அனேக தமிழக கட்சிகள் இலங்கை தமிழர் விவகாரத்தை கையிலெடுப்பது தமது அரசியல் நலனுக்காக மாத்திரமே | தினகரன் வாரமஞ்சரி

அனேக தமிழக கட்சிகள் இலங்கை தமிழர் விவகாரத்தை கையிலெடுப்பது தமது அரசியல் நலனுக்காக மாத்திரமே

தமிழகத்தின் சென்னை மேல் நீதிமன்ற வழக்கறிஞரும், நடிகர் கமல்ஹாசன் தலைமையிலானமக்கள் நீதி மய்யம் கட்சியின்  மாநிலச் செயலாளரும் சென்னைலயன்ஸ் கழக ஆளுனருமான லயன் எம். ஸ்ரீதர் கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அவர் தமது விஜயத்தின் நோக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து தினகரன் வாரமஞ்சரிக்கென விஷேட நேர்காணலொன்றை வழங்கினார். நேர்காணல்

முழுமையாக.....

கேள்வி: உங்களை இலங்கை மக்களுக்கு சுருக்கமாக அறிமுகப்படுத்த முடியுமா?  

பதில்: நான் லயன் எம் ஸ்ரீதர். சென்னை மேல் நீதிமன்றத்தில் சுமார் 28ஆண்டுகள் வழக்கறிஞராக இருக்கிறேன். சிக்கலானதும் பிரபலமானதுமான வழக்குகள் பலவற்றில் ஆஜராகியுள்ள என்னை சென்னையில் எல்லா துறையினரும் நன்கறிவர். சட்டம் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்காக நேர்மையாக குரல் கொடுத்து வருகின்றேன்.  

அதேநேரம் நடிகர் பத்மஸ்ரீகமல்ஹாசனை ஸ்தாபகராகவும் தலைவராகவும் கொண்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளேன். கடந்த பாராளுமன்ற தேர்தலில் சென்னை ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் டி.ஆர் பாலுவை எதிர்த்து போட்டியிட்டு மூன்றாவதாக வந்தேன். எனக்கு ஒரு இலட்சத்து 46ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. எமது கட்சிக்கு முதல் மூன்று மாதத்திலேயே தொகுதியொன்றில் இவ்வளவு வாக்குகள் கிடைத்துள்ளன. 

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான வழக்குகளை கையாண்டமை தொடர்பில் ஹொலண்ட் நாட்டின் ரிஹெபிலிட்டேசன் இன்டர்நெசனல் அமைப்பின் விருதும் எனக்கு கிடைத்துள்ளது.  

தற்போது சென்னை லயன்ஸ் கழக ஆளுனராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நான், சுமார் 200லயன்ஸ் கழகங்களுக்கு தலைமை தாங்கும் பொறுப்பையும் வகிக்கின்றேன். 

கேள்வி: இலங்கைக்கான உங்களது விஜயத்தின் நோக்கம் பற்றிக் குறிப்பிடுவதாயின்?  

பதில்: நான் ஏற்கனவே மூன்று தடவைகள் இங்கு வருகை தந்துள்ளேன். அவை சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்ட விஜயங்கள். இது நான்காவது விஜயம். இலங்கையிலுள்ள லயன்ஸ் கழகமும் சென்னை லயன்ஸ் கழகமும் இணைந்து போரினால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களை சேர்ந்த மக்களுக்கு பல சேவைகளை முன்னெடுக்க உள்ளேன். அதன் நிமித்தமே இங்கு வருகை தந்துள்ளேன்.  

குறிப்பாக இலங்கை - இந்திய நட்புறவு நூலகமொன்றை 1000நூல்களுடன் வவுனியாவில் அமைக்க உள்ளோம். கண்ணிவெடிகளால் கால்களை இழந்துள்ளவர்களுக்கென ஆயிரம் சோடி செயற்கை கால்களை முதலில் இலவசமாக வழங்கவிருக்கின்றோம். இச்சேவையை வவுனியா உள்ளிட்ட ஏனைய பகுதிகளுக்கும் எதிர்வரும் வருடங்களில் விஸ்தரிக்க உள்ளோம்.  

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் தொழில் ரீதியில் பெற்றுள்ள அறிவின் அடிப்படையில் இலங்கை அரசுடன் கலந்துரையாடி அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கவும் உத்தேசித்துள்ளோம். அத்தோடு தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் தாயகம் திரும்பவும் மீளக்குடியேறவும் விருப்பம் தெரிவிப்பார்களாயின் அது தொடர்பிலான ஏற்பாடுகளை இந்திய, இலங்கை அரசுகள் ஊடாக செய்து கொடுக்கவும் தயாராக உள்ளோம்.  

தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதிகள் பலரின் இரண்டாவது தலைமுறையினர் அங்கு படித்து பட்டம் பெற்றுள்ளனர். அவர்கள் படித்த படிப்புக்கு இலங்கையில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நாம் முன்வைத்துள்ளோம். அத்தோடு தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதிகளுக்கும் அங்குள்ள தூதரகத்தின் ஊடாக கடவுச்சீட்டு வழங்குமாறு கேட்டுள்ளோம். அது தொடர்பில் குழுவொன்று அமைக்கப்பட்டு அகதிகளை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எமது கோரிக்கையும் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் இலங்கை மற்றும் சென்னை லயன்ஸ் கழகங்கள் இணைந்து செயற்படுகின்றன.  

கேள்வி: பொருளாதார ரீதியில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இலங்கைக்கு உதவி ஒத்துழைப்புகளை நல்குவது குறித்து தமிழகத்திலுள்ள இலங்கையின் துணைத் தூதுவரை நடிகர் கமல்ஹாசன் அண்மையில் சந்தித்து கலந்துரையாடினார். அச்சந்திப்பின் முன்னேற்றங்கள் குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் என்ற அடிப்படையில் கூற முடியுமா?  

பதில்: தலைவர் கமல்ஹாசன் இந்தியன் 2படப்பிடிப்பு முடிவுற்ற பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இரண்டு மூன்று மாதங்களில் அவர் இங்கு வருவார். என்றாலும் தமது இலங்கைக்கான விஜயத்தில் அரசியல் கலந்துவிடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார். இலங்கை தமிழருக்காக தமிழகத்தில் முதலில் குரல் கொடுத்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ள போதிலும் அதனை தன் அரசியல் நலன்களுக்காக அவர் பயன்படுத்தியதில்லை.  

தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் கௌரவமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டுமென்பதே அவரது கொள்கை. பசி என்பது இருப்பதால் தான் வறுமை, தீவிரவாதம் என்பன ஏற்படுகின்றன. அதனால் பசி, பட்டினியை ஒழிக்கும்போது இது எதுவும் இராது. கொரோனா காலத்தில் பசியின் உண்மை முகத்தை ஒவ்வொருவரும் தெளிவாக அறிந்து கொண்டுள்ளனர்.  

கேள்வி: இலங்கைக்கான விஜயத்தில் நடிகர் கமல்ஹாசனின் எதிர்பார்ப்பு?  

பதில்: பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இந்நாட்டுக்கு உதவி ஒத்துழைப்புகளை நல்குவது குறித்து ஆராயவும் இந்நாட்டில் வாழும் தமிழ் மக்களின் உண்மையான மன ஓட்டத்தையும் அறிந்து கொள்ளவும் அவர் எதிர்பார்த்துள்ளார்.

குறிப்பாக தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் உண்மையாகவே என்ன செய்ய வேண்டும்? தமிழ் நாட்டிலுள்ள இலங்கை தமிழ் அகதிகள் இங்கு திரும்பி வந்தால் அவர்களது வாழ்வாதாரம் எவ்வாறு அமையும்? என்பன குறித்து ஆராய்ந்து அறிந்துகொள்ள உள்ளார். இது ஒரு தமிழனுக்கு மற்றொரு தமிழன் செய்யும் கடமையே அன்றி வேறில்லை.

என்றாலும் இரண்டு நாடுகளது அரசுகளின் சட்ட திட்டங்களுக்கும் கொள்கைகளுக்கும் உட்பட்ட வகையில் தான் அவரது விஜயம் அமைந்திருக்கும்.  

கேள்வி: தமிழகத்திலுள்ள இரண்டொரு அரசியல்வா திகள் இலங்கை தமிழர் விவகாரத்தை கையா ளும் விதத்தை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?  

பதில்: அவர்கள் தங்கள் நலன்களுக்காவே இலங்கை தமிழர் விவகாரத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதே அவர்களது எதிர்பார்ப்பாகும்.

அதற்காக தாமே இலங்கைத் தமிழர்களின் பாதுகாவலர்கள் என்று குரல் கொடுக்கின்றனர். அவ்வாறான ஏமாற்று அரசியலுக்கும் எமது தலைவர் கமல்ஹாசனுக்கும் வெகுதூரம். அவர் மக்களுக்கு என்ன தேவையோ அது தொடர்பில் குரல் கொடுப்பதோடல்லாமல் அவரது சொந்த முயற்சியில் எவ்வித அரசியல் நலனும் எதிர்பாராமல் இவ்விவகாரத்தைக் கையாளுகிறார். இரண்டு நாடுகளது அரசுகளின் சட்டதிட்டங்களுக்கும் கொள்கைகளும் உட்பட்டு அவற்றுக்கு ஆதரவு அளிக்கக்கூடியவராகவும் உள்ளார்.  

கேள்வி: நிறைவாக நீங்கள் கூற விரும்புவதென்ன?  

பதில்: மக்கள் நீதி மய்யம் எந்த வடிவத்திலும் தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை. வன்முறைக்கும் வெடி குண்டு கலாசாரத்துக்கும் எமது கட்சி முற்றிலும் எதிரானது. மக்களுக்காக நீதியின் அரசு அமைய வேண்டும் என்பதே எமது கட்சியின் இலக்கு. அதுவே மிகப் பெரிய தொண்டு. அதைத் தான் நாம் வலியுறுத்துகிறோம்.  

அரசியல் என்பது என் கடமை. நேர்மை என்பது எனது மிகப்பெரும் ஆயுதம். அகிம்சை என்பது காந்தியின் கொள்கை. இந்த மூன்றையுமே மக்கள் நீதி மய்யமும் தலைவர் கமல்ஹாசனும் அடுத்த தலைமுறையினருக்கு விதைக்கின்றனர்.  நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கட்சியைத் தொடங்கினாலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல தலைமைகளை உருவாக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். பரம்பரை அரசியல், சாதி அரசியல், பணத்துக்கு வாக்கை விற்றல், மத ரீதியிலான பிரிவினை ஆகியவற்றை எமது கட்சி கடுமையாக எதிர்க்கிறது.  

கடந்த தேர்தலில் எமது தலைவரோ நாமோ தோல்வி அடையவில்லை. மாறாக நேர்மையை ஆதரிக்கும், அதனை எதிர்பார்க்கும் மக்கள் எவ்வளவு பேர் தமிழ்நாட்டில் உள்ளனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளோம்.  

எமது தலைவர் ஆட்சியில் இல்லாத போதிலும் அவர் முன்வைக்கும் திட்டங்களையும் விடுக்கும் கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றக்கூடிய சூழல் காணப்படுகிறது. குறிப்பாக வீட்டு பெண்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும், பெண்களுக்கு பஸ்ஸில் இலவச பயணச் சீட்டு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை எமது தலைவரே முதலில் முன்வைத்தார்.

அத்திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. நாம் முன்வைக்கும் சமூக பிரச்சினைகளை அரசு ஏற்றுக்கொள்வதை நாம் வரவேற்கின்றோம். யார் செய்தாலும் மக்களுக்கு நல்லது கிடைக்கப்பெற வேண்டும் என்பது தான் எமது கொள்கை.  

பேட்டி கண்டவர்:
மர்லின் மரிக்கார்

Comments