காலநிலை உச்சிமாநாட்டில் மன்னர் சார்ள்ஸின் பங்கு அளப்பரியது | தினகரன் வாரமஞ்சரி

காலநிலை உச்சிமாநாட்டில் மன்னர் சார்ள்ஸின் பங்கு அளப்பரியது

COP 27உச்சிமாநாட்டில் மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை எகிப்தில் நடைபெறவுள்ள COP 27மாநாட்டில் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்பின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். Leader YouTube அலைவரிசையின் பசினி விதானகேவுடன் கடந்த 13ஆம் திகதியன்று இடம்பெற்ற நேர்காணலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். COP 27மாநாட்டில் பங்குபற்றுவதற்கு மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் தீர்மானித்துள்ளதாக பகிங்ஹாம் அரண்மனை ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்த ஆண்டு COP மாநாட்டில் மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் கலந்து கொள்ள வேண்டும் என்று கடந்த ஆண்டு COP 26மாநாட்டின் தலைவரும், பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் டிரஸ்டின் அமைச்சரவை உறுப்பினரான அலோக் சர்மா கூறியிருந்தார். ஆனால் அவர் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ்ட் , மன்னர் சார்ள்ஸிற்கு உத்தரவிட்டதாக வெளியான செய்திக்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருந்தார். பிரிட்டிஷ் செய்தி அறிக்கைகளின்படி, மன்னர் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மூன்றாவது சார்ள்ஸ் மன்னர் , காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தணிப்பதற்காக நீண்டகாலமாக பங்காற்றி வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற COP 26மாநாட்டின் தொடக்க உரையை அவர் நிகழ்த்தியிருந்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகராக நோர்வேயின் முன்னாள் சுற்றாடல் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த மாதம் எகிப்தில் நடைபெறவுள்ள COP 27உச்சி மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார். ஜனாதிபதியுடனான முழுமையான நேர்காணல்;

கேள்வி: நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இவ்வேளையில் காலநிலை மாற்றம் தொடர்பில் இலங்கை ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகின்றது?

பதில்: பொருளாதார நெருக்கடியை நோக்கும் போது, தொடர்ச்சியாக அரசியல் மாற்றங்களையும் நாம் இயல்பாகவே கவனிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் பொருளாதாரமும் காலநிலை மாற்றமும் ஒன்றோடொன்று தொடர்புபட்டுள்ளன. இந்த நிலையில் இருந்து மீள வேண்டுமானால் நாட்டில் பொருளாதார அபிவிருத்தி ஏற்பட வேண்டும். நாம் முன்னேற வேண்டும். எனவே நமது பொருளாதாரம் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். அதைத்தான் இன்று உலகில் உள்ள அனைவரும் பின்பற்றுகிறார்கள். நாம் அதற்கு வெளியே இருக்க முடியாது.அடுத்து, பசுமைப் பொருளாதாரமாக இலங்கைக்கு இருக்கும் சாத்தியக்கூறுகளை அடையாளங் காண வேண்டும். நாங்கள் இப்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்து கவனம் செலுத்தியிருக்கிறோம். இலங்கைக்கு பலனளிக்கக் கூடிய பல துறைகள் உள்ளன. அவற்றில் நாம்  கவனம்   செலுத்த   வேண்டும்.

கேள்வி: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இலங்கை நடைமுறைப்படுத்தியுள்ள அல்லது செயல்படுத்த திட்டமிட்டுள்ள விடயங்கள் என்ன?

பதில்: உண்மையில், இலங்கையில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக, Cop 26இன் பிறகு பெரிதாக எதையும் செய்யவில்லை. ஆனால் எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது. 2015இல் கைச்சாத்திடப்பட்ட பரிஸ் உடன்படிக்கையில் உள்ள விடயங்கள் மற்றும் Cop 26இல் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பொதுநலவாய தலைவர்களின் தீர்மானம் ஆகியவற்றை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். நீலப் பொருளாதாரம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த கட்டமைப்பிற்குள், எங்கள் முன்னெடுப்புகள் ஊடாக எமக்கிருக்கும் சாத்தியப்பாடுகள் வடிவமைக்கப்படுகின்றன . நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இதில் குறிப்பாக நீர் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். செழிப்பற்ற நிலம் மற்றும் காடுகளில் மீள் மர நடுகை மேற்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. மேலும், இலங்கைக்கு மாத்திரமல்ல முழு பிராந்தியத்திற்கும் காட்டின் அடர்த்தியை மேம்படுத்துவது அவசியமானது என நான் உணர்கிறேன்.இது தவிர, காலநிலை மாற்றம் தொடர்பில் அதிகாரிகள் மற்றும் ஆர்வலர்களிடையே திறன் மேம்பாட்டை கட்டியெழுப்புவதற்காக காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றையும் நாங்கள் முன்மொழிந்துள்ளோம்.

கேள்வி: நீங்கள் Cop உச்சி மாநாட்டைப் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். மேலும் நீங்கள் Cop 27மாநாட்டில் பங்கேற்பதாக அறிவித்துள்ளீர்கள். இந்த மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் உங்கள் அரசாங்கம் என்ன எதிர்பார்க்கிறது?

பதில்: இந்து சமுத்திர தீவாக ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொடர்பில் நாம் அக்கறை கொண்டுள்ளதால் நாம் எமது பங்களிப்பைச் செய்ய வேண்டும். குறிப்பாக இந்தியாவுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

அதிலும் தமிழ்நாட்டுடன் பணியாற்ற வேண்டும். காலநிலை மாற்றம் தொடர்பில் நிறைய விடயங்கள் இடம்பெறுகின்றன. நாங்கள் முன்மொழிந்த காலநிலை மாற்றம் குறித்த பல்கலைக்கழகத்திற்கு ஆதரவைப் பெற விரும்புகிறேன்.

எனவே நாம் முன்னோக்கி பயணித்து வருகிறோம். காலநிலை மாற்றம் தொடர்பாக எனது விசேட பிரதிநிதியாகச் செயல்பட முன்வருமாறு மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி நசீத் அஹமதிடம் நான் விசேட கோரிக்கை முன்வைத்துள்ளேன். இதற்கிடையில், எரிக் சொல்ஹெய்ம் எமது சட்டம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த பல்கலைக்கழகம் ஆகிய இரண்டிற்கும் ஆலோசகராக செயற்பட முன் வந்துள்ளார்.

கேள்வி: கால நிலை மாற்றம் தொடர்பான மாநாடு இந்த வருடத்துடன் சேர்ந்து 27தடவைகள் செயற்பட்டுள்ளது. மாநாடு வெற்றிகரமாக நடந்ததாக நீங்கள் கருதுகிறீர்களா ? அல்லது அதனை மேம்படுத்த வாய்ப்பு உள்ளதா?

பதில்: 2015ஆம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாகும். ஏனெனில் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்ட ஆண்டு அது. சந்தேகத்திற்கு இடமின்றி, 26வது மாநாடு மிகவும் முக்கியமானது. நாங்கள் Cop 26தொடர்பில் பின்ஆய்வு செய்ய வேண்டும். உண்மையில், சில நாடுகள் ஓரளவு பின்னடைவுகளைச் சந்தித்துள்ளன. அல்லது அவற்றின் நிலைப்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் Cop 27முக்கியம் பெறுகிறது. Cop 27மாநாட்டில் உரையாற்ற இங்கிலாந்து மன்னர் சார்ள்ஸ் அழைக்கப்பட்டார். இது மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் பங்கேற்பது தொடர்பாக இங்கிலாந்தில் சில சிக்கல்கள் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. எனக்கு இங்கிலாந்து பற்றி பேச முடியாது.

ஆனால் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பினர் என்ற வகையில், பொதுநலவாய அமைப்பின் தலைவரான மன்னர் சார்ள்ஸ் கலந்து கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன். கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் காலநிலை மாற்றம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனவே, மன்னர் சார்ள்ஸ் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும். இங்கிலாந்து அரசாங்கம் தமது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நான் கருதுகிறேன். எகிப்தில் நடக்கும் Cop 27மாநாட்டில் மன்னர் சார்ள்ஸ் பங்கேற்க வேண்டும். ஏனெனில் அவருக்கு அதில் பாரிய பங்கு இருக்கிறது.

 

Comments