அமைதியைக் குலைக்கும் உள்நோக்குடன் அரங்கேறும் அரசியல் நிகழ்ச்சித் திட்டங்கள்! | தினகரன் வாரமஞ்சரி

அமைதியைக் குலைக்கும் உள்நோக்குடன் அரங்கேறும் அரசியல் நிகழ்ச்சித் திட்டங்கள்!

பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நாட்டைப் படிப்படியாகச் முன்னேற்றகரமான வழிக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டிருப்பதுடன், முன்னேற்றத்துக்கான சில அறிகுறிகளும் தென்படத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் ஆரம்பகட்ட இணக்கப்பாடுகள் எட்டப்பட்டு, கடன் மறுசீரமைப்புத் தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உலக நாடுகள் பலவற்றிடம் இலங்கை உதவிகளைக் கோரியிருக்கும் அதேநேரம், நாட்டில் முக்கியமான மறுசீரமைப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.

கடந்த காலத்தில் அரசாங்கத்தின் வருமானம் பெருமளவு இழக்கப்பட்டிருந்தமையால் தற்போது அவற்றை ஈடு செய்யும் வகையில் பல்வேறு மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

நாட்டை சரியான பாதைக்குக் கொண்டு செல்வதற்குப் பொருளாதார ரீதியான நடவடிக்கைகள் மாத்திரமன்றி, அரசியல் ரீதியிலும் அர்ப்பணிப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கின்றது.

விசேடமாக பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்திருந்த சூழ்நிலையில் நாட்டின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு அரச எதிர்ப்பாளர்கள் சிலர் முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துகின்றனர். அரசியல்வாதிகள் மாத்திரமன்றிப் பொதுமக்களும் ஒன்றிணைந்தே நாட்டை அதலபாதாளத்திலிருந்து மீட்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியுள்ளது.

இவ்வாறான பின்னணியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதாலோ அல்லது அமைதியின்மையை ஏற்படுத்துவதாலோ நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண முடியாது என்பதை எதிர்ப்பாளர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

ஆர்ப்பாட்டங்களை மீண்டும் மீண்டும் முன்னெடுத்து நாட்டில் குழப்பகரமான நிலைமையை உருவாக்குவதற்கு சில தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை வெளிப்படையாகவே தெரிகின்றது. அவர்கள் இவ்வாறு தொடர்ந்தும் நாட்டை பதற்றமான நிலைமையில் வைத்திருப்பதற்கு முயற்சி செய்வார்களானால், நாட்டில் பொருளாதார நிலைமை மீண்டும் வீழ்ச்சிக்குச் சென்று விடுமென்பதை மறந்து விடலாகாது.

நாட்டில் முன்னர் காணப்பட்ட எரிபொருளுக்கான கியூவரிசை, எரிவாயுவுக்கான கியூவரிசை போன்ற நெருக்கடிகள் தற்போது பெருமளவில் குறைந்து விட்டன. கியூவரிசைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு சாதாரண நிலைமை ஓரளவுக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் அரசாங்கம் அத்தியாவசிய சேவைகளை இடையறாது முன்னெடுப்பதற்குத் தேவையான சகல முயற்சிகளையும் எடுத்துள்ளது.

இவ்வாறான நிலைமையில் மக்களை மீண்டும் வீதிக்கு இறக்கிப் போராடச் செய்வதற்கான சில முயற்சிகள் இடம்பெறுவதையும் பார்க்க முடிகிறது. கடந்த மே, யூன் மற்றும் யூலை மாதங்களில் மக்கள் போராட்டங்கள் என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட குழப்பங்களை நாட்டில் மீண்டும் ஏற்படுத்துவதற்கு சில தரப்பினர் முயற்சிப்பதாகத் தெரியவருகிறது. சிறிது சிறிதாக மக்களை ஒன்றுதிரட்டிப் போராட்டங்கள் ஆங்காங்கே முன்னெடுக்கப்படுகின்றன.

இருந்தபோதும் மேற்படி போராட்டங்களுக்குப் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு பெருமளவில் அருகியிருப்பதைத் தெளிவாகக் காணக் கூடியதாகவுள்ளது. மறுபக்கத்தில், போராட்டம் என்ற பெயரில் ஊடகங்களில் பிரபல்யமடையும் நோக்கத்துடன் தமது குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போராட்டக்களத்துக்கு வருகின்ற பெற்றோர்களையும் பார்க்க முடிகிறது.

குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலிமுகத்திடலில் நடத்தப்பட்ட போராட்டத்தில் தனது கைக்குழந்தையுடன் ஒரு தந்தை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அதேபோல, சிறுவயதுடைய பெண்பிள்ளையுடன் தாய் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்கு சட்டரீதியாகப் பொலிஸார் நடவடிக்கை எடுத்தபோது ஏற்படும் தள்ளுமுள்ளுகளில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படக் கூடிய ஆபத்துகள் சமூகஆர்வலர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. போராட்டங்களில் கலந்து கொள்ளும் பெற்றோர் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் பற்றிக் கவனத்தில் கொண்டிருப்பதாகத் தெரிவில்லை.

சிறுபிள்ளைகள் போராட்டத்தில் இவ்வாறு பயன்படுத்தப்படுகின்ற அதேநேரம், பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு சில அரசியல் கட்சிகளின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றனரென்ற விபரங்களும் வெளிவருகின்றன. பல்கலைக்கழக மாணவர்கள் அச்சுறுத்தப்பட்டு போராட்டங்களுக்காக அழைத்து வரப்படுவதாக வெளிவருகின்ற தகவல்களைப் புறக்கணிக்க முடியாதிருக்கின்றது.

போராட்டங்களில் கலந்து கொள்ளுமாறு மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இவ்வாறான செயற்பாடுகளைஅரசியல் கட்சிகள் கைவிட வேண்டும். அரசியல்வாதிகள் தங்களது நிகழ்ச்சித் திட்டங்களுக்காக மாணவர்களைப் பலிக்கடாக்களாக்க முற்படக் கூடாது.

 

இது இவ்விதமிருக்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு நல்கிவரும் பொதுஜன பெரமுன கட்சி தன்னை மறுசீரமைப்புக்கு உள்ளாக்கி வருகிறது. முன்னாள் பிரதமரும் அக்கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவை முன்னிலைப்படுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

முதலாவது கூட்டம் களுத்துறையில் நடைபெற்றதுடன், இரண்டாவது கூட்டம் நாவலப்பிட்டியில் நடைபெற்றது. நாவலப்பிட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி அமைப்பாளர் தலைமையிலான ஒரு குழுவினரே எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். வீதியை மறித்துப் போராடிய குழுவினர், பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

நாட்டில் ஜனநாயக ரீதியான அரசியல் கூட்டங்களுக்கு இவ்வாறு ஏற்படுத்தப்படும் தடைகள் காரணமாக நாட்டில் அமைதி சீர்குலைவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

நாடு எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு முகங்கொடுக்க அரசியல்வாதிகள் தமக்கிடையிலான கயிறிழுப்புக்களையும், அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் பலப்பரீட்சைகளுக்கும் இடமளிக்காது அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதே இன்றைய தேவையாக உள்ளது. இவ்வாறான குழப்பங்களைக் கட்டுப்படுத்துவதற்கு கட்சியின் தலைவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியதும் காலத்தின் தேவையாகும்.

ஆர்ப்பாட்டங்கள் என்பதன் பேரில் நாட்டில் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதற்கு எந்தவொரு தரப்பினரும் முற்படுவார்களேயானால், பொறுப்புள்ள அரசாங்கமென்ற வகையில் மக்களின் பாதுகாப்பு கருதி நாட்டில் அமைதியைக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென்பதை மறந்து விடலாகாது. நாட்டில் ஜனநாயகத்தன்மை சீரழிவதற்கு அரசாங்கம் இடமளிக்காதென்பதையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும்.

நாடு இப்பொழுதுதான் வீழ்ச்சியிலிருந்து படிப்படியாக மீண்டெழுந்து கொண்டு வருகையில், மீண்டும் அமைதியின்மையை கட்டவிழ்த்து விடுவதற்கு எவருமே இடமளிக்கலாகாது. அமைதியை விரும்புகின்ற மக்கள் இவ்வாறான உள்நோக்கம் கொண்ட முயற்சிகளுக்கு எதிராக குரல் கொடுப்பது அவசியம். பொறுமையே இன்றைய வேளையில் மக்களுக்கு அவசியமாகின்றது.

மறுபக்கத்தில், வரி அதிகரிப்புப் போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்தியும், அரசாங்கத்தின் செயற்பாடுகளை குழப்பும் வகையிலும் அரசியல் பின்புலத்தைக் கொண்ட தொழிற்சங்கங்கள் சிலவும் ஆர்ப்பாட்டங்களுக்குத் தயாராகி வருவதாக ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன.

நாடு பிழையான பாதையில் செல்லும்போது அதனைச் சீர்செய்வதற்காக குறிப்பாக ஊழல் மோசடிகள் இடம்பெறும்போது அவற்றைத் தடுப்பதற்கு வீதியில் இறங்கிப் போராடாத தொழிற்சங்கவாதிகள், தற்போது நாட்டில் அமைதி ஏற்படுவதைக் குழப்பும் வகையில் மக்களை உருவேற்றி விட்டு போராட்டங்களுக்கான முயற்சிகளில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

நாட்டைப் பாதிப்பிலிருந்து மீட்டு சரியான பாதைக்குக் கொண்டுவருவதற்கு அனைத்துத் தரப்பினரும் கைகோர்த்தால் மாத்திரமே எதிர்காலத்தில் மீட்சி கிடைக்கும். இல்லாவிட்டால் நிலைமை மிகவும் மோசமானதாகி விடும் என்பதை சம்பந்தப்பட்டோர் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம்.

சம்யுக்தன்

Comments