உயர்தர பரீட்சை முடிவுகளும் கிழக்கு மாகாண கல்வித்தரமும் | தினகரன் வாரமஞ்சரி

உயர்தர பரீட்சை முடிவுகளும் கிழக்கு மாகாண கல்வித்தரமும்

கிழக்கு மாகாணம் திருமலை, அம்பாறை, மட்டக்களப்பு என மூன்று மாவட்டங்களை கொண்டிருந்தாலும், அவற்றுள் 17கல்வி வலயங்கள் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக அவை 30%ஆளணிக் குறைபாட்டோடுதான் இயங்கிவருவதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

ஒட்டுமொத்தமாக கிழக்கு மாகாணத்தில் 1123பாடசாலைகள் இயங்கிவருகின்றன. ரைப்-3, ரைப்-2ஆகியன உயர்தர கற்கைக்கான மாணவர்களை கொண்டிருப்பதில்லை, இவைதவிர 1சி, 1ஏபி. ஆகிய இரண்டு தரங்கள் கொண்ட பாடசாலைகள் இருக்கின்றன. அவற்றுள் 1சி பாடசாலைகள் கலைப்பிரிவு, வர்த்தகப்பிரிவுக்கான ஏ.எல் வகுப்புக்களை மாத்திரமே உள்ளடக்கியிருக்கும், மற்றைய 1ஏபி பாடசாலைகள் அனைத்து ஏ.எல்.வகுப்புப் பிரிவுகளையும் உள்ளடக்கியிருக்கும். ஏ.எல். வகுப்புக்களை நடாத்தக்கூடிய பாடசாலைகள் கிழக்கில் 315இருக்கின்றன. ரைப்-1, ரைப்- 2பாடசாலைகள் தோற்றுவித்த மாணவர்களைத்தான் 1சி, 1ஏபி, பாடசாலைகள் வளர்த்து ஏ, எல் பரீட்சைக்கு தோற்றவைக்கின்றன. ஆகையினால் எந்த நிலையிலும். ரைப்-2, ரைப்-3, இப்பாடசாலைகளை யாரும் மறந்துவிட முடியாது.

கிழக்கு மாகாணத்தில் 4லட்சத்து 13ஆயிரம் மாணவர்கள் கல்விகற்று வருகிறார்கள். அவர்களுக்கு கல்வி வழங்குவதற்காக 18803ஆசிரியர்கள் கிழக்கில் இருக்கிறார்கள். கணக்கிட்டுப்பார்த்தால் 21மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்.

அவர்களில் ஏறக்குறைய 17000மாணவர்கள் ஏ.எல்.பரீட்சைக்கு தோற்றிவருகிறார்கள். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை அந்தவகையில் கிண்ணியா கல்வி வலயம் கலை (82.38), மூதூர் கல்வி வலயம் வர்த்தகம் (88.0), உயிரியல் விஞ்ஞானம் (71.74), பௌதிக விஞ்ஞானம் (75.0), உயிரியல் தொழில் நுட்பம் (93.10) ஆகியதுறைகளிலும், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் பொறியியல் தொழில் நுட்பத்துறை ( 80.41), ஏனையவை அல்லது வேறு என்ற துறையிலும் (100.0) அதி கூடிய அல்லது உச்சப் புள்ளிகளைப் பெற்றிருப்பதை காணலாம்.

7வகையான பல்கலைக்கழக கல்வித் துறைகளே கிழக்கில் அரசோச்சி வருகின்றன.

கிழக்கு மாகாணத்திலுள்ள கல்வி வலயங்களுள் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று முதன்மை ஸ்தானத்தை பெற்றிருப்பது மூதூர் கல்வி வலயமாகும், இரண்டாம் இடத்தைப்பெற்றிருப்பது மகா ஓயா கல்வி வலயமாகும், மூன்றாம் இடத்தைப்பெற்றிருப்பது கிண்ணியா கல்வி வலயமாகும்.

2021ம் ஆண்டில் 17025மாணவர்கள் தோற்றியிருந்தார்கள். இவர்களில் 11237மாணவர்கள் சித்திபெற்றிருக்கிறார்கள். இவற்றுள் தேசிய மட்டத்தில் முதலிடம் பெறுவதென்பது இலகுவானதொன்றல்ல, இவற்றில் மட்டக்களப்பு மைக்கல் கல்லூரி மாணவன் துவாரகேஸ் பெற்ற வெற்றியானது அபாரமானது..

 

ஏ.எல். பரீட்சையில் சித்திபெற்றால் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்துவிடலாமென பலர் எண்ணுவதுண்டு. அது தவறான அபிப்பிராயம். அவ்வாறு சித்திபெற்றவர்களின் மிகத் திறமையானவர்களை இனம்கண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அவர்களை பொறுக்கியெடுக்கும். அவர்களே பல்கலைக் கழக கல்விக்காக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

பரீட்சையில் சித்தியெய்திய அனைவரையும், பல்கலைக்கழகத்திற்குள் சேர்த்துக்கொள்வதற்கு பல்கலைக்கழகத்தின் இடவசதி போதாதமையே இதற்கு காரணம். இதற்காக ”ஸற்ஸ்கோர்” என்ற தேசிய மட்டத்திலான கணிப்பீட்டு உத்தி பாவிக்கப்பட்டு அதனூடாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகாதவர்கள் ஏ.எல், பரீட்சையில் உச்சமட்டப்புள்ளிகளை பெறாதவர்கள் என்றே கருதப்படுவார்கள்.

இப்படிப் பார்க்கும்போது 17கல்வி வலயங்களுள் சில தாங்கள் இருந்த இடத்தில் இருந்து முன்னேறியுள்ளன. இன்னும் சில தாங்கள் இருந்த இடத்தையே கைநழுவ விட்டுவிட்டன. அதிலும் துக்ககரமான விஷயம் வளங்கள் நிறைந்த பாடசாலைகளைக் கொண்ட கல்வி வலயங்கள் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன. இப் பின்னடைவைச் சந்தித்திருப்பதற்கு என்ன காரணம் என்பதை பிரத்தியேகமாக ஆராயவேண்டியுள்ளது.

அக்கரைப்பற்று, அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை ஆகிய வலயங்கள் அதீத பிரயத்தனங்களை காட்ட வேண்டும்.

தெகியத்தகண்டி. திருமலை வடக்கு ஆகிய வலயங்கள் உண்மையிலேயே கல்வி வசதி குறைந்த பகுதிகள். நாட்டு நிலைமை பாரிய இடர்பாடுகளை நோக்கி நகரும் இந்தக்கால கட்டத்தில் மாணவர்கள் போட்டிப்பரீட்சையில் சித்தியெய்தி பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முடியுமா என்பது கேள்விக்குறியாகி நிற்கிறது.

கிழக்கிலுள்ள கல்வி வலயங்கள் எத்துணை முயற்சியெடுத்து முண்டியடித்து முதன்மையிடத்தை பிடித்தாலும் அக் கல்வி வலயங்களின் முயற்சிக்கு பின்னடைவை சில விடயங்கள் ஏற்படுத்திவிடுகின்றன. அதில் பிரதானமாக அனைத்து பாடங்களையும் தவறவிட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாய்த் தோன்றுகின்றது.

ஒவ்வொரு பாடத்திற்கும் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை என்பனவற்றைப் பெற்று சதவிகிதம் பெறப்படுகிறது. இவ்வாறான சதவிகிதமே பாடத்திற்குப் பாடம் வலய மட்ட விகிதாசாரமாக திரட்டி எடுக்கப்பட்டு அதிலிருந்து வலயங்களுக்கான நிலை கணிக்கப்படுகிறது. இந்த யுக்தி தேசிய மட்டத்தில் கையாளப்படுவதாகும். இது ஒரு நியமம் மட்டுமல்ல 9மாகாணங்களுக்கும் பொதுவானது

3பாடங்களையும் கோட்டைவிட்டவர்களால் அவ்வலயத்தினுடைய சராசரிப்புள்ளி நிச்சயம் குறைவடையும். அது சாதாரண தொகையல்ல 1521ஆகும்.

இது ஒரு புறமிருக்க கடந்த 2021ல் ஏ.எல் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் 3ஏ சித்திபெற்றவர்களின் எண்ணிக்கையை கவனிப்பது பயனுள்ளது.

மூன்று ஏ சித்திபெற்றவர்களின் எண்ணிக்ைக 17கல்விவலயங்களிலும் 472ஆக இருக்கிறது என புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. அவற்றுள் மட்டக்களப்பு கல்விவலயத்தில் 58மாணவர்கள் சித்திபெற்றிருப்பது பாராட்டத் தக்கது. இதுவே அனைத்து வலயங்களுக்குள்ளும் உயர்ந்த எண்ணிக்கையாகும்.

இந்த இடத்தில் மூன்று ஏ (A)சித்திபெற்றவர்களின் எண்ணிக்கையையும் 3எப்(F) பெற்றவர்களின் எண்ணிக்கையையும் ஒப்பீட்டளவில் பார்க்கின்றபோது, 3ஏ பெற்றவர்களின் எண்ணிக்கையைப் போன்று மூன்று மடங்கை 3எப்(F) பெற்றவர்களின் எண்ணிக்கை தாண்டி நிற்கிறது என்ற உண்மை தெரியவருகிறது

இது ஆரோக்கியமானதாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை. இதனை எவ்வாறு தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம் என்பதை கிழக்கு மாகாண கல்வி அமைச்சும், கல்வித் திணைக்களமும் ஆராய வேண்டும்.

2021ம் ஆண்டு ஏ.எல் பரீட்சை பல தடைகளுக்கு மத்தியில் இடம்பெற்றதென்பதை யாவரும் அறிவர். பரிட்சையின்போதும், பரீட்சைக்கு பின்னரும் நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு சிறந்த முறையில் இருந்திருக்கவில்லை. அப்படியான காலகட்டத்தில் இந்த 17000மாணவர்கள் பரீட்சை எழுதியமையை சிறுவிடயமாக கருதமுடியாது. சிறந்த, அனுபவமிக்க கல்வித் திணைக்கள பணிப்பாளர் திருமதி புள்ளநாயகம் கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்திருக்கிறார். சமகாலத்தில் கல்வி அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தைச் சேர்ந்த திஸநாயக்கவும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இவர்களுக்கு பக்கபலமாக திட்டமிடல் பிரிவுக்கு பொறுப்பாக கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த திருமதி திவ்யா இருப்பது கிழக்கின் கல்வி மேம்படுவதற்கான நல்ல சகுனமாகவே பார்க்கப்படுகிறது. இவர்கள் கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து கிழக்கின் கல்வி நிலையை மேம்படுத்த வேண்டும் என்பது கல்வியலாளர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

எஸ்.எஸ். தவபாலன்
புளியந்தீவு குறூப் நிருபர்

Comments