வீட்டுத் தோட்டம்; மண் வளத்தை பாதுகாப்பது எப்படி? | தினகரன் வாரமஞ்சரி

வீட்டுத் தோட்டம்; மண் வளத்தை பாதுகாப்பது எப்படி?

எந்தவொரு பயிர்ச்செய்கையையும் மேற்கொள்வதற்கு மண் மிக முக்கியம். மண்ணில்லாத வேளாண்மை போன்றவற்றைத் தவிர ஏனைய அனைத்து வகையான பயிர்ச்செய்கைகளுக்கும் மண் மிகவும் முக்கியமானதாகும். ஒரு வீட்டுத்தோட்டத்தைப் பராமரிக்கும் போது மிக முக்கியமாக கவனஞ் செலுத்த வேண்டிய விடயங்களில் ஒன்று மண்ணின் நிலைபேறான உற்பத்தித்திறனைப் பராமரித்துக் கொள்வதாகும். அதாவது நமது தோட்ட மண்ணானது தொடர்ச்சியாக பயிர்களை உற்பத்தி செய்வதற்கு ஏற்றதாக இருத்தல் வேண்டும். நம்மில் பலர் வீட்டுத்தோட்டங்களைப் பராமரிக்கும் போது ஏற்படக் கூடிய முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று மண்ணில் பயிர்கள் வளர்வதற்கு ஏற்ற சூழல் இல்லாமையால் எதிர்பார்க்கும் பலாபலன்களைப் பெற்றுக் கொள்ள முடியாது போவதாகும். எனவே மண்ணை பயிர்கள் வளரக்கூடிய ஒரு ஊடகமாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். எனவேதான் இக்கட்டுரைத் தொடரில் மண் பற்றிய சில விபரங்களை இன்று நாம் உங்களுக்குத் தருகின்றோம்.  

மண் என்பது பல்வேறு பருமனைக் கொண்ட கனிப்பொருட் துணிக்கைகள், சேதனப் பொருட்கள், உயிர்  

வாழும் உயிரினங்கள் ஆகியவற்றைக் கொண்டதொரு கலவை ஆகும். பேராசிரியர் சுல்தான் அகமட் குறிப்பிடுவது போன்று உண்மையில் மண் என்பது ஓர் உயிரினம் ஆகும். ஓர் உயிர் வாழும் அங்கியின் சகல பண்புகளும் மண்ணிலும் காணப்படுகின்றது. எனவேதான் மண்ணையும் ஓர் உயிருள்ள ஜீவன் போன்று பராமரிக்க வேண்டியது நமது பொறுப்பாகும். எனவே காய்கறிகளையோ அல்லது ஏனைய பயிர்களையோ பயிர்செய்யும் போது எதிர்கொள்ளும் மண் தொடர்பான பிரச்சினைகளையும், அவற்றிற்கான சில தீர்வுகளையும் நாம் தருகின்றோம். வளமான மண்ணானது பயிர்களுக்கு வழங்கும் சில நன்மைகளை சுருக்கமாகப் பின்வருமாறு குறிப்பிட முடியும்:  

* தாவர வேர்களைத் தாங்கி நிற்பதற்கான பௌதீகக் கட்டமைப்பை வழங்குகின்றது.  

* தாவரங்கள் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான போசனை களையும், நீரையும் பிடித்து வைத்திருந்து  பயிர்களுக்குத் தேவை யான போது அவற்றை வழங்குகின்றது.  

* ஆரோக்கியமான தாவர வேர்கள் சுவாசிப்பதற்கு அவசியமான ஒட்சிசனை வழங்க அல்லது   காற்றோட்டம், போசணைகளை பயிர்கள் உறிஞ்சுதல் ஆகியவற்றிற்கு மண்ணிலுள்ள துளைகள்  உதவுகின்றன.  

* மண்ணில் வாழும் உயிரினங்கள் நிலைபேறாக நிலைத்திருக்கவும், போசணைக் கூறுகள் சிதைவடையும் போது அவற்றைப் பயிர்களுக்கு வழங்கவும் சேதனப் பொருட்கள் உதவுகின்றன.  

* மண்ணானது தாவர ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதோடு, நோய்களை எதிர்த்து வளரவும் பயிர்களுக்கு  உதவுகின்றன.  

எமது தோட்டங்களில் பயிரிடும் போது நாம் எதிர்பார்ப்பது போன்று சிறந்த பயன்களை பயிர்கள் தராது போகலாம். இதற்கு பல காரணங்களைக் குறிப்பிடலாம். சில வேளைகளில் நீர் முறையாக வடிந்து செல்லாது தேங்கி நிற்கலாம், பயிர்கள் செழிப்பாக வளராதிருக்கலாம், போதியளவில் மேல் மண் இல்லாதிருக்கலாம், மண்ணின் ஆழம் குறைவாகக் காணப்படலாம், மண்ணில் நோய்கள் அல்லது பீடைகள் போன்றன காணப்படலாம், மண் இறுக்கமாகக் காணப்படுவதனால் காற்றோட்டம் குறைவாகக் காணப்படலாம். இவ்வாறான பிரச்சினைகளை இனங் கண்டு, அவற்றைத் தீர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். பொதுவாக மண்ணின் பண்புகளானது தோட்டத்திற்கு தோட்டம், இடத்திற்கு இடம் அல்லது வலயத்திற்கு வலயம் மாறுபடும். இதனையும் கவனத்திற் கொள்வது அவசியமாகும். பெரும்பாலான மரக்கறிகளையும், பழங்களையும் பயிர் செய்வதற்காக சேதனப் பொருட்கள் அடங்கிய வளமான மண்ணைப் போன்றே, நீர் நன்கு வடிந்து செல்லும் மண்ணும் அவசியமாகும். ஆனால் அவ்வாறான மண் எமக்கு எப்போதும் கிடைக்காது. எனவே அதற்கேற்ப நாம் காய்கறிகளைப் பயிரிட வேண்டும். பொதுவாக மண்ணில் ஏற்படக் கூடிய சில பிரச்சினைகளையும் அவற்றை எவ்வாறு தீர்த்துக் கொள்ள முடியும் என்பதையும் இனி கவனிப்போம்.  

மண்ணில் நீர் நன்கு வடிந்து செல்ல வேண்டும்  

ஓர் ஆரோக்கியமான மண்ணில் நீர் நன்றாக வடிந்து செல்ல வேண்டும். நீர் தேங்கி நிற்குமாயின் பல பிரச்சினைகள் ஏற்படலாம். மண் மேற்பரப்பில் நீர் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தேங்கி நிற்கலாம். தோட்டத்தின் இயற்கையான அமைவிடத்திற்கமைய மண்ணின் மேற்பரப்பில் தொடர்ச்சியாக நீர் தேங்கி நிற்கலாம். இவ்வாறு தொடர்ச்சியாக நீர் தேங்கி நிற்பதற்கு பல காரணிகளைக் குறிப்பிட முடியும். முதலாவதாக மண்ணில் நீர் வடிந்து செல்லும் தன்மை குறைவாகக் காணப்படலாம். எல்லாவகையான மண்களிலும் நீரானது ஒரே வேகத்தில் வடியாது. உதாரணமாக களி மண் அதிகளவிற் காணப்படும் போது நீர் குறைவாகவே வடியும். எனவே நீர் தேங்கி நிற்கும். ஆனால் இதற்கு மறுதலையாக கற்பிட்டி போன்ற இடங்களில் அதிகளவிற் காணப்படும் மணல் மண்ணில் நீர் மிக விரைவாக வடிந்தோடி விடும். இவ்விரண்டு நிலைமைகளுமே பயிர்களிற்கு ஏற்றதல்ல. எனவே இவை இரண்டிற்கும் இடைப்பட்ட நிலைமையே மிகச் சிறந்ததாகும். பொதுவாக இருவாட்டி மண்ணில் நீரின் வடிந்தோடும் தன்மை திருப்திகரமான மட்டத்திற் காணப்படும்.  

மண்ணில் நீர் வடிந்து செல்லும் வேகத்தை அறிந்து கொள்ளல்  

உங்கள் மண் களித்தன்மையானதா அல்லது மணற் தன்மையானதா என்பதை மண்ணை விரல்களிற்கிடையே நசித்து அறிந்து கொள்ள முடியும். பொதுவாக மணலை நசிக்கும் போது சொரசொரப்பை உணர்ந்து கொள்ள முடியும். இன்னொரு இலகுவான முறையிலும் இதனை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். இதற்காக முதலில் ஒரு மெகா குளிர்பான போத்தலில் மேற்பாகத்தை வெட்டி அகற்றிய பின்னர் அதன் அடிப்பகுதியில் சில துளைகளை இடுங்கள். இப்போத்தலில் முக்கால் பாகம் வரை உங்கள் தோட்ட மண்ணை நிரப்பிய பின் மண்ணின் மேல் நீரை ஊற்றவும். இந்நீரானது மிக விரைவாக துளைகளின் ஊடாக வடிந்து செல்லுமாயின் அம் மண்ணில் அதிகளவான மணல் காணப்படுவதை ஊகித்துக் கொள்ள முடியும். நீர் பல மணித்தியாலங்களாகியும் வடியாமற் காணப்படுமாயின் அம்மண் களித்தன்மையானது என்பதை ஓரளவு ஊகித்துக் கொள்ள முடியும்.  

உங்கள் தோட்ட மண் களித்தன்மையானதா, மணற் தன்மையானதா அல்லது நல்ல நீர் வடிப்பு கொண்ட இருவாட்டி மண்ணா என்பதை இன்னொரு வகையிலும் அறிந்து கொள்ள முடியும். தோட்ட மண்ணுடன் சிறிதளவு நீரைச் சேர்த்து அதனை உருண்டையாகப் பிடிக்கவும். உருண்டையாகப் பிடித்து நசித்த பின்னர் கையை விரிக்கும் போது உருண்டை உடையாது கெட்டியாகக் காணப்படுமாயின் அது களிமண். கையை விரிக்கும் போது பல துண்டங்களாக உதிருமாயின் மணல் மண். நல்ல இருவாட்டி மண்ணாயின் உருண்டையானது தளர்வாகக் காணப்படும்.  

இவ்வாறு உங்கள் மண்ணில் நீர் மிக அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வடிந்து செல்லுமாயின் அதனைத் திருத்திக் கொள்வதற்கு மிகவும் இலகுவான வழி சேதனப் பொருட்களை மண்ணுடன் கலந்து விடுவதாகும். களிமண் அதிகளவிற் காணப்படும் போது மணல் மண்ணையும், சேதனப் பசளைகளையும் அதனுடன் சேர்த்து அதனை சீர்படுத்திக் கொள்ள முடியும்.  

சில நேரங்களில் மழை பெய்யும் போது மாத்திரம் தற்காலிகமாக நீர் தேங்கும் இடமாக உங்கள் தோட்டம் காணப்படுமாயின் அதிலிருந்து பாதுகாப்பதற்கு நீங்கள் இரண்டு வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். முதலாவதாக உயரமான பாத்திகளை அமைத்து, அதில் தேவையான காய்கறிகளை நடுகை செய்து கொள்ள முடியும். அல்லது வளர்ப்புப் பைகள், சாடிகள், அல்லது அரிசிப் பைகள் போன்றவற்றில் தேவையான பயிர்களை நடுகை செய்து கொள்ள முடியும். இவ்வாறு பைகளில் அல்லது சாடிகளில் நடும் போது அவற்றின் அடிப்பகுதியில் துளைகளை இடுவதற்கு மறந்து விட வேண்டாம்.  

உங்களது தோட்டத்தின் அமைவிடத்திற்கமைய சில இடங்களில் நீர் தேங்கி நிற்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீரை விரும்பும் பயிர்களான கங்குன், கொஹில போன்றவற்றை நட்டு பயன் பெற முடியும்.  

வளமான மேல் மண் இல்லாமை  

சில சந்தர்ப்பங்களில் மண்ணரிப்பினாலோ அல்லது கட்டடங்களைக் கட்டும் போதோ வளமான மேல் மண் அகற்றப்பட்டு, வளமற்ற கீழ் மண் காணப்படலாம். இதனால் இவ்வாறான இடங்களில் பயிர்களை நடுவதால் எதிர்பார்க்கும் பயனைப் பெற முடியாது போய்விடும். இதனால்தான் புதிய வீடுகளுக்கருகே பயிர்களை நடும் போது அவை செழிப்பாக வளர்வதில்லை. இவ்வாறான இடங்களிற்கு வளமான மண்ணை வெளியிலிருந்து கொண்டு வந்து இடல் வேண்டும். மண்ணைக் கொண்டு வந்து இடுவது சாத்தியமற்ற போது பூச்சாடிகள், வெற்று உறைகளில் பயிர்களை செய்கைபண்ணி அவ்விடங்களில் வைத்து நிலத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்ளவும். அதேவேளை சேதன உரங்களை தொடர்ச்சியாக இட்டு மண்ணைச் சீராக்கிக் கொள்ள முடியும்.   

சில சந்தர்ப்பங்களில் எமது வீட்டுத்தோட்ட மண்ணில் கற்கள், சரளைக் கற்கள் போன்றன கலந்த வளமற்ற குவிக்கப்பட்ட மண் காணப்படலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் பூச்சாடிகள், வெற்று உறைகளில் பயிர்களை செய்கைபண்ணி அவ்விடங்களில் வைத்து நிலத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்ளவும்.  

மண் இறுக்கமடைதல்  

சிலர் தோட்டத்திற்கு முதலாவது தடவை நீருற்றிய பின் மண் நன்கு உலர்ந்த பின்னரே அடுத்த தடவை நீரூற்றுவர். இவ்வாறு தொடர்ச்சியாக மண் நன்கு உலர்ந்து பின்னர் நீரூற்றுவதால் மண்ணின் மேற்பரப்பு இறுக்கமடையும். இதனால் நீர் வடிந்து செல்வது குறைவதோடு, காற்றோட்டமும் குறையும். எனவே வேர்கள் சுவாசிப்பதற்கு ஒட்சிசன் குறைந்து அவை தாவரங்கள் செழிப்பாக வளர்வதற்கு தடையாக அமையலாம். இதனை நிவர்த்தி செய்வதற்கு மண்ணில் ஓரளவு ஈரப்பதன் காணப்படும் போதே அடுத்த தடவை நீரூற்ற வேண்டும். இல்லாவிடில் காய்ந்து புற்கள், வைக்கோல், பயிர் மீதிகள் போன்றவற்றை மண்ணில் மேற்பரப்பில் இட வேண்டும். இதனை பத்திரக்கலவை இடல் என அழைப்போம். இதனால் மண்ணின் மேற்பரப்பிலிருந்து நீர் ஆவியாவது தடுக்கப்படுவதோடு, மண்ணில் ஈரப்பதன் பாதுகாக்கப்பட்டு, மண் இறுக்கமடைவதும் தடுக்கப்படும். வசதியிருப்பின் பொலித்தீன் போன்றவற்றினால் பத்திரக் கலவை இட முடியும். அதேபோன்று  வீட்டுத்தோட்டத்திற்கு நீர்ப்பாசனம் செய்வதற்கு சொட்டு நீர்ப்பாசனம், விசிறற் பாசனம் போன்ற நவீன முறைகளைப் பயன்படுத்தலாம். இதனால் மண்ணின் மேற்பரப்பு இறுக்கமடைவது தடுக்கப்படும். சில நேரங்களில் கட்டடங்களை நிர்மாணிப்பதற்காக பார இயந்திரங்களைப் பயன்படுத்தும் போதும் இந்நிலை ஏற்படலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மண்ணை நன்கு கிளறி போதியளவில் சேதனப் பசளைகளை இட்டு, அதனை சீர்திருத்திக் கொள்ள முடியும்.  

மண் அமிலத்தன்மை  

அதிகளவான மழை பெய்யும் பிரதேசமான மலை நாட்டிலுள்ள மண் பெரும்பாலும் அமிலத் தன்மையானதாகவே காணப்படும். காய்கறிப் பயிர்களின் வளர்ச்சிக்கு அதிகளவான அமிலத் தன்மை உகந்ததல்ல. இவ்வாறான இடங்களில் காய்கறிப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முன்னர் நீர்ச்சுண்ணாம்பை இட்டு மண்ணை சீர் திருத்திக் கொள்ள வேண்டும். இதனால் நல்ல விளைச்சலைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.  

மண் ஆழம்  

மண் ஆழமானது இடத்திற்கிடம் வேறுபடலாம். மண் ஆழம் என்பது மேல் மண்ணிற்கும், தாய்ப் பாறைகளிற்கும் இடையேயுள்ள தூரமாகும். சில நேரங்களில் வன்படைகள் காணப்படும் போது ஆழம் மட்டுப்படுத்தப்படும். தாய்ப்பாறையானது மேல் மண்ணிற்கு அருகிலேயே காணப்படும் அல்லது மேல் மண்ணிலிருந்து சில அங்குல ஆழத்தில் வன்படை காணப்படலாம். இதனால் மண் ஆழம் குறையும்.

இவ்வாறு குறைந்த ஆழமுள்ள மண் காணப்படும் இடங்களில் வேர் அதிக ஆழத்திற்கு பரவாத மரக்கறிப் பயிர்களை நடலாம். ஆனால் இவ்விடங்களில் பல்லாண்டுப் பயிர்களான பழப்பயிர்களை நடுகை செய்யக் கூடாது. அத்துடன் மண் ஆழம் குறையும் போது மண்ணில் காணப்படும் நீரின் அளவும் குறையும். எனவே நீர்ப்பாசனம் செய்யும் போது மண் ஆழத்தைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.  

மண்ணரிப்பு  

சாய்வான இடங்களில் அமைக்கப்படும் தோட்டத்திலுள்ள மண் அதிக மழை பெய்யும் போது கழுவிச் செல்லப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக வளமான மேல் மண்னே இவ்வாறு அரித்துச் செல்லப்படும்.

எனவே மண்ணரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது சமவுயரக் கோடுகளின் வழியே பாத்திகளை அமைத்தல், சரிவிற்குக் குறுக்காக பாத்திகளை அமைத்தல், உரி மட்டைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி பாத்திகள் கழுவிச் செல்லப்படுவதைத் தவிர்த்தல் போன்றவற்றை மேற்கொள்ள முடியும். மண் பாதுகாப்பு முறைகள் அனைத்தையும் பின்பற்றி பயிரிடும் போது நல்ல பயனைப் பெறலாம்.

அதேபோன்று மண் கழுவிச் செல்லப்படுவதை குறைப்பதற்கு நிலத்தை மூடி வளரும் பயிர்களான வல்லாரை, பொன்னாங்கண்ணி போன்றவற்றைப் பயிரிடுதல் அல்லது புற்களைப் பதித்தல் அல்லது தென்னை உரி மட்டைகளை பதித்தல் போன்றவற்றை மேற்கொள்ள முடியும். சேர, வெட்டிவேர் போன்றவற்றையும் வேலிகளாக இங்கு நடவு செய்ய முடியும்.

மண்ணில் சேதனப் பொருட்கள்குறைவாகக் காணப்படல்

வீட்டுத்தோட்டத்திற்கு நாம் பெரும்பாலும் செயற்கை உரங்களை இடுவதில்லை. சேதன உரங்களையே இடுவோம். எனவே வீட்டுத்தோட்ட மண்ணில் சேதனப் பொருட்கள் அதிகளவில் இருத்தல் வேண்டும். மண்ணை வளப்படுத்திக் கொள்ள எத்தனையோ வழி முறைகள் உள்ளன. கால்நடைகளின் கழிவுகளை இடல், கழிவுகளை கூட்டெருவாக்கி இடல், கருக்கிய உமியை இடல், மரங்களை தகனமூட்டி கரியை இடல் போன்ற பல முறைகள் உள்ளன. இவற்றை நாம் பிறிதொரு கட்டுரையில் தெளிவாக அறிந்து கொள்வோம்.

சீரங்கன் பெரியசாமி
ஓய்வுநிலை பணிப்பாளர்,
விவசாயத் திணைக்களம்

Comments