூபா பணத்தை அவர் சொன்ன சோகக் கதையை கேட்டு தங்கையின் சத்திர சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை அவருக்கு கொடுத்தேன். இன்று அந்த சிங்கள நாட்டாமை கோடிஸ்வர வர்த்தகர். புறக்கோட்டையில் அவரின் புடவை கடை ஒன்று இருக்கிறது. அவரின் கடையில் என்னுடைய படம் மட்டும் தான் இருக்கிறது வேறு எந்த கடவுளின் படமும் இல்லை. என்னுடன் அக்கடி கதைப்பார்.

அப்படி இருக்கையில் 1999ஆம் ஆண்டு சிரச T.V தயாரித்த A-9நாடகத்துக்கு புதிய முகங்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து நானும் சென்றேன். 108பேர் வந்திருந்தனர். நேர்முகத் தேர்வில் 20அடி கட்டடத்தில் இருந்து குதித்து பாய முடியுமா என்று கேட்டார், ஓம் என்றேன் தேர்ந்தெடுத்தார்கள். அன்று அந்த படத்தின் இயக்குனர் சிட்னி சந்திரசேகர சொன்னார், தர்ஷன் நீர் இலங்கையிலே சிறந்த நடிகனாக வருவாய் என்று, அவரே என் பெயரை தர்ஷன் தர்மராஜ் என்று வைத்தார். இவ்வாறு தான் சிங்கள சினிமா துறைக்கு வந்ததா தர்ஷன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதன் பிறகு மச்சான், சரோஜா, மரியானா, சுனாமி, மாத்தா போன்ற படங்கள் மற்றும் சின்னத்திரை நாடகங்கள் ​போன்றவற்றில் நடித்துள்ளார். தனது நடிப்பு வாழ்க்கையில் சிறந்த நடிகருக்கான சிங்கள சினிமா விருதை பெற்ற ஒரே தமிழராவார். அத்தோடு சர்வதேச மற்றும் பல விருதுகளை பெற்றுள்ளார். இறந்த பின்னர் வாழும் மனிதர்களில் தர்ஷனை நாம் முன்னிலைப்படுத்தலாம். எம்.ஜி.ஆர்க்கு பின்னர் நாம் கண்ட பெரும் ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்தவர் தர்ஷனாவார். தான் அனுபவித்த கஷ்டங்களை மறைத்து கொண்டு இரசிகர்களை சந்தோஷப்படுத்திய தர்ஷனை நினைக்கும் போது சார்லி சப்லினின் வாழ்க்கையை திரும்பி பார்க்க வேண்டியுள்ளது. சார்லி சப்பிலினின் வாழ்க்கையும் பெரும் துன்பங்களும் சோகங்களும் நிறைந்தது. ஆனால் அனைவரையும் சிரிக்க வைத்து சந்தோசப்படுத்தியவர். தர்ஷனும் அதே போல் இருக்கிறார். நாட்டில் புரையோடிப்போயுள்ள புற்றுநோயான இனப்பிரச்சினை தொடர்பில் தர்ஷனின் கருத்து வரவேற்கத்தக்கது.

அது என்ன கருத்து என்ற கேள்வி எழலாம்? இரு இனங்களுக்கிடையில் புரிதல் இல்லாமல் அதை மனதளவில் பூட்டிவைத்து வைராக்கியம் கொண்டதாலே யுத்தம் வெடிக்க காரணமாகும். அது மட்டுமல்ல சிங்களவர்கள் தமிழர்களை இலங்கையர் என்று வட்டத்துக்குள் அடக்கவில்லை. நாமும் தமிழர், சிங்களவர் என்ற வேறுபாட்டை வளர்த்தோமே தவிர அனைவரும் இலங்கையர் என்ற எண்ணத்தை வளர்க்கவில்லை. நாம் கொடுப்பதே எமக்கு திரும்ப கிடைக்கும் அது போலவே பெரும்பான்மை மக்களின் மனதிலும் மாற்றம் வேண்டும் என்றார். ஒரு பொலிஸார் தன்னை செக் பண்ணும் போது, நீர் யார் என்று கேட்டபோது நான் இலங்கையர் என்று கூறியும் பொலிஸார் அதை ஏற்றுக்கொள்ளாமல் தனது ID வை கேட்டதாகவும் சொன்னார். இவ்வாறான கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லப்படவில்லை. சிங்கள மக்கள் அவர் கூறிய கருத்தை ஏற்றுக் கொண்டதாலே அவரை இவ்வளவு உச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

02ம் திகதி இப் பூவுலகை விட்டு சென்ற தர்ஷனை பற்றி இந்த பத்தி எழுதும் வரை சிங்கள ஊடகமும், சிங்கள மக்களும் அவர் தொடர்பில் தெரிவிக்கும் கருத்துக்களை உற்று நோக்கினால் தர்ஷனின் நேர்மையும் பழகும் பாங்கும் நாம் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள அநேகம் உள்ளன. இதே தர்ஷன் இந்திய சினிமாத்துறையில் தமிழ் சினிமாத்துறைக்கு சென்றிருந்தால் கூட நாம் இவ்வளவு உயர்த்தில் வைத்திருப்போமோ என்று நினைக்க தோன்றுகிறது. தர்ஷனை தமிழர்கள் அறிந்தததை விட சிங்கள மக்கள் நன்கறிந்து வைத்துள்ளனர்.

தர்ஷன் நீர் எதுவும் பேசாமல் எம்மை அதிகம் பேச வைத்து எழுத வைத்து விடைபெற்று விட்டாய். நீ வாழ்த்ததை விட இறந்த பின்னர் எல்லோர் மனதிலும் குடி கொண்டு விட்டாய் போய்வா மகனே... இப் பூமியில் உன் நாமத்தையும் இரசிகர்கள் மனதில் நீங்காத நினைவுகளையும் விதைத்துவிட்டாய்...

ஸ்ரீ

Comments