தேர்தலொன்றுக்கு செல்வதை விடவும் பொருளாதார மீட்சிக்கே முன்னுரிமை | தினகரன் வாரமஞ்சரி

தேர்தலொன்றுக்கு செல்வதை விடவும் பொருளாதார மீட்சிக்கே முன்னுரிமை

தேர்தலொன்றுக்குச் செல்வதைவிட பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் எம்முடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கே: தேசியப் பேரவை பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இது உதவுமா?

பதில்: ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த முயற்சியை வெற்றியடையச் செய்வது அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பொறுப்பாகும். இது இலங்கைக்கு மிகவும் சவாலான காலகட்டம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். யார் சரியானவர், யார் தவறு செய்தவர், எங்கே தவறு என்ற வரலாற்றைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி மக்களுக்கு நியாயமான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்ய வேண்டும்.

எனவே, இத்தருணத்தில் ஒன்றிணைந்து செயற்படுவது அனைவரின் பொறுப்பாகும். நாடு ஏற்கனவே பாரிய சவாலுக்கு முகங்கொடுத்துள்ளது. இலங்கையின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தேர்தல் அறிவிக்கப்பட்டதும், பிரிந்து சென்று போட்டியிடலாம். தற்போது நாடு எதிர்நோக்கும் எரியும் பிரச்சினைகளுக்கு கைகோர்த்து தீர்வுகளை வழங்குவது அனைவரினதும் பொறுப்பாகும்.

கே: தேசியப் பேரவையின் அங்குரார்ப்பணக் கூட்டத்தை விமல் வீரவன்ச தலைமையிலான சுயாதீனக் குழு மற்றும் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுயாதீனக் குழுவினர் ஆகியோர் புறக்கணித்திருந்தனர். இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: அவர்கள் அதில் கலந்து கொண்டால் நல்லது. பல சித்தாந்தங்களைக் கொண்ட அரசாங்கமாக இருக்கும்போது, அவர்கள் குறிப்பிட்ட சித்தாந்தம் முக்கியத்துவம் பெற வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் நாம் தற்பொழுது கட்சி அரசியல் செய்யும் நிலையில் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மீண்டும் ஒருமுறை அவர்கள் இது பற்றி மறுபரிசீலனை செய்து, நாடு முன்னேறுவதற்கு வழிகாட்டல்களை வழங்குவது நாட்டு மக்களுக்கே நன்மையாக அமையும் என நான் நினைக்கின்றேன். அப்படிச் செய்வதன் ஊடாகவே அரசாங்கம் நாட்டுக்காக சிறந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். வெறுமனே தவறுகளைக் கண்டுபிடிக்கும் அரசியலை முன்னெடுப்பது அரசாங்கத்திற்கோ அல்லது எதிர்க்கட்சிக்கோ அல்லது இலங்கையில் உள்ள மக்களுக்கோ உதவுவதாக அமையாது.

கே: அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்த தீர்மானம் குறித்த பல்வேறு விமர்சனங்கள் இருந்தன. சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்க உயர் பாதுகாப்பு வலயம் அவசியமா?

பதில்: இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்களைத் தவிர வேறு எந்தவொரு தனிநபரும் அது தேவையா இல்லையா என்று கருத்துத் தெரிவிக்க முடியாது என்று நினைக்கிறேன். உயர்பாதுகாப்பு வலயம் எதுவாக இருக்க வேண்டும்? இது தேவையா அல்லது இல்லையா என்பதை முடிவு செய்வதில் அரசியல்வாதிகள் தலையிடக் கூடாது.

அதுபற்றி முடிவெடுப்பது பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிசாரின் பொறுப்பு என்று நினைக்கிறேன். அது தேவை என்று அவர்கள் கருதினால், அதைச் செய்ய அனுமதிக்க வேண்டும். அதை அகற்றுவதற்கான நேரம் இது என்று அவர்கள் நினைத்தால், அவர்கள் அதனை அகற்றலாம்.

இருப்பினும், ஏதேனும் அநீதி நிகழ்ந்தால் அரசியல்வாதிகள் என்ற ரீதியில் நாம் தலையிடலாம். கடந்த காலத்தைப் பார்க்கும் போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஒருதலைப்பட்சமான அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது. பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி அவர்கள் பேசுவது நன்றாகவும், மனிதாபிமானமாகவும் இருந்திருக்கும்.

கே: அரசு அதிகாரிகளுக்கு சமூக ஊடகங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது அவர்களின் பேச்சு சுதந்திரத்தை மீறுவதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்ய அரசு துறை அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. நீங்கள் கருத்துத் தெரிவிக்க விரும்புகிறீர்களா?

பதில்: இலங்கையின் உச்சநீதிமன்றத்திற்கோ அல்லது நீதித்துறையின் கட்டமைப்புக்கோ சென்று தமது மனித உரிமைகள் மீறப்பட்டால் நீதியைப் பெறுவதற்கு அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. நாங்கள் அதைத் தடுக்க விரும்பவில்லை. மறுபுறம், அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கான நடத்தை நெறிமுறை உள்ளது. எனவே, அந்த நடத்தை விதிகளுக்குள்ளேயே விஷயங்களும் இருக்க வேண்டும். இதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டால், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி செயற்பட வேண்டும்.

கே: பொதுத்தேர்தலை கூடிய விரைவில், அநேகமாக அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் நடத்த வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இதில் உங்கள் பார்வை என்ன? தேர்தலை நடத்துவதற்கு நீங்கள் உடன்படுகிறீர்களா அல்லது தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தங்கள் போக்கை நடத்த வேண்டுமா?

பதில்: ஜனாதிபதியும் அரசாங்கமும் இரண்டு வருட கால அவகாசத்தை முடிக்க வேண்டுமா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. எவ்வாறாயினும், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இடையூறு இல்லாமல் சட்ட மறுசீரமைப்புக்கு அனுமதித்தால் நாங்கள் தேர்தலுக்குச் செல்லலாம் என்று நினைக்கிறேன், அது ஒரு பிரச்சினை அல்ல. பொருளாதாரத்தின் மறுசீரமைப்பு செயல்முறையை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது. நாம் நினைப்பது போல் அதுவே முதன்மையானதாக இருக்க வேண்டும்.

இரண்டாவதாக, பொருளாதாரம் இன்னும் மீளவில்லை. பணவீக்கம் சுமார் நூறு சதவீதமாகக் காணப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமன்றி ஏனைய பொருட்களுக்கும் தட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் நாட்டை மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நிர்வாகக் குழுக்களின் மிகப்பெரும் சிரமத்திற்கு மத்தியில் அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடியதாகவுள்ளது. சில பிரிவுகளுக்கு சிரமம் இருப்பதை நான் அறிவேன்.

எனவே, பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கத்தை அனுமதிக்குமாறு ஒவ்வொரு அரசியல் கட்சிகளையும் மற்றும் சிவில் சமூக குழுக்களையும் கேட்டுக் கொள்கிறோம். அதை மீட்டெடுத்த பிறகு, நாங்கள் தேர்தலுக்குச் செல்லலாம், மக்கள் விரும்பும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்தக் கடினமான சவாலான காலகட்டத்தை எங்களால் சமாளிக்க முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எங்கள் வாழ்நாளில் இதுபோன்ற கடினமான காலகட்டத்தை நாங்கள் கடந்து சென்றதில்லை என்று நினைக்கிறேன். இன்னும் பிரச்சினை தீரவில்லை, அதைத் தீர்த்து வைக்க வேண்டும். அதுவே எங்களின் முதன்மையான நோக்கமாகும்.

கே: மக்களின் உரிமைகளை அரசாங்கம் நசுக்குவதாகப் பல குற்றச்சாட்டுகள் உள்ளன. மறுபுறம் தொடர்ச்சியான போராட்டங்கள் பொருளாதாரத்தை சீர்குலைப்பதாகவும், சுற்றுலா போன்ற துறைகளையும் பாதிக்கின்றன என்றும் அமைச்சர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சுற்றுலாத்துறை ஊக்குவிக்கப்பட வேண்டும். இலங்கைக்கு வரும் அந்நிய செலாவணி அதிகரிக்கப்பட வேண்டும். எனவே, சுற்றுலாப் பயணிகள் வந்து விடுமுறையைக் கழிக்க இலங்கையில் அமைதியான மற்றும் வன்முறையற்ற சூழல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அந்நிய செலாவணி தட்டுப்பாடு ஏற்படும் போதுதான் பெரும்பாலான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

கே: நாட்டில் நெருக்கடியை உருவாக்கி மக்களின் வாழ்க்கையைச் சீர்குலைக்க சில குழுக்கள் திட்டமிட்டு முயற்சிப்பதை நீங்கள் காண்கிறீர்களா?

பதில்: மக்களின் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் வகையில் யாரேனும் திட்டமிட்டு மேற்கொள்ளும் முயற்சிகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அத்துடன் அவற்றை நாங்கள் வேடிக்கை பார்க்கவும் மாட்டோம். ஒவ்வொரு நிமிடமும் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு வேண்டுமென்றே இடையூறு ஏற்படுத்த முயல்வதால் அவர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை சேர்க்கும்.

கே: பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரச செலவினங்கள் குறைக்கப்படும் என ஜனாதிபதியும் அரசாங்கமும் அறிவித்திருந்த போதிலும், 38புதிய இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கக் காரணம் என்ன?

பதில்: இராஜாங்க அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை மக்கள் உணர்வார்கள். மக்கள் அழுத்தத்தில் இருப்பதையும், அவர்கள் கடுமையான இன்னல்களுக்கு உள்ளாகியிருப்பதையும் நாங்கள் அறிவோம். சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையில் தாக்கம் உள்ளது மற்றும் பணவீக்கம் மக்களின் இன்றைய வாழ்க்கை முறையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சந்தையில் உள்ள பொருட்களை வாங்கும் நிலையில் மக்கள் இல்லை. அவர்கள் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் இருக்கலாம். இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் உள்ளன.

இராஜாங்க அமைச்சர்கள் ஒருபோதும் நாட்டுக்கு சுமையாக மாற மாட்டார்கள். நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு நாம் அனைவரும் மிகவும் கடினமாக உழைத்து ஒன்றுபட்டு செயல்படுகிறோம். நாம் அதைச் செய்வோம். நாம் தோல்வியடைந்தால், எங்கள் மீது பழியைப் போடுங்கள். அதைச் செய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள்.

அர்ஜூன்

Comments