கருணைக்கடல் காருண்ய நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

கருணைக்கடல் காருண்ய நபி முஹம்மத் (ஸல்) அவர்கள்

கருணையின் மறுவுருவான காருண்ய நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய வெற்றிகரமான சமூகப்புரட்சிக்கு ஆணிவேராக அமைந்தது அன்பும், கருணையுமே ஆகும்.

நபி ஸல் அவர்கள் பற்றி அல்லாஹ் தன் திருமறையில், '(நபியே) உம்மை அகிலத்தாருக்கு அருட்கொடையாகவேயன்றி நாம் அனுப்பவில்லை.' (அல் அம்பியா –107) என்றும் மற்றொரு வசனத்தில் '(விசுவாசிகளே)! உங்களிலிருந்து திட்டமாக ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார், (உங்களுக்கு யாதொரு துன்பமும் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டப்படுவது அவருக்கு மிக வருத்தமாக இருக்கும். அவர் உங்கள் மீது மிக்க பேராசை கொண்டவர் விசுவாசிகளோடு மிக இரக்கமுள்ளவர்' (அத் தவ்பா–128).

இவ்விரண்டு வசனங்களிலும் நபி (ஸல்) அவர்களது கருணையின் கனதியையும், அதன் எல்லையும் மிகத் தெளிவாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான். 'றஹ்மதுல் லில் ஆலமீன்' என்ற வாசகத்திலிருந்து, அவர் மனித குலத்திற்கு மாத்திரமல்ல இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து படைப்புகளுக்கும் 'ரஹ்மத்' - கருணையாக அனுப்பப்பட்டுள்ளார் என்பது புலனாகின்றது. இதை நிரூபணம் செய்யும் வகையில் தான் அவரது முழு வாழ்வுமே அமைந்திருந்தது. கருணையின் மறு உருவாக வாழ்ந்ததால்தான் மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் இவ்வுலகமே வியந்து பார்க்கக்கூடிய அளவு உன்னதமான ஒரு சமூகத்தை உருவாக்ககூடியதாக இருந்தது.

கருணை, அன்பு, மன்னிப்பு, மாண்பு என்று எதுவுமே தெரியாமல் மனித நாகரிகத்திற்கும், மனித பண்பாடுகளுக்கும் எதிரான ஜாஹிலிய்ய சமூகம் என்று வர்ணிக்கப்பட்ட அச்சமூகம், நபி (ஸல்) அவர்களது கருணைக்கு முன்னால் அடிமையாகிவிட்டது. உண்மையான அன்பும், கருணையும், கசியாத உள்ளங்களையும் கசிய வைத்து விடும் என்பதற்கு இதைவிட வேறொரு சான்றும் தேவையில்லை.

நபி (ஸல்) அவர்களது கருணையின் உச்ச நிலையை தெளிவுபடுத்துகின்ற பல்வேறு வகையான வியத்தகு நிகழ்வுகளை அவரது வாழ்க்கையிலே கண்டுகொள்ளலாம். குறிப்பாக நபி (ஸல்) அவர்களை எதிர்ப்பதிலும், அன்னாருக்கு துன்புறுத்தல்கள் செய்து துன்புறுத்தி, உடலாலும் உள்ளத்தாலும் காயப்படுத்துவதிலும், அவர் உயிராக நேசித்து முழுமூச்சோடு ஈடுபட்டு வந்த பணியை முடக்குவதிலும் குறியாக செயல்பட்டவர்களோடு நபி (ஸல்) அவர்கள் காட்டிய கருணையும், அன்பும் அளவிட முடியாதது.

எந்தவொரு தனிமனித, சமூக வாழ்விலும் எவ்வகையான பாதிப்போ, சங்கடமோ ஏற்படா வண்ணம் வாழ்வை வசந்தமாக்க வல்ல ஒரு அழகிய ஆயுதம் தான் அன்பு, கருணை என்பதை உலக மாந்தருக்கு அன்னார் கற்றுக் கொடுத்துள்ளார்கள். ஒரு தனி மனிதனின் மானம், கௌரவம், நலன்கள் அனைத்தும் முறையே பேணப்பட்டு, அவனது அறியாமையின் காரணமாக அல்லது அவனது மரபு கலாசாரத்தைத் தழுவி பிற சூழலுக்கும் நாகரிகத்துக்கும் முரணாக அவனிலிருந்து வெளிப்படுகின்ற செயற்பாடுகளை முறையே அணுகி நெறிப்படுத்துவதுதான் கருணையின் இயல்பு என்பதை நபி (ஸல்) அவர்கள் எமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். இது எல்லாவற்றையும் தாண்டி மற்ற மனிதர்களை மனிதர்கள் என்ற வகையில் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கி இருக்கின்ற கௌரவத்தையும் மதிப்பையும் முழுமையாக வழங்கி வாழ்வதே வாழ்வை மகிழ்வுறச் செய்யும். இவ்விடயத்தில் சாதி, இனம், மதம், மொழி என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து படைப்பினமும் கருணையுடன் நடாத்தப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளையாகும்.

இவ்வுலக வாழ்வு அருள் நிறைந்ததாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாற வேண்டுமெனில் பூமியிலுள்ள மனிதர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பையும், இரக்கத்தையும் பரிமாறி கருணை உள்ளம் கொண்டவர்களாக வாழ வேண்டும் என்று இஸ்லாம் பணிக்கின்றது. ஒருவருக்கொருவர் இரக்கத்தோடும் கருணையோடும் வாழ்கின்ற போது அவர்கள் மீது அல்லாஹ் அவனது கருணை மழையைப் பொழிகின்றான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'இரக்கம் காட்டக் கூடியவர்கள் மீது கருணையாளனாகிய அல்லாஹ் இரக்கம் காட்டுகின்றான். பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள் வானில் உள்ளவர்கள் உங்கள் மீது இரக்கம் காட்டுவார்கள்.' (ஆதாரம்: சுனன் அத் திர்மிதி)

இந்த நபிமொழியிலே இரக்கம் காட்டுவதற்கும், கருணை கொள்வதற்கும் இனம், மதம், மொழி என்ற எந்த அடையாளமும் தேவையில்லை என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். 'பூமியில் உள்ளவர்கள் மீது' என்று பொதுப்படையாகவே கூறியுள்ளார்கள். குறிப்பிட்ட ஒரு சாராரை நபி (ஸல்) அவர்கள் முற்படுத்தவில்லை. உயிரினங்களுக்கிடையில் அன்பு காட்டுவதில் எவ்வித பாகுபாடோ, பக்கச்சார்போ இல்லாத நிலையில் சமநிலை பேணி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் இஸ்லாம் பணிக்கிறது. எதிலும் எல்லை மீறிச் செயற்படுவதையோ அல்லது பொடுபோக்காக செயற்படுவதையோ இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

இன்றைய உலகின் போக்கு, கருணையற்ற, கல்நெஞ்சங்கொண்ட ஜடப்பிண்டங்களாக மனிதர்களை மாற்றி விடுவதில் முனைப்பாக உள்ளது. தன்னோடு ஒன்றாக வாழ்கின்ற தனக்காக உழைக்கின்ற, தனக்காகவே வாழ்கின்ற மனிதர்களுடன் கூட கருணை கொள்வதற்கோ, அன்பை பரிமாறிக் கொள்வதற்கோ எந்த அவகாசத்தையும் இன்றைய உலக ஒழுங்கு பெரும்பாலான மனிதர்களுக்கு வழங்குவதில்லை. இதைத்தான் இன்றைய நவீன உலகு (Individualism) தனித்துவம் என அழகுபடுத்தி போற்றி மகிழ்கின்றது. இது சுயநலத்தின் மிக மோசமான வடிவமாகும். இது கருணையிழந்த உள்ளங்களிலிருந்து பிறக்கின்ற மனித பண்பிற்கு முற்றிலும் மாற்றமான சிந்தனையாகும். இச்சிந்தனைக்கு அடிமையானவன் தன்னை குறித்து மட்டுமே கவலைப்படுபவனாக மாறி விடுகின்றான்.

முதலில் அவன் தன்னுடைய நாடு, தன்னுடைய சமூகம் என எல்லா வட்டங்களையும் விட்டும் வெளியேறி விடுகிறான். 'நான்' மற்றும் 'என்னுடைய குடும்பம்' என்ற அளவோடு அவனுடைய பார்வை சுருங்கிவிடுகின்றது. பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப உறவுகளின் முக்கியத்துவமும் குறைந்து கொண்டே போய்விடுகின்றது. ஒரு கட்டத்தில் அவனது ஆர்வங்கள், ஈடுபாடுகள், சிந்தனைகள், எண்ணங்கள் ஆகிய எல்லாவற்றின் மையம் அவனுடைய சுய ஆளுமை மட்டுமே என்பதாக நிலைமை வளர்ச்சி பெற்றுவிடுகின்றது.

ஒரு சமூகம் மனிதப் பண்பாடும் நாகரிகமும் கொண்ட சமூகமாக மாற வேண்டுமெனில் அச்சமூகத்தில் அன்பும் கருணையும் நிறைந்த மனிதர்கள் உருவாக்கப்படவேண்டும். மனிதர்கள் தொடர்புபடுகின்ற ஒவ்வொரு விடயத்திலும் கனிவும், கசிவும், இனிமையும், இங்கிதமும் இருக்கவேண்டும்.

எனவே நாம் காணும் இன்றைய இரக்கமற்ற, கொடுமையும், வன்மமும் நிறைந்த உலகிலிருந்து மீண்டெழ வேண்டுமெனில் மனித மனங்கள் அன்பும், கருணையும் நிறைந்ததாக மாற வேண்டும். மனித வாழ்வோடு தொடர்புபடுகின்ற ஒவ்வொரு செயற்பாடுகளிலும் கருணையும், கனிவும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதில் இனம், மதம், மொழி என்ற அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் 'அனைத்து படைப்பினங்களும் அல்லாஹ்வின் குடும்பத்தினர்' என்ற நபிமொழியை அளவுகோலாகக் கொண்டு செயற்பட வேண்டும். அப்போதுதான் நாம் விரும்பும், யுத்தமற்ற, மோதல்கள் அற்ற அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு உலகை காணலாம்.

கலாநிதி அல்ஹாபிழ்,
எம்.அய்.எம். சித்தீக்
(அல்-இன்ஆமி)
B.A.Hons,(Al- Azhar university, Egypt) M.A.& PhD (International Islamic university, Malaysia)

Comments