உலகப் போரொன்றுக்கு வழி​கோலும் ரஷ்யாவின் பொருளாதார நிலை | தினகரன் வாரமஞ்சரி

உலகப் போரொன்றுக்கு வழி​கோலும் ரஷ்யாவின் பொருளாதார நிலை

கடந்த கால உலக போர்களுக்குப் பின்னால் பொருளாதார மந்தம் அல்லது பொருளாதராரநெருக்கடி ஒரு பிரதான காரணமாகவே அமைந்திருக்கின்றதை அவதானிக்க முடிகிறது. அத்தகைய சூழலுக்குள் மீண்டும் உலக நாடுகள் பயணிக்கின்றனவா என்ற சந்தேகம் அதிகரித்துவருகிறது. காரணம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும்அத்தகைய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆசியா, ஆபிரிக்க மற்றும் இலத்தீனமெரிக்க நாடுகள் ஏற்கனவே பொருளாதாரநெருக்கடிக்குள்ளேயே காணப்படுகின்றன. அந்தக் கண்டத்து நாடுகளின்தலைமையில் இதுவரையும் எந்தஉலகளாவிய போரும் நிகழ்ந்ததில்லை. அனைத்து போர்களுக்கும் பின்னால்மேற்குலக நாடுகளின் அதிகாரப்போட்டியும் பொருளாதார நெருக்கடியுமே அடிப்படையானதாக அமைந்துள்ளது.

தற்போது ரஷ்யாவின் எரிவாயு மற்றும்பெற்றோலியம் மேற்கு நாடுகளுக்குதடைசெய்யப்பட்டதனால் எழுந்துள்ளபொருளாதார நெருக்கடியால் ஐரோப்பாமட்டுமல்ல அமெரிக்காவும் திணறத்தொடங்கியுள்ளது. அனைத்துவன்நாணயங்களும் வீழ்ச்சியை நோக்கி நகர்கின்றன. ஐரோப்பிய மக்களின் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை பாரிய நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. இக்கட்டுரையும் உலகப் போருக்கான வாய்ப்புப் பற்றித் தேடுவதாக உள்ளது.

முதலாவது, நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் மூன்றாம் உலகப் போர் மூழுவது உறுதி என்று ரஷ்யப் பாதுகாப்பு பேரவையின் துணைச் செயலாளர் அலக்ஸாண்டர் வெனடிக்டோவ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடும் போது    நேட்டோவில் இணைய உக்ரைன் விண்ணப்பம் செய்துள்ளது. இது நிச்சயம் போரை உக்கிரமாக்கும். மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்துவருகின்றன. இதனால் ர‌ஷ்யாவுக்கான நேரடி களப்போட்டியாளர்களாக உருவெடுத்துவருகின்றன. உக்ரைனை தங்கள் கூட்டமைப்புக்குள் இணைத்துக் கொள்வதென்பது தற்கொலைக்கு சமமானது என்று நேட்டோ நாடுகளுக்கு வெனடிக்ேடாவ் எச்சரித்துள்ளார்.

இரண்டாவது, ரஷ்ய -கிரிமியாவை இணைக்கும் பாலத்தை, உக்ரைன் வெடி பொருட்களை நிரப்பிய லொறியை செலுத்தி தகர்த்துள்ளது. 2014இல் ரஷ்யா கிரிமியாவை இணைத்த பின்னர் ரஷ்யாவின் நிலப்பரப்புடன் பிணைக்கும்  விதத்தில் 2018ஆம் ஆண்டு பாலம் அமைக்கப்பட்டது. இது கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே 19கிலோ மீற்றர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.   வாகனப் போக்குவரத்தையும் ரயில் போக்குவரத்தையும் கொண்ட இரு பிரிவுகளை கொண்ட பாலமே உக்ரைனால் தகர்க்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க உக்ரைன் நகரங்கள் மீது 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அத்தாக்குதல் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியதாகவும் மக்கள் அதிகம் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அதனை அடுத்து மேற்கு நாடுகள் குறிப்பாக நேட்டோ நாடுகள் ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலுக்கு பின்னர் உக்ரையினுக்கு வான்பாதுகாப்பு ஆயுதங்களை வழங்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளன.

மூன்றாவது,  நேட்டோ கூட்டு நாடுகளின் மீது ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது. உக்ரைனின் உட்கட்டமைப்புகளையும் அணுவாயுத இலகுகளையும் தாக்குவதாகவும் இவ்வாறான தாக்குதல்கள் நேட்டோ நாடுகள் மீது நிகழ்த்தப்படுமாயின் பதில் தாக்குதலுக்கு ரஷ்யா முகங்கொடுக்க வேண்டிவரும் எனவும் நேட்டோ தெரிவித்துள்ளது. இதேநேரம் ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் தலைநகரமான கீவ்வில்  அமைந்துள்ள 11உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் டெனிஸ் மிகல் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதலை கண்டித்துள்ள அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதிகள் பொதுமக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ளனர். இதேநேரம் ஐரோப்பிய ஒன்றியம் இது போர்க்குற்றம் எனக் கண்டித்துள்ளது.

நான்காவது, உக்ரைன் மீதான ஏவுகணைத் தாக்குதலை அடுத்து ரஷ்யாவை உலக நாடுகள் கண்டித்துவருகின்றன. குறிப்பாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மான பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஐந்து நாடுகள் மட்டுமே ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. 35நாடுகள் நடுநிலமை வகித்துள்ள போது 143நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன.

ஐந்தாவது, ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ஈரானிய ஆளில்லா விமானங்களை அதிகம் பயன்படுத்தியுள்ளதாக உக்ரைனும் மேற்கு நாடுகளும் குற்றம்சாட்டியுள்ளன. உக்ரைன் தலைநகர் மீதான தாக்குதலுக்கு 40க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை ரஷ்யா பயன்படுத்தி தாக்குதல் நிகழ்த்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. பதிலுக்கு ரஷ்யாவின் எல்லையோர பிராந்தியமான பெல்கோபோட்டில் அமைந்துள்ள ரஷ்யாவின் வெடிமருந்துகள் அடங்கிய கிடங்கினை தாக்கி அழித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை ரஷ்யா தனது நாட்டின் மீது உக்ரைன் தாக்குதல் நிகழ்த்தியதாகவே கருதுகிறது. அதற்கான பதில் தாக்குதலை நிகழ்த்த ரஷ்யா தயாராவதாக தெரியவருகிறது.  

ஆறாவது, ரஷ்யா கடந்த காலங்களில் தனது படையணியை அதிகரிக்கும் நகர்வுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலை மையப்படுத்திக் கொண்டு தனது இராணுவத்தின் ஆளணியை திரட்டும் நடவடிக்கையை அதிகரித்துவருகிறது. ரஷ்யாவின் படைப்பலம் உலகளாவிய ரீதியில் மூன்றாவது இடத்திலுள்ளது. அத்தகைய பலமுடைய ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதலால் இராணுவ பலமோ ஆளணியோ முடிவுக்குவரவில்லை. மாறாக ரஷ்யா இத்தகைய சூழலை பயன்படுத்திக் கொண்டு தனது இராணுவ வலுவை அதிகரிக்க திட்டமிடுகிறது. மேற்குக்கு எதிரான போரை நீண்டதாகவும் வலுவானதாகவும் எதிர்கொள்ள ரஷ்யா திட்டமிடுவதாகவே தெரிகிறது. ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகியவற்றின்  பலத்துடன் கீழைத்தேச நாடுகளுடன் இணைந்து மேற்குலகத்தின் பலத்தை எதிர்ப்பதற்கும் அதனை முறியடிப்பதற்கும் ரஷ்யா எடுக்கும் நகர்வாகவே தெரிகிறது.

ஏழாவது, மேற்காசிய நாடுகளுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ள ரஷ்யா தற்போது அதில் அமெரிக்காவுடன் நெருக்கமான நாடாக விளங்கிய சவுதி அரேபியாவுடனும் உறவை பாதுகாக்க திட்டமிட்டுள்ளது. அண்மையில் அமெரிக்காவுடன் முறுகலை அதிகரித்துவரும் சவுதி அரேபியா ரஷ்யாவுடன் நெருக்கமடைந்துள்ளது. அத்துடன் எண்ணெய்வள நாடுகளும் தமது உற்பத்தியை மட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளன. ரஷ்யா மேற்கு நாடுகளுக்கு எரிவாயுவை வழங்க மறுத்துள்ள சந்தர்ப்பத்தில் எண்ணைவள நாடுகளது நடவடிக்கை மேலும் அதிக நெருக்கடியை மேற்குலக நாடுகளுக்கு தோற்றுவித்துள்ளது. 

எனவே ஒருபக்கம் ரஷ்யா- உக்ரைன் போரால் பொருளாதார நெருக்கடி ஏற்பட,  மறுபக்கத்தில் உக்ரைன்- ரஷ்ய போர் நேட்டோவுக்கும் அதன் மேற்குலக அணிக்கும் பாரிய விளைவுகளை ஏற்படுத்திவருகிறது. மேற்குலகத்தின் ஆதிக்கத்தை பாதிக்கும் நடவடிக்கைக்கு ரஷ்யா காரணமாக உள்ளது என்பதும் அதனை எதிர்த்து வெற்றி பெறும் நோக்குடன் ரஷ்யாவும் நகருவதனைக் கண்டு கொள்ள முடிகிறது. பரஸ்பரம் இரு தரப்பும் போரை தீவிரப்படுத்துவதனைக் காண முடிகிறது. போர் பொருளாதாரத்தை பாதிக்கும் போது அதனை முறியடிக்க மீளவும் ஒர் உலகளாவிய போரை எதிர் கொள்ள வேண்டிய சூழல் தவிர்க்க முடியாது எழுந்துவருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. மேற்குலகம் தனக்கு ஏற்படும் நெருக்கடியை எப்போதும் ஏனைய கண்ட நாடுகள் மீது திணித்து  விடுவதும் அதன் விளைவுகளை அந்த நாடுகள் மீது ஏற்படுத்துவதும் வழமையான அரசியலாக உள்ளது. அத்தகை அரசியலுக்குள் மீளவும் உலகம் செல்ல முயலுகிறதாகவே தெரிகிறது. ரஷ்யாவின் நகர்வும் மேற்கு நாடுகளது திட்டமிடலும் தாக்குதலுக்கான அணுகுமுறைகளும் அத்தகைய நிலையையே அதிகம் ஏற்படுத்த முயலுகின்றன. போரும் பொருளாதாரமும் உலக வரலாறு முழுவதும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தே செயல்பட்டுள்ளன.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments