பதவியிலுள்ள அரசுக்கு இந்திரா காங்கிரஸின் தலமை சவாலா? | தினகரன் வாரமஞ்சரி

பதவியிலுள்ள அரசுக்கு இந்திரா காங்கிரஸின் தலமை சவாலா?

இந்திரா காங்கிரஸின் புதிய தலைவராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மல்லிகர்ஜூன் கார்கே தெரிவாகியுள்ளார். 24வருடங்களுக்குப் பின்னர், காந்தி குடும்பத்தவர் இல்லாதவருக்கு இப்பதவி கிடைத்துள்ளது.

ஐம்பது வருடங்களுக்குப் பின்னர் தென்னிந்திய மாநிலத்தவர் ஒருவர் கட்சியின் தலைமைப் பதவிக்கு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு கடந்த திங்கட்கிழமை (17) நடந்தது. ஒவ்வொரு மாநிலங்களினதும் தலைநகரில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு வாக்களிப்பு இடம்பெற்றது. இதில்,தென்னிந்திய மாநிலங்க ளைச் சேர்ந்த இருவர் போட்டியிட்டனர். கேரளா சஷிதரூக்கு 1072வாக்குகளும், கர்நாடகாவின் மல்லிகர்ஜூன் கார்கே 7897வாக்குகளையும் பெற்றனர். போட்டியிட்ட இருவரும் தலித் இனத்தவர்களாவர். இதனால்,சுமார் அரைநூற்றாண்டுக்குப் பின்னர் தலித் இனத்தவர் இந்திரா காங்கிரஸின் தலைவர் பதவிக்கு தெரிவாகினார்.

இந்தியாவின் சுதந்திரத்தில் பிரதான பங்காற்றிய 137வருட வயதுள்ள காங்கிரஸ், முன்னாள் பிரதமர் ராஜீவின் மறைவின் பின்னர் பெரும் பின்னடைவுக்குள் தத்தளித்தது. காந்தி பரம்பரையை பொருட்படுத்தாத அளவுக்கு எதிரணியான பி,ஜே,பியின் செல்வாக்கு உச்சத்துக்கு உயரும் நிலை ஏற்பட்டது.இது, ஏன்? இப்படி பல கோணங்களில் ஆராயப்பட்டதில் பல நிதர்சனங்கள் வெளிச்சத்தில் தெரியத் தொடங்கியுள்ளது. பிரதமர் மோடியின் வெளிநாட்டுக் கொள்கையே இதுவரைக்கும் இந்தியர்களை கவர்வதாக ஒரு கணிப்பீடும் உள்ளது. இது தவிர, வட இந்திய மாநிலங்களில், இந்துத்துவ சக்திகளின் ஆதரவு அதிகரித்திருப்பதாகவும் கருதப்படுகிறது. மேலும், பிஜேபி ஆட்சியில் இந்தியா அடைந்துள்ள அசுர வளர்ச்சி, உள்ளூர் வாக்காளர்களை உற்சாகப்படுத்தியுள்ளதும் அவதானிக்கப்பட வேண்டியதே! அணு உலையில் இயங்கும் நீர்மூழ்கியை கண்டுபிடித்துள்ள இந்தியா, அதிலிருந்து கண்டங்களை கடந்து சீறிப்பாயும் ஏவுகணைகளையும் ஏவி, பலப்பரீட்சை நடத்தியுள்ளது. சுமார் மூவாயிரம் கிலோமீற்றர் வீச்செல்லையில் விழுந்த இந்த ஏவுகணைகள், ஏவிய இலக்குகளில் குறிதவாறாது வெடித்துள்ளன. இதனால், இந்தியாவின் கடற்படைப்பலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அணுவாயுத பலமுள்ள ஜந்து வல்லரசுகளுக்கு அடுத்தபடியாக ஆறாவது வல்லரசாக இந்தியா வளர்ந்து நிற்கிறது.

இந்நிலையில், தென்னிந்தியரின் தலைமையில் இந்திரா காங்கிரஸின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது. புதிய தலைவரைத் தெரிவு செய்ய கட்சியின் மத்திய குழுவிலுள்ள 9915

பேர் வாக்களித்தனர். சுமார் முப்பது வருடங்களின் பின்னர் (1992) தென்னிந்தியர் ஒருவருக்கு கட்சியின் தலைமைப்பதவி கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் ஆந்திர மாநிலத்திலிருந்து நரசிமராவ் கட்சியின் தலைமைப் பதவிக்கு தெரிவாகியிருந்தார்.

இப்போது தெரிவாகியுள்ள தலித் இனத்தைச் சேர்ந்த 80வயதுடையவர், முன்னாள் அமைச்சரும்கூட. இன்னும் 18மாதங்களின் பின்னர் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில், கட்சியின் வெற்றிக்கு கடுமையாக உழைக்கும் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்காக பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த, ஐம்பது வயதுக்கு கீழானோருக்கு, கட்சியின் முக்கிய பதவிகளை வழங்கவுள்ளார். ஹிந்தி பேசும் மாநிலங்களில் பி,ஜே,பிக்குள்ள செல்வாக்கை தகர்க்கும் வியூகங்களுக்கு சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரும் ஆலோசனை வழங்கவுள்ளனர்.

ஏ.ஜி.எம். தௌபீக்

Comments