உத்தம நபியின் உயர் பண்புகள் | தினகரன் வாரமஞ்சரி

உத்தம நபியின் உயர் பண்புகள்

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் உயர் பண்புகளை கண்டறிந்து அதனை எமது வாழ்வில் கடைபிடிப்பது, இறைவிசுவாசிகளான எம்மனைவரதும் பொறுப்பாகும்.  நபி (ஸல்) அவர்களிடம் ஏதாவதொன்று கேட்கப்பட்டு, அதனை அன்னார் இல்லையென்று சொன்னதில்லை என ஜாபிர் (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

சகித்துக் கொள்ளல், பொறுமை, மன்னிப்பு, சிரமங்களை தாங்கிக் கொள்ளல் போன்றன அண்ணலாருக்கு அல்லாஹ் வழங்கிய இயற்கைப் பண்புகளாகும். இதற்கு மேலாக துணிவு, வீரம் போன்ற பண்புகளும் அன்னாரிடம் காணப்பட்டன. எத்தனையோ அபாயகரமான நிலைமைகளை நபி(ஸல்) அவர்கள் சந்தித்துள்ளார்கள். அப்போதெல்லாம் நிலை குலையாமல், தடுமாற்றமில்லாமல், புறமுதுகு காட்டாமல் எதிரிகளை எதிர்த்து நின்றுள்ளார்கள்.

அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். மதீனாவாசிகள் ஒரு நாள் இரவு சப்தத்தைக் கேட்டு பயந்து விட்டனர். சப்தம் வந்த திசையை நோக்கி மக்கள் விரைந்து செல்கையில் அதற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் சென்று விவரத்தை அறிந்து திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

 நபி (ஸல்) அவர்கள் கழுத்தில் வாளை தொங்க விட்டுக்கொண்டு அபூ தர்தாவுக்குரிய குதிரையில் எவ்வித கடிவாளம் இன்றி சென்று வந்தார்கள். மக்களைப் பார்த்து, நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை, பயப்படவேண்டியதில்லை எனத் துணிவுடன் கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி முஸ்லிம்)

அதேநேரம் நபி (ஸல்) அவர்கள் கூச்ச சுபாவமுள்ளவராக இருந்துள்ளார்கள். 'திரை மறைவிலுள்ள கன்னிப் பெண்களை விட அதிக நாணயமுள்ளவராக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.

ஏதாவது பிடிக்காவிட்டால் அதை அவர்களது முகத்திலிருந்து புரிந்து கொள்ளலாம். எவரது முகத்தையும் அன்னார் ஆழமாக உற்று நோக்கியதில்லை. அன்னார் கீழ் நோக்கி பார்ப்பதே அதிகம். பெரும்பாலும் கடைக் கண்ணால் பார்ப்பார்கள். வெட்கத்தினாலும் உயர்ந்த பண்பின் காரணத்தினாலும் யாரையும் வெறுப்பூட்டும் படி பேச மாட்டார்கள் என்று அபூ ஸஈத் குத்ரி (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புஹாரி)

நபி (ஸல்) அவர்கள் மக்களில் முன்மாதிரி மிக்க நீதவானாகவும், ஒழுக்க சீலராகவும் உண்மையாளராகவும்  நம்பிக்கையாளராகவும் திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் இப்பண்புகளை உடன் இருந்தவர்கள் மட்டுமல்லாமல் எதிரிகள் கூட நன்கு அறிந்து வைத்திருந்தார்கள்.

அலி (ரழி) அவர்கள் கூறுகிறார்கள், ஒரு முறை நபியவர்களைப் பார்த்து அபூ ஜஹ்ல் 'நாங்கள் உங்களை பொய்ப்பிக்கவில்லை, நீங்கள் சொல்கின்ற மார்க்கத்தை தான் பொய்பிக்கிறோம்' என்றான். இச்சந்தர்ப்பத்தில் அல்லாஹ் கூறுகிறான், நபியே! உங்களை பொய்யரென அவர்கள் கூறுவது நிச்சயமாக உங்களுக்கு கவலையை தருகிறது என்பதை நாம் உறுதியாக அறிவோம். நிச்சயமாக அவர்கள் உங்களை பொய்யாக்கவில்லை. ஆனால் இந்த அநியாயக்கரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையே (பொய்யாக்கி) நிராகரிக்கின்றனர் (அல்குர்ஆன் 6:33) (ஆதாரம் திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் மற்றவர்களை விட அதிகம் பணிவுடையவர்களாகவும் பெருமை கொள்ளாதவராகவும் இருந்தார்கள். நோயாளர்களை நலம் விசாரிப்பார்கள். ஏழைகளுடன் சேர்ந்திருப்பார்கள். அடிமை விருந்துக்கு அழைத்தாலும் இன் முகத்துடன் ஏற்றுக்கொள்வார்கள். தங்கள் தோழர்களுடன் அவர்களில் ஒருவராக அமர்ந்திருப்பார்கள்.

தம் மனைவிமாருக்கும் பிள்ளைகளுக்கும் உதவி ஒத்துழைப்புக்களை நல்கக்கூடியவர்களாக இருந்தார்கள். மக்கள் மீது மிகவும் அன்பும் பாசமும் கருணையும் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் மிக அழகிய முறையில் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டார்கள். மக்களில் மிக உன்னதமான குணம் பெற்றிருந்தார்கள். அருவருப்பான வார்த்தைகள், செயல்கள் ஏதும் அவரிடம் இருந்ததில்லை. சபிக்கும் பழக்கமோ, தெருக்கில் கூச்சலிடம் பழக்கமோ இருத்ததில்லை.

ஆடையில் தங்கள் அடிமைகளை காட்டிலும் தம்மை உயர்வாக காட்டிக்கொள்ள மாட்டார்கள். தங்களுக்கு பணிவிடை செய்தவர்களுக்கு பணிவிடை செய்வார்கள். தங்கள் பணியாளரை 'சீ' என கூட கூறிய தில்லை ஒரு செயலை செய்ததற்காகவோ செய்யாமல் போனதற்காகவோ யாரையும் கண்டித்ததில்லை. நபி (ஸல்) அவர்கள் தோழர்களை அதிகம் நேசித்து அவர்களுடன் அதிகம் பழகுவார்கள். அவர்களுடைய ஜனாஸாக்களில் கலந்து கொள்வார்கள். ஏழையை அவரது இல்லாமையால் இழிவாக பார்க்க மாட்டார்கள்.

ஒரு பயணத்தின் போது ஆடு ஒன்றை அறுத்து சமைக்கும் படி கூறினார்கள். ஒருவர் நான் அறுக்கிறேன் என்றார். ஒருவர் நான் உரிக்கிறேன் என்றார். ஒருவர் நான் சமைக்கிறேன் என்றார்.

நபி (ஸல்) அவர்கள் அதற்காக நான் விறகு சேர்த்து வருகிறேன் என்றார்கள். அதற்கு தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே.. உங்களுக்கு ஏன் சிரமம் நாங்கள் இதைச்செய்து கொள்கிறோம் என்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் உங்களால் செய்ய முடியும் என்பது எனக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் உங்களில் என்னை தனியே உயர்த்திகாட்ட விரும்பவில்லை. ஏனெனில் ஒருவர் தன் தோழர்களில் தனியாக வேறுபடுத்தி காட்டுவதை அல்லாஹ் வெறுக்கிறான் என்று கூறி விறகுகளை சேகரிக்க சென்றார்கள்.

ஒருவர் ஏதாவது தேவைக்காக வந்தால் அவராகச் செல்லும் வரை அவருடன் நபி (ஸல்) அவர்கள் இருப்பார்கள். தேவையை கேட்கும் போது அதனை நிறைவேற்றிக் கொடுப்பார்கள். அல்லது அழகிய பதிலைக் கூறுவார்கள். நபிகளார் தன் தயாளா தன்மையையும் நற் குணங்களையும் மக்களுக்கு விசாலப்படுத்தியுள்ளார்கள். எனவே மக்களுக்கு ஒரு தந்தையைப் போன்று திகழ்ந்தார்கள்.

கல்வி, கண்ணியம், பொறுமை, சகிப்புத் தன்மை வெட்கம், நம்பிக்கை அனைத்தும் நிறைந்ததாக அவரது சபை இருந்தது. அங்கு உரத்த குரல்கள் ஒலிக்காது. கண்ணியம்  குலைக்கப்படாது. தவறுகள் நிகழாது. பெரியவர் சிறியவர்களுக்கு இரக்கம் காட்டுவார்கள். தேவை உடையோருக்கு உதவி செய்வார்கள். புதியவர்களுடன் நட்புடன் நடந்து கொள்வார்கள்.

எப்போதும் மலர்ந்த முகமும், இளகிய குணமும் நள்ளினமும் பெற்றிருப்பார்கள். கடுகடுப்பானவராகவோ, முரட்டு குணம் கொண்டவராகவோ, கூச்சலிடுபவராகவோ அருவருப்பாக பேசுவராகவோ அதிகம் புகழ்பகராகவோ அல்லர்.

மூன்று குணங்களை விட்டு தங்களை பாதுகாத்துக் கொண்டார்கள். முகஸ்துதி, அதிகம் பேசுவது, தேவையற்றவற்றில் ஈடுபடுவது. மேலும் பிறரை பழிக்கமாட்டார்கள், குறை கூற மாட்டார்கள். பிறரின் குறையை தேடமாட்டார்கள்.

எனவே இவ்வாறான நற்பண்புகள் எம்மிடம் குடி கொண்டு நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறைகளை பின்பற்றி வாழ வல்ல நாயன் அருள்புரியட்டும். 

மௌலவி எம்.யூ.எம். வாலிஹ்
(அல்-அஸ்ஹரி) வெலிகம.

Comments