தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க சலுகை வட்டியில் கடன் 4,900 மில். ரூபாவை அரசு ஒதுக்கியது | தினகரன் வாரமஞ்சரி

தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க சலுகை வட்டியில் கடன் 4,900 மில். ரூபாவை அரசு ஒதுக்கியது

சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் குறைந்த வட்டியில் கடன்களை பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கம் 4,900மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அரச வங்கிகள் உள்ளிட்ட 8வங்கிகளுக்கு நிதியமைச்சினால் அந்த நிதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும்இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அதற்கிணங்க மேற்படி வங்கிகள் ஊடாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் ஆகக் குறைந்தது 10மில்லியன் ரூபாவை 11மற்றும் 12வீத சலுகை வட்டியில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி 4,900மில்லியன் ரூபா நிதி இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, கொமர்சல் வங்கி, ஹற்றன் நெஷனல் வங்கி, செலான் வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி, நேசன் டிரஸ்ட் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகிய வங்கிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக விவசாய சமூகத்தினர்,சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதித் துறைக்கு தேவையான உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள துறைகள், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் ஆகியோரை முன்னேற்றும் நோக்கில் இத்தகைய செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளது.

இத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பொருளாதார மற்றும் தேசிய கொள்கைகளுக்கான அமைச்சும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் இணைந்து இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Comments