பணக்காரர்களை குறிவைத்த திலினி பிரியமாலி | தினகரன் வாரமஞ்சரி

பணக்காரர்களை குறிவைத்த திலினி பிரியமாலி

பிறந்தது களுத்துறையில். வசிப்பது ஹோகந்தரயில். பாடசாலை சென்றது பன்னிப்பிட்டியவில். படித்தது 10ம் வகுப்பு வரை. ஆனால் இலங்கையின் பல செல்வந்தர்கள் அவர் காலடியில்.

அதிகளவான வட்டிக்கான ஆசைகாட்டி, போலியான நிதி நிறுவனத்தை உருவாக்கிய சக்வித்தியிலிருந்து தொடங்கி அனைத்து மோசடிக்காரர்களும் ஏமாற்றுவது எமது நாட்டின் அப்பாவி மக்களையே. ஆனால் அந்த வகையில் பார்க்கும் போது திலினி பிரியமாலி வித்தியாசமானவர். அவள் அவ்வாறு அப்பாவிகள் ஏழைகள் எவர் மீதும் கை வைக்கவில்லை.

திலினி பிரியமாலி செயற்பட்டது சக்வித்தியைப் போன்று சின்னச் சின்ன தொகைகளை இலக்கு வைத்து அல்ல. ஒரே தடவையில் கோடிகளை இலக்கு வைத்தாகும். திக்கோ கூட்டு நிறுவனம் என்ற பெயருடைய வியாபாரத்தின் ஊடாக அவள் இலக்கு வைத்தது எமது நாட்டின் பிரபலமாக அறியப்படாத பணக்காரர்களையும் கறுப்புப் பண முதலைகளையுமாகும். அவளது வலையில் போதைப் பொருள்வியாபாரிகளும் உண்டியல் பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுவோரும் சிக்காமலில்லை. அது மாத்திரமின்றி, பாதாள உலகின் ஹெரோயின் வியாபாரிகளின் கறுப்புப் பணத்தை மாற்றும் வியாபாரிகளும் 30, 40கோடிகளுக்கும் அதிக தொகையை இழந்திருக்கின்றார்கள். இது தொடர்பான முறைப்பாடுகள் இன்னமும் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு கிடைக்கவில்லை. காரணம் அந்தப் பணத்தை அவர்கள் சரியான முறையில் சம்பாதிக்கவில்லை என்பதுதான்.

ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் இந்நாட்டின் முதல்தர போதைப் பொருள் வியாபாரியின் வியாபாரத்தினை இலங்கையில் முன்னெடுத்துச் செல்லும் ஒருவரும் திலினியின் வலையில் சிக்கி 20கோடிகளுக்கும் அதிக பணத்தை இழந்திருக்கின்றார். இவ்வாறான அனைத்து முறைப்பாடுகளும் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு கிடைக்குமாக இருந்தால் திலினி செய்திருக்கும் மோசடிகளின் பெறுமதி 1000கோடிகளையும் தாண்டிச் செல்லும் என எதிர்பார்க்க முடியும். ஆனால் இதுவரையும் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு கிடைத்திருப்பது 11முறைப்பாடுகள் மாத்திரமேயாகும். அந்த முறைப்பாடுகளின் தொகையைப் பார்க்கும் போது தற்போதைக்கு அவளால் செய்யப்பட்டுள்ள மோசடிகளின் பெறுமதி 350கோடி மாத்திரமே. கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் அதிக பணத்தை இழந்திருப்பது கலாநிதி பட்டத்தைப் பெற்றுள்ள வர்த்தகர் ஒருவராகும். மலேசியாவிலும் கூட வியாபாரம் மேற்கொள்வதாகக் கூறப்படும் அந்த வர்த்தகர் இழந்திருக்கும் தொகை 75கோடிகளாகும். குற்றவியல் விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்வதற்கு முதலில் விருப்பம் காட்டாத அந்த வர்த்தகர் கடைசியில் இந்த மோசடி தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு முன்வந்தது குற்றவியல் விசாரணைத் திணைக்கள அதிகாரிகளின் வற்புறுத்தலினாலாகும். அந்த வர்த்தகர் திலினிக்கு எதிராக முறைப்பாடு செய்வதில் ஆர்வம் காட்டாததற்குக் காரணம் இழந்த தொகையில் அதில் பாதிகூடக் கிடைக்காது என அவர் எண்ணியமையால்த் தான். தனது குடும்பம் இதனால் பாதிப்புக்குள்ளாகும் என்றும் அவர் பயந்தார்.

அவர் ஒரு வர்த்தக பரம்பரையைச் சேர்ந்தவர். வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் இலங்கைப் பிரதிநிதியாகச் செயற்படுவதாகக் கூறப்படும் இந்தக் கலாநிதியை திலினி ஏமாற்றிய விதம் விசித்திரமானது.

அந்தக் கதை ஆரம்பிப்பது இவ்வாறுதான்,

கொழும்புக்குச் சற்றுத் தொலைவில் ஒரு பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த வர்த்தகரின் வீட்டுக்கு திடீரென திலினி பிரியமாலி ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு தரப்பினர் சிலருடன் சென்றுள்ளார். ஆயுதம் தாங்கியோரை பயன்படுத்தி பணத்தைக் கொண்டு செல்வதற்கு மாத்திரமே என்றாலும் திலினிக்கு அவ்வாறான எந்தச் சட்டச் சிக்கல்களும் இருக்கவில்லை. அவளது பாதுகாப்பு ஆலோசகர்களாகவும், சட்ட ஆலோசகர்களாகவும் சில பொலிஸ் உயர் அதிகாரிகளே இருந்தனர்.

கலாநிதியான தொழிலதிபரின் வீட்டுக்கு அவள் நாக பாம்பு ஒன்றையும் எடுத்துக் கொண்டே சென்றாள். அவள் அந்த நாக பாம்பை கலாநிதிக்குக் காட்டி “இது உங்கள் தந்தை. அவர் மரணித்து இப்போது நாகபாம்பாகப் பிறந்திருக்கின்றார். எனக்கு இதைப் பற்றி அம்மா ஆரூடம் கூறினார். வீட்டில் நிறைய பணம் உள்ளதாம். அந்தப் பணத்தை வீட்டில் வைத்திருக்க வேண்டாம் என்றும் அம்மா கூறினார். அவ்வாறு வீட்டில் பணத்தை அடுக்கி வைத்திருந்தால் அது உங்களை அழித்துவிடும்” எனக் கூறினார்.

இவ்வாறான பல விடயங்களை திலினி அந்த கலாநிதியின் தலையில் ஏற்றி, அவரது மனதை குழப்பியுள்ளார். காரணம் அவர் இவ்வாறான விடயங்களை நம்புபவர் என்பதனாலாகும். கடைசியில் அந்த கலாநிதி வேறு வழிகளின்றி தனது மொத்த பணத்தையும் சாக்கு ஒன்றில் போட்டுக் கட்டி திலினியிடம் ஒப்படைத்துள்ளார். திலினி அதற்கான பிணையாக தங்க தடிகள் சிலவற்றை கலாநிதிக்கு வழங்கியுள்ளார். கலாநிதியிடமிருந்து பெற்றுக் கொண்ட பணத்திற்குப்பிணையாகவே திலினி இந்த தங்க தடிகளை வழங்கியுள்ளார். அது பார்ப்பதற்கு தங்க தடியாக இருந்தாலும் அது தங்க முலாம் பூசப்பட்ட பித்தளையாகும்.

திலினிக்கு சமூகத்தில் இருந்த மதிப்பு, கௌரவம் என்பன காரணமாக எந்தவித பயமோ, சந்தேகமோ இல்லாமல் கலாநிதியை ஏமாற்ற முடிந்ததோடு, தன்னிடமிருந்த பணம் முழுவதையும் திலினியிடம் ஒப்படைக்கும் நிலையும் கலாநிதிக்கு ஏற்பட்டது. அவளுடன் நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டது நாட்டின் உயர் பிரமுகர் ஒருவரின் மனைவி மற்றும் அமைச்சர்களுமாகும். அவளைச் சுற்றி நாட்டின் பிரபலமான கலைஞர்கள், நடிகர்கள் பலரும் இருந்துள்ளார்கள். அவள் பொலிஸ் உயர் அதிகாரிகள் பலருடன் மிக நெருக்கமான உறவை வைத்திருந்தாள். சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்ட சில நிகழ்ச்சிகளில் அவள் அமைச்சர்களுடன் ஒரே வரிசையில் அமர்ந்திருப்பார். இவற்றையெல்லாம் பார்த்த இந்த கலாநிதி தன்னிடமிருந்த பணத்தை அவளது வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு வழங்கியது அவரது தாய் நாக பாம்பாக அவளிடம் கூறியதாகத் தெரிவித்த அழிவிலிருந்து தப்புவதற்கும், அந்தப் பணத்தை வீட்டில் வீணாக அடுக்கி வைத்திருப்பதை விடவும் அவளிடம் கொடுத்தால் அதிக இலாபம் தனக்கு கிடைக்கும் என நினைத்தேயாகும். கடைசியில் அவரது மொத்த பணமும் இல்லாமல் போனது. குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் அந்தக் கலாநிதி இது தொடர்பில் முறைப்பாடு செய்யும் போது பல தடவைகள் சுயநினைவிழந்து வீழ்ந்தார்.

திலினி இந்த அனைத்து விளையாட்டுகளையும் நன்கு திட்டமிட்டு ஆடினார். உலக வர்த்தக மத்திய நிலையத்தில் மேற்கு தொகுதியில் 34ம் மாடியையே அவள் மாதத்திற்கு 14இலட்சம் ரூபாய் வாடகைக்கு பெற்றிருந்ததும், அவ்வாறான இடத்தில் வர்த்தக அலுவலகம் அமைந்திருப்பதும் அவளை மிகப் பெரும் வர்த்தகத் தொகுதியின் சொந்தக் காரியாக சமூகத்தில் காட்டிக் கொள்வதற்கேயாகும். 2019ம் ஆண்டின் நடுப்பகுதியில் அவள் தனது வர்த்தக நடவடிக்கைகளை அங்கு ஆரம்பிக்கும் விழாவுக்கு அழைக்கப்பட்டவர்களிடையே நாட்டின் பிரபலமான தேரர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட சமூகத்தில் முக்கியமானவர்கள் பலரும் உள்ளடங்கியிருந்தனர். அவள் இந்த மோசடியை வெற்றிகரமாகச் செய்வதற்கு விளம்பரப்படுத்தியது இந்தப் பிரமுகர்களேயாகும்.

ஒரு தனியார் தொலைக்காட்சியில் சிங்களத்தில் டப்பிங் செய்யப்பட்ட இந்திய டெலி நாடகத்தின் பிரபலமான பாத்திரத்தை இலங்கைக்கு அழைத்து வந்து நட்சத்திர ஹோட்டலில் பெரும் விழாவை ஏற்பாடு செய்தார். அத்துடன் நிறுத்திக் கொள்ளவுமில்லை. இந்நாட்டின் கலைஞர்களது பிறந்த நாள் விழாக்களையும் கூட அவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு ஏற்பாடு செய்வார். இதனால் அவளைச் சுற்றி ஏராளமாக கலைஞர்கள் எப்போதும் இருந்தனர். இதனிடையே அவளிடம் பயன் பெற்ற சில நடிகைகள் விபசாரிகளாக மோசமான நிலைக்குக் கூடத் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் இது குறித்து அந்த நடிகைகள் முறைப்பாடு எதுவும் செய்யவில்லை. காரணம் திலினியின் மோசடியில் சிக்கிய வர்த்தகர்கள் மாத்திரமின்றி, அந்த நடிகைகளும் ஒன்றாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் குரல் பதிவுகள் திலினியிடம் இருப்பதுதான் அதற்குக் காரணம். ஆனால் வெளியில் வந்திருப்பது ஒன்றிரண்டு மாத்திரமேயாகும். அதுவும் குரல் பதிவுகள் மாத்திரமேயாகும். விசாரணைகளுக்கு அமைய இவ்வாறான ஏராளமான வீடியோக்கள் திலினியிடம் உள்ளன. அதனால்தான் திலினியிடம் கோடிக் கணக்கில் பணத்தை இழந்தவர்கள் அது பற்றி வெளியில் கூறவில்லை.

திலினி அகப்பட்டதைத் தொடர்ந்து குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு ஏராளம் தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. அவற்றுள் அதிகமானோர் திலினியிடம் சிக்கி கோடிக்கணக்கில் பணத்தை இழந்தவர்களாகும். அவர்களுள் அரசியலோடு தொடர்புடைய பலரும் இருந்தார்கள். அவர்களுள் 80கோடியை இழந்ததாகச் சொல்லப்படும் ஒருவரும் இருந்தார். முதலில் அவர் கூறியது 8கோடி என்றேயாகும். தற்போது அதனையும் விட குறைந்த தொகையையே அவர் கூறுகின்றார். திலினிக்கு எதிராக குற்றவியல் திணைக்களத்திற்கு வந்து முறைப்பாடு செய்யுமாறு பல சந்தர்ப்பங்களிலும் அவரிடம் கூறப்பட்டாலும் அவர் இக்கட்டுரை எழுதப்படும் 14ம் திகதி வெள்ளிக்கிழமை வரைக்கும் அந்த முறைப்பாட்டைச் செய்திருக்கவில்லை.

திலினி அனேக வர்த்தகர்களைப் பிடித்துக் கொண்டது அவளுக்கு மிக நெருக்கமானவர்களாக ஆகியிருந்த இந்நாட்டின் பிரபலமான நடிகைகள் மற்றும் அழகிகள் சிலரை கொண்டேயாகும். அவள் மீது இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்படுவது 2012ம் ஆண்டு வாடகை அடிப்படையில் கார் ஒன்றைப் பெற்றுக் கொண்டு செய்த பண மோசடியை அடுத்தேயாகும். 50ஆயிரம் ரூபாய் வாடகைக்குப் பெற்றுக் கொள்ளப்பட்ட அல்ட்டோ வகை காருக்காக கார் உரிமையாளருக்கு வழங்கப்பட்ட 50ஆயிரம் ரூபாய்க்காக வங்கியில் பணமில்லாத காசோலையை வழங்கியுள்ளார். இதன் பின்னர் கார் உரிமையாளர் திலினியைத் தேடித் திரிந்த போதும் அவர் தலைமறைவாகியிருந்துள்ளார்.

கடைசியில் கார் உரிமையாளர் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அந்நேரம் அவள் இரத்தமலானை பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் காருக்கு 5000ரூபாவுக்கு பெற்றோல் அடித்துக் கொண்டு தப்பி ஓடியிருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த மோசடி தொடர்பான முறைப்பாடு பதியப்பட்டு அதிக நாள் கடப்பதற்கு முன்னர் இரத்மலானை தர்மராஜ வீதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த அவள் கார் உரிமையாளரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்டார். அந்நேரம் அவள் மோசடிகளோடே வாழும் ஒரு பெண்ணாகியிருந்தாள்.

திலினியின் தேசிய அடையாள அட்டையின் தரவுகளுக்கு அமைய அவள் 1982ம் ஆண்டு அக்டோபர் 29ம் திகதி பிறந்தவள். அவள் பிறந்தத் களுத்துறையில். அவள் வதிவிடமாக அதில் குறிப்பிடப்பட்டிருப்பது ஹோகந்தர வடக்கு, வானகுரு மாவத்தையில் அமைந்துள்ள வாடகை வீடாகும். அவளது முகவரி ஹோகந்தர பிரதேசமாக இருந்தாலும், களுத்துறையில் பிறந்திருந்தாலும் தனது பெற்றோருடன் வாழ்ந்திருப்பது அத்துருகிரிய பிரதேசத்திலாகும். அவள் கல்வி கற்றதாகக் கூறப்படுவது பன்னிப்பிட்டிய பிரதேச பாடசாலை ஒன்றிலாகும். அவள் 8ம் வகுப்பு சித்தி பெறாத ஒருத்தியாகக் கூறப்பட்டாலும், கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய அவள் அப்பாடசாலையில் 10ம் வகுப்பு வரைக்கும் கல்வி கற்றுள்ளார்.

அவளது இந்த விளையாட்டுக்களுக்கு இந்நாட்டின் பிரபலமாக தேரர்கள் சிலரும் இரையாகியுள்ளனர். அந்த தேரர்கள் இதுவரையிலும் இந்த மோசடிகள் தொடர்பில் குற்றிவியல் விசாரணை திணைக்களத்திடமோ, வேறு பிரிவுகளிடமோ முறைப்பாடுகளைச் செய்திருப்பதாக இதுவரை தெரிய வரவில்லை. விகாரைகளில் உள்ள பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு திலினி முதலில் அணுகியதாகச் சொல்லப்படுவது நாட்டின் பெயர் போன பிரபலமான தேரரையேயாகும். அந்த தேரருக்கு ஐ போன் ஒன்றையும் திலினி வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர் அந்த தேரரிடம் இருந்த பணத்தையும் இரட்டிப்பாக்கித் தருவதாக நாடகமாடி அந்தப் பணத்தையும் சுருட்டிக் கொண்டது அந்தப் பணத்திற்கு பதிலாக தங்க தடிகளை விகாரையில் வைத்தேயாகும். அவை பார்ப்பதற்கு தங்கத் தடிகளைப் போன்றிருந்தாலும், அவை தங்க மூலம் பூசப்பட்ட பித்தளைகளால் உருவாக்கப்பட்ட போலித் தங்கத் தடிகளாகும்.

அவளால் ஏமாற்றப்பட்ட வர்த்தகர்கள் பணத்தைக் கேட்டு வரும் போது அவர்களை கடவத்தை விகாரைக்கு அவர்களை அழைத்துச் சென்று விகாரையில் கூடாரம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த தங்க தடிகளைக் காட்டி, அவற்றை விற்று பணத்தைத் தருவதாக அவர்களுக்கு கூறி வந்துள்ளாள். அதன் போது அவர்களுக்கு அவள் நல்லவள் என்று நற்சான்றிதழ் வழங்கியிருப்பது அந்த விகாரையின் ரஹத் என்ற தேரரே எனக் கூறப்படுகின்றது. அங்கிருந்த தங்க தடிகளை அவள் இடத்திற்கு இடம் எடுத்துச் சென்றிருப்பதும் பொலிஸ் உயர் அதிகாரிகளின் ஆசீர்வாதத்துடனேயாகும். அவள் தங்க தடிகளை எடுத்துச் செல்வதற்கு பாதுகாப்பை வழங்கியிருப்பதும் அந்த பொலிஸ் உயர் அதிகாரிகளேயாகும்.

விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதன் பிரகாரம் சிறியளவில் மேற்கொள்ளப்பட்ட இவளது வியாபாரத்திற்கு சமூகத்தில் அறியப்படாத உயர் பணக்காரர்கள் சிக்க வைக்கப்பட்டிருப்பது இந்நாட்டில் கலப்பு திட்டங்களுடன் தொடர்புடைய முதலீட்டு நிறுவனத்தின் இந்நாட்டு பெண் அதிகாரியோடு நெருங்கியேயாகும். அதன் மூலம் நாட்டின் சில பணக்காரர்களின் மனைவிகளுடன் உறவைத் வளர்த்து அந்தச் சமூகத்தின் ஒரு அங்கமாக மாறியுள்ளார்.

இவ்வாறேதான் அவள் இந்த நாட்டில் அறியப்படாத கோடீஸ்வரர்களின் உலகில் நுழைகிறாள். அவளது அனேக பணப்பரிமாற்றங்கள் பன்னாட்டு நிறுவன அலுவலகத்தினுள்ளும், அரசியல்வாதி ஒருவரின் அலுவலகத்தினுள்ளும் நடந்ததாக கூறப்படுகிறது.

அரசாங்கத்துடன் தொடர்பில்லாத அந்த அரசியல்வாதி ஒரு கட்சியின் தலைவருமாவார். 80கோடிகளை அவள் அபகரித்தாள் எனக் கூறப்படுவதும் அந்த அரசியல்வாதியிடமேயாகும்.

கயான் குமார வீரசிங்க
தமிழில்: எம். எஸ். முஸப்பிர்
(புத்தளம் விசேட நிருபர்)

Comments