டி20 உலகக் கிண்ணம் ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

டி20 உலகக் கிண்ணம் ஆரம்பம்

45போட்டிகள், ஏழு மைதானங்கள், 16அணிகள், 29நாட்கள் என எட்டாவது டி20உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாகியுள்ளது. இன்று ஆரம்பமாகும் முதல் சுற்றுப் போட்டிகளில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும். இரு குழுக்களாக நடைபெறும் முதல் சுற்றில் அந்த இரண்டு குழுக்களிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சுப்பர் 12சுற்றுக்கு முன்னேறிவிடும்.

ஆரம்ப சுற்றில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் வலுவாக இருந்தபோதும், முடிவுகள் எப்படியும் மாறலாம். தொடர்ந்து நடைபெறும் சுப்பர் 12சுற்றில் ஆரம்ப சுற்றில் பங்கேற்காத எட்டு அணிகளுடன் தகுதிபெறும் நான்கு அணிகளும் இணைந்து கொள்ளும்.

கடந்த ஆண்டின் டி20தரவரிசையில் முதல் எட்டு இடங்களை பிடித்த அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளே சுப்பர் 12சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் சுப்பர் 12சுற்றுப் போட்டிகளும் ஆறு, ஆறு அணிகள் என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டே நடைபெறும். இதன்படி குழுவில் உள்ள ஒரு அணி மற்ற அணியுடன் ஒரு தடவை மோதும். பின்னர் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவதோடு நவம்பர் 13ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் அடுத்த உலக சம்பியன் யார் என்பது தீர்மானிக்கப்படும்.

இம்முறை போட்டிகள் அவுஸ்திரேலியாவில் நடைபெறுவதால் அதற்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் அணிகளுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். பெரிய மைதானம், வேக மாக மேலெழும் பந்துகள் என வித்தியாசமான டி20உலகக் கிண்ணம் ஒன்றை பார்க்கலாம்.

ஆரம்ப சுற்றில் ஆடும் நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, சிம்பாப்வே தவிர சிறப்பாக ஆடுகின்றபோது ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் கிண்ணத்தை சுவீகரிப்பது என்பது கிரிக்கெட் வரலாற்றையே திருப்பிப் போடும் வகையான அசாதாரணமானது. அப்படியான ஒரு நிகழ்வுக்கு எதிர்வுகூறல்களை கூறுவது சாத்தியமில்லை. மற்றபடி ஏனைய எட்டு அணிகளின் வெற்றி வாய்ப்பு எப்படி என்று பார்க்கலாம்.

அவுஸ்திரேலியா

போட்டியை நடத்தும் நாடு, நடப்புச் சம்பியன் என்ற வகையில் அவுஸ்திரேலியாவுக்கான வெற்றி வாய்ப்பு என்பது உச்சத்தில் இருக்கிறது. வலுவான துடுப்பாட்ட வரிசையில் ஆரம்பத்தில் அணித் தலைவர் அரோன் பின்ச் மற்றும் டேவிட் வோர்னர் அபாயமானவர்கள். அடம் சம்பா மற்றும் மிட்சல் ஸ்டாக் ஆகியோர் பழகிப்போன ஆடுகளத்தில் பந்துவீச்சில் எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு தலையிடியாக இருப்பார்கள். முதல்முறை அடுத்தடுத்து இரு டி20உலகக் கிண்ணங்களை வென்ற அணியாக சாதனை படைக்க அவுஸ்திரேலியாவுக்கு இது பொருத்தமான நேரமாக இருக்கிறது.

இந்தியா

கடந்த உலகக் கிண்ணத்தில் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள அணியாக களமிறங்கிய இந்தியா ஆரம்பத்திலேயே வெளியேறியது. அணியின் வலுவான துடுப்பாட்ட வரிசை பற்றி சந்தேகமே இல்லை. ஆனால் சகலமுறை வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் இன்றி அமையாத பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பூம்ரா அணியில் இல்லாதது பெரிய இடைவெளி. எனவே கடந்த முறைபோல் முழு நம்பிக்கையுடன் வந்து தோற்றுப்போவதை விட புதிய உத்திகளுடன் ஆடினாலே முன்னேற முடியும்.  

இங்கிலாந்து

எப்போதும் போல் இங்கிலாந்து இம்முறையும் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் அணியாகவே களமிறங்குகிறது. அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் என்ற கலவையுடனேயே தம்மை பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. அணித் தலைவர் ஜோஷ் பட்லர், அலெக்ஸ் ஹேல் சகலதுறை வீரர்களான பென் ஸ்டொக்ஸ், மற்றும் மொயின் அலி என போட்டியை எந்த நேரத்திலும் திசை திருப்பக் கூடியவர்கள் இருக்கிறார்கள். காலம் நேரம் சரியாக இருந்தால் கிண்ணத்தை வெல்ல பொருத்தமான அணியாக இங்கிலாந்து இருக்கும்.

தென்னாபிரிக்கா

சிறந்த பந்துவீச்சு வரிசை, அலட்டிக்கொள்ளாத துடுப்பாட்ட வரிசை என்று தென்னாபிரிக்காவின் உலகக் கிண்ணக் குழாம் எதிரணிக்கு சவாலாகவே இருக்கிறது. அணித்தலைவர் டெம்பா பவுமா உபாதைக்குப் பின் போட்டிக்கு தயாராக இருக்கிறார்கள். ஆனால் ரஸ்ஸி வான் டெர் டுசன் விரல் காயத்தால் விலகி இருக்கிறார். ககிசோ ரபாடா, டப்ரைஸ் ஷம்சி இருக்கும் வரை பந்துவீச்சு பற்றி கவலைப்படத் தேவையில்லை. என்றாலும் உலகக் கிண்ணம் என்று வரும்போது தென்னாபிரிக்க அணி துரதிருஷ்டவசமாகவேனும் ஏதோ ஒரு தவறை இழைத்து விடுகிறது. அது இம்முறை நிகழாமல் பார்த்துக் கொள்வது எல்லாவற்றையும் விட முக்கியம்.

பாகிஸ்தான்

வலுவான பந்துவீச்சு, அதுவும் அவுஸ்திரேலியாவுக்குப் பொருத்தமான வேகப்பந்து வரிசை. ஷஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா வேகத்தில் எதிரணிக்கு பெரும் சவாலாக இருப்பார்கள். சுழற்பந்தும் அப்படித் தான். ஆரம்ப வரிசையில் பாபர் அஸாம் மற்றும் மொஹமட் ரிஸ்வான் அபாரமாக ஆடுகிறார்கள். என்றாலும் மத்திய வரிசையில் பெரிய ஓட்டை இருக்கிறது. பக்கார் சமானும் காயம் காரணமாக ஆடாத நிலையில் அது பெரிதாகவே தெரிகிறது. இந்த பலவீனத்தை சரி செய்துகொண்டால், பாகிஸ்தானை விஞ்ச ஆளில்லை.

நியூசிலாந்து

இந்த ஆண்டு நியூசிலாந்து ஆடிய 15போட்டிகளில் 12இல் வெற்றி பெற்றிருக்கிறது. யாரும் பெரிதாக அவதானிக்காதபோதும் உலகக் கிண்ணத்தை வெல்ல அனைத்து தகுதிகளுடன் நியூசிலாந்துக்கு இருக்கிறது. கேன் வில்லியம்ஸ் தலைமையிலான நியூசிலாந்து அணியில் குறிப்பிட்டு கூறும்படியான வீரர்கள் இல்லாதபோதும் அனைவருமே கணிசமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். கடந்த டி20உலகக் கிண்ணத்தில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய நியூசிலாந்து அணி இம்முறையும் அதே பலத்துடன் களமிறங்குகிறது.

மேற்கிந்திய தீவுகள்

எப்போதும் ஒரு நிலையான அணியையோ, ஆட்டத் திறனையோ பேணாத மேற்கிந்திய தீவுகள் பற்றி எதிர்வுகூறுவது கடினமானது. உலகையே பயமுறுத்தும் முன்னணி அதிரடி வீரர் அன்ட்ரே ரசல் அணியில் சேர்க்கப்படவில்லை. மற்றொரு அதிரடி வீரரான ஷிம்ரோன் ஹெட்மயர் விமானத்தை தவறவிட்டு உலகக் கிண்ணத்தில் இடம்பிடிப்பதையே தவறவிட்டார். எனவே ஆரம்ப சுற்றில் விளையாடும் அந்த அணி ஆரம்ப சுற்றுடனேயே வெளியேறினாலும், எல்லா அணிகளையும் தகர்த்து உலகக் கிண்ணத்தை கைப்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.    

பங்களாதேஷ்

ஆசியக் கிண்ணத்தில் ஆப்கானிடம் கூட தோல்வி, சிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர்களில் தோல்வி என்று தோல்விகளையே சந்தித்து உலகக் கிண்ணத்திற்கு வந்திருக்கிறது பங்களாதேஷ். ஷகீப் அல் ஹசன் என்ற உலகத் தரம் வாய்ந்த வீரர் ஒருவரை மாத்திரம் வைத்துக் கொண்டு தான் ஒவ்வொரு போட்டிக்கான திட்டங்களையும் வகுக்கிறது. எனவே எதிரணி ஷகீபை இலக்கு வைத்தால் கிட்டத்தட்ட பங்களாதேஷ் அணியையே வீழ்த்தி விடலாம். எனவே பங்களாதேஷ் அணிக்கு பலமாகவும் பலவீனமாகவும் ஷகீப் அல் ஹசன் இருக்கிறார். ஷகீப் அல் ஹசனின் ஆட்டத்தை பொறுத்தே பங்களாதேஷ் அணி போட்டியில் எத்தனை தூரம் முன்னேறுகிறது என்று தங்கி இருக்கிறது.

இலங்கை

ஒருசில மாதங்களுக்கு முன் இலங்கை பற்றி பெரிதாக நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடந்த ஆசிய கிண்ணத்தில் பெற்ற வெற்றி அணியின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. துடுப்பாட்டத்தில் பானுக்க ராஜபக்ஷ, பத்தும் நிசங்க மற்றும் குசல் மெண்டிஸ் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க முக்கியமானவர். இவர்களைச் சுற்றி ஏனைய வீரர்களும் சோபித்தால் உலகக் கிண்ணம் என்பது கைக்கெட்டிய தூரம்.

எஸ்.பிர்தெளஸ்

Comments