உலகில் குறைந்த வரி வருமானம் கொண்ட நாடு இலங்கை மாத்திரமே! | தினகரன் வாரமஞ்சரி

உலகில் குறைந்த வரி வருமானம் கொண்ட நாடு இலங்கை மாத்திரமே!

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை பற்றி மக்களுக்கு தெளிவூட்ட வேண்டியதன் அவசியத்தை விளக்குகின்றார் மத்திய வங்கி ஆளுனர் நந்தலால் வீரசிங்க...

கேள்வி:- மத்திய வங்கி தொடர்பில் மக்களிடத்தில் நல்லபிப்பிராயம் இல்லை. நீங்கள் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் பேசினீர்கள். வெளிநாட்டு நாணயக் கையிருப்பு உள்ளது என அன்று கூறப்பட்ட பொய்யை நீங்கள் நாட்டுக்கு வெளிப்படுத்தினீர்கள்.

புதிய வரித் திருத்தம் தொடர்பிலான நேரடிக் கொள்கைகள் பற்றி எமக்கு போதுமான தெளிவு இல்லை. தற்போதைய வரித் திருத்தம் குறித்து மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்:- மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் நாட்டின் நிதி நிலை தொடர்பில் முதலில் தெளிவை வழங்க வேண்டும். முழு நாட்டினதும் நிதிக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை, வெளிநாட்டுச் செலாவணிக் கையிருப்பைப் பேணுதல், பணவீக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் எனக்கு பொறுப்புக்கள் உள்ளன.

இது தொடர்பில் செயற்படும் போது அரச நிதி தொடர்பில் பிரதான பொறுப்பு இருப்பது நிதி அமைச்சருக்கே. திறைசேரிக்கும், பாராளுமன்றத்திற்குமே அரச நிதிக் கொள்கை உள்ளது. எனினும் இவை இரண்டும் தொடர்புடையவை. அரச நிதிக் கொள்கை நிலையானதாகச் செயற்படவில்லை என்றால் அதன் மூலம் நாட்டின் நிதிக் கொள்கைக்கு தாக்கங்கள் ஏற்படும். அரச மற்றும் தனியார் துறைகளும் நாட்டின் நிதிக்குள் உள்ளடங்கும். இவை அனைத்தினதும் கட்டுப்பாடு மத்திய வங்கியிடம் உள்ளது. இது மிகவும் முக்கியமான பணியாகும். இதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், பொருளாதாரத்தை நிலையானதாக வைத்தக் கொள்வதற்கும் முடியும்.

கடந்த காலங்களில் அரச நிதிக் கொள்கையில் குறைபாடுகள் இருந்தன. அவை கடந்த இரண்டு வருடங்களில் நடந்தது என நான் கூறவில்லை. பல தசாப்தங்களாக அரசாங்கம் என்ற வகையில் அரச வருமானம் மற்றும் செலவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது எல்லாக் காலத்திலும் அரசாங்கத்தின் வருமானத்தை விடவும் செலவுகள் பெருமளவில் அதிகமாகும். அப்போது வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை இருப்பதாகத்தானே நாம் பார்ப்போம். நீண்ட காலங்களாக நிலவும் இந்த பற்றாக்குறை கடன் பெற்றே நிவர்த்தி செய்யப்படுகின்றது. கடன் பெற்றுக் கொள்வது பிரச்சினையல்ல. எனினும் கடன் பெற்றுக் கொள்வதற்கான ஆற்றல் இருக்க வேண்டும். அரசாங்கம் என்ற வகையில் நீண்ட காலமாக வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் கடன் வாங்க வேண்டிய நிலையே இருந்து வருகின்றது.

ஆனால் கடந்த 2019ம் ஆண்டின் பின்னர் நாட்டில் செயற்படுத்தப்பட்ட வரி வருமானக் கொள்கையின் காரணமாக பாரியளவில் வருமானம் குறைந்தது. இதனால் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை அதிகரித்தது. நூற்றுக்கு ஆறு, ஏழு வீதமாக இருந்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை 2020, 2021ம் ஆண்டுகளில் நூற்றுக்கு 11வீதம் வரைக்கும் அதிகரித்தது. அது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னர் வெளிநாடுகளிலிருந்து கடன் வாங்கி வரவுசெலவு பற்றாக்குறையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருந்தன. தற்போது கடினமான சூழ்நிலைக்கு வந்திருக்கின்றோம். வரி வருமானங்களை இல்லாமற் செய்ததனால் வெளிநாடுகளின் கடன் வழங்குவோர் கடன் வழங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இதன் காரணமாகத்தான் நாட்டிற்கு வெளிநாட்டு நிதிக் கடன் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது. 2020ம் ஆண்டிலிருந்தே கடன் பெறுவதற்கு முடியாத நிலை இருந்தது. முன்னர் இருந்த மத்திய வங்கி ஆளுநர்கள் கொள்கை ரீதியாக அரசாங்கத்தின் பாரிய வரவு செலவு பற்றாக்குறையினை நிறுத்துவதற்கு முயற்சித்தார்கள். அது பணம் அச்சிடுவதன் மூலம்தான்.

அவ்வாறு குறுகிய காலத்தில் செய்வது பெரும் பிரச்சினை அல்ல. கொவிட் காலத்தில் அதிக நாடுகள் இந்த வேலையைச் செய்தன. 2020, 2021, 2022ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக பணம் அச்சிடப்பட்டது. வெளிநாட்டுக் கடன் பெற முடியாத காரணத்தினால் அவ்வருடங்களில் முழுமையாகவே பணத்தை அச்சிட்டார்கள். இதனால் பணவீக்கம் பெருமளவில் உயர்ந்தது.

அரச நிதிக் கொள்கையானது தவறான கொள்கையாக இருந்ததால் நாட்டின் நிதிக் கொள்கை மற்றும் பணவீக்கம், வெளிநாட்டு நாணயக் கையிருப்புக்களில் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டன. இன்று இந்நாட வீழ்ச்சியடைந்த நிலைக்குள்ளாகியிருக்கின்றது. இதன் பெறுபேறாகவே பணவீக்கம் 70வீதத்திற்கு அதிகரித்துள்ளது. உணவுக்கான பணவீக்கம் 95வீதமாக அதிகரித்தது. 200ஆக இருந்த வெளிநாட்டு செலாவணி விகிதம் 365ஆக உயர்ந்தது. நாட்டிலிருந்த வெளிநாட்டு நாணயக் கையிருப்பு முற்றாகவே இல்லாமல் போனது. நாட்டில் கடனைத் திருப்பிச் செலுத்தக் கூடிய நிலை இருக்கவில்லை. இந்தளவுமோசமான நிலைக்குச் செல்லாமல் ஏதேனும் ஒரு முறையில் இதனை சரி செய்து கொள்கையினை வகுத்திருந்தால். நிலைமையை ஏதோ ஒரு வகையில் கட்டியெழுப்பியிருக்க முடிந்திருக்கும். எனினும் இதன் மூலம்தான் அரச நிதிக் கொள்கை நாட்டின் நிதிக் கொள்கையில் தாக்கத்தை செய்திருக்கின்றது.

இதனால்தான் நாடு பாதாளத்தில் வீழ்ந்தது. அவ்விடத்தில்தான் நாம் இப்போது இருக்கின்றோம். நாம் முன்னேறிச் செல்வதற்கு இவ்வாறான கஷ்டமான நிலைகளின் போது மக்களுக்கு உண்மைகளை தெளிவு படுத்த வேண்டும். கடந்த காலத்தில் சரியான கொள்கையினை நடைமுறைப்படுத்தாத காரணத்தினால் இவ்வாறு நடந்திருக்கின்றது. எனவே நாம் அதனை சரி செய்து கொள்ள வேண்டும்.

கேள்வி:- நீங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளின் போது முக்கிய பங்கினை வகிக்கின்றீர்கள். ஆரம்பத்திலிருந்தே நீங்கள் அந்த நிலைப்பாட்டில் இருந்தீர்கள். தற்போதைய அரசாங்கம் முன்னரை விடவும் அதிகளவில் ஐ.எம். எப் செயற்பாடுகளுக்கான கொள்கைகளைத் தயாரித்து அதற்கு இணங்கிச் செயற்படுகின்றது. ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கையில் இது தொடர்பில் சில சாதகமான உண்மைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த வரித் திருத்தங்களைத் தொடர்ந்து ஐ. எம். எப் செயற்பாடுகளுடன் எம்மால் வருங்காலத்தில் இப்போதிருக்கும் பிரச்சினைகள், குழப்பங்களைத் தீர்த்து முன்னேறிச் செல்வதற்கு ஏதேனும் வழிகள் திறக்கும் என நீங்கள் நினைக்கின்றீர்களா?

பதில்:- நிச்சயமாக. உண்மையில் இதனை நான் இப்போதைக்கு இருக்கும் ஒரே வழியாகவே பார்க்கின்றேன். தற்போதைய நிலைக்கு வந்திருக்காவிட்டால் நாம் வேறு நடைமுறைகளை முயற்சி செய்து பார்த்திருக்கலாம். எனினும் எமது கையிருப்பு நன்றாகவே குறைந்ததன் பின்னர் எமக்கு எவரும் கடன் வழங்கவில்லை.

உறுப்பு நாடு என்ற வகையில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து மாத்திரமே இதுபோன்ற நேரத்தில் கடன் கேட்கும் உரிமை எமக்க உள்ளது. அதேபோன்று சர்வதேச நாணய நிதியம் இருப்பதும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாடுகளுக்கு உதவி செய்வதற்காகும். எனினும் இங்கிருக்கும் மோசமான பிரச்சினை என்னவென்றால் சர்வதேச நாணய நிதியம் ஒரு நாட்டுக்கு கடன் வழங்குவதற்கு கடன்களின் நிலையான தன்மை நிலவ வேண்டும். இலங்கை அரசாங்கம் பதினாறு தடவைகள் கடனுக்காக சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்றுள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் முன்வைக்கும் வேலைத்திட்டங்களுடன் அவர்கள் இணங்குவார்களாயின் நிதியினை வழங்குவார்கள். இந்த தடவை இருக்கும் சிக்கலான நிலை என்னவென்றால் பணியாளர் குழு ஒப்பந்தத்தில் நாம் கடந்த செப்டெம்பர் மாதத்தில் கையெழுத்திட்டோம். எனினும் கடன் முகாமைத்துவம் செய்யப்படும் வரைக்கும் எம்மால் அதனை நடைமுறைப்படுத்த முடியாது. எனவே நாம் கடன் மறுசீரமைப்பைச் செய்ய வேண்டும். கடந்த வாரம் கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெற்றுக் கொண்டோம்.

நாம் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நாட்டின் சில சில இடங்களில் வரிசைகளை நீங்கள் கண்டிருப்பீர்கள். தற்போது அந்த நிலை படிப்படியாக குறைந்து போயிருக்கின்றது. முன்னேற்றங்கள் இருந்தாலும் இன்னமும் நிலையான முன்னேற்றம் எனக் கூற முடியாது. அவ்வாறு நடப்பதற்கு பொருளாதாரத்தை இயக்கும் வரிக் கொள்கையை உருவாக்க வேண்டும். கடன் மறுசீரமைப்பை செய்ய வேண்டும். அப்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதி கிடைக்கும். அப்போது எம்மால் முன்னேறிப் பயணிக்க முடியும். அதனால்தான் இந்த வரிக் கொள்கையினை முன்னே கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ஜனாதிபதி குறிப்பிட்டதைப் போன்று ஏனைய மறுசீரமைப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாமல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு வாய்ப்புக்கள் இல்லை.

கேள்வி:- இங்கு இருக்கும் அனேக அதிகாரிகள் கடந்த காலத்திலும் இருந்தார்கள். இந்த அதிகாரிகளோடு இந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னே கொண்டு செல்வதற்கான வாய்ப்பு உள்ளதா?

பதில்:-மத்திய வங்கி ஆளுநருக்கு கீழே பிரதி ஆளுநர்கள் மற்றும் தொழில் அனுபவம் உள்ள அதிகாரிகளும் இருக்கின்றார்கள். எவ்வாறான நிறுவனமாக இருந்தாலும் தொழில் ரீதியில் வழங்கப்படும் ஆலோசனைகளுக்கு அமைய பணியாற்றுவதென்றால் நாட்டின் நலனுக்காக அதனைக் கையாள முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. 30வருடங்களாக நான் இந்த மத்திய வங்கியில் சேவையாற்றி இருக்கின்றேன். எனவே எனக்கு இங்கு பெரும் புரிந்துணர்வு உள்ளது. எனினும் மத்திய வங்கி தொடர்பில் கடந்த காலங்களில் மக்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தது. மத்திய வங்கி ஆளுநரும், நிதிச் சபையும் பொருளாதாரக் கொள்கையை முன்வைப்பது அது தொடர்பிலான அறிவுடனாகும். அது சுயாதீனமாக செய்யப்படும். மத்திய வங்கி ஆளுநர்களை நியமிக்கும் போது அரசியல் அழுத்தங்களின்றி சிறந்த அறிவுள்ள ஒருவரை நியமிப்பதன் ஊடாக இந்த நிலையினைத் தவிர்த்துக் கொள்ள முடியும். புரிந்துணர்வு மற்றும் தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய ஒருவர்தான் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அரசியல் ரீதியில் ஒருவர் நியமிக்கப்படுவதின் மூலம் பொருளாதார நெருக்கடி ஏற்படும். உலகில் முன்னேற்றமடைந்த நாடுகளை எடுத்துக் கொண்டால்அங்கெல்லாம் மத்திய வங்கி சுயாதீனமாக இயங்குகின்றது. நாட்டின் பொருளாதாரத்திற்கு நிலையான தன்மையினை அவ்வாறான மத்திய வங்கிகளாலேயே ஏற்படுத்த முடியும். சர்வதேச நாணய நிதியமும் கூட இம்முறை இது தொடர்பில் விசேட கவனத்தைச் செலுத்தியுள்ளது.

கேள்வி:- தற்போதைய நிதி அமைச்சர் ஜனாதிபதியாகும். நீங்கள் கூறுவதைப் போன்று சுயாதீனத் தன்மைக்கு தற்போதைய அரசாங்கத்தில் மற்றும் ஜனாதிபதியின் மூலம் அழுத்தங்கள் இருக்கின்றனவா?

பதில்:-தற்போதுள்ள நிதிச் சட்டத்தின் கீழ் கூட, மத்திய வங்கி சுதந்திரமாக செயல்பட முடியும். இங்கு சுயாதீனமாகச் செயற்படுவது என்பது ஆளுநர் விரும்பியவாறு செயற்படுவதல்ல. மக்களுக்கு பொறுப்புக்கூறக் கூடிய வகையிலாகும். பாராளுமன்றத்திற்கும் மக்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய கடமை மத்திய வங்கிக்கு இருக்க வேண்டும். நாட்டின் நிதிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதியும் நிதி அமைச்சின் செயலாளரும் நல்ல புரிதலுடன் செயற்பட்டு வருகின்றனர். மத்திய வங்கிக்கும் நிதி அமைச்சுக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு இல்லாமல் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. மத்திய வங்கி நிதியமைச்சுக்கும் பாராளுமன்றத்திற்கும் பொறுப்புக்கூறுவதை நான் மதிக்கிறேன். அதேபோன்று, நாட்டின் நிதிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய வங்கி சுயாதீனமாகச் செயற்பட அனுமதித்தமைக்காக நிதி அமைச்சரையும் நான் பாராட்டுகிறேன். இவை இரண்டுக்கும் இடையிலான உறவை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். மத்திய வங்கியின் ஆளுநரிடம் இருப்பது கையிருப்பு கட்டுப்பாடு, பணவீக்கம், வட்டி விகிதம் என்பனவற்றுடன் செயற்படுவதாகும். நிதி அமைச்சின் செயலாளருக்கு இருப்பது அரசின் வருவாய், செலவுகள், மற்றும் அரச நிதிக் கொள்கையை செயல்படுத்துதல் போன்ற விடயங்களாகும். கடந்த காலத்தில் குழப்பங்கள் ஏற்பட்டது புரிந்துணர்வு இல்லாமையினாலாகும். ஒருவர் ஒரு பக்கத்திற்கும், மற்றவர் மற்றொரு பக்கத்திற்கும் இழுத்தால் சரிந்து விழுவது நாட்டின் பொருளாதாரமேயாகும். கடந்த காலத்தில் இடம்பெற்றது இவ்வாறான ஒன்றேயாகும்.

கேள்வி:- நடுத்தர வர்க்கத்தில், ஒரு இலட்சத்திக்கு மேல் சம்பளம் ஒருவருக்கு தற்போது வரிக் கொள்கையின் மூலம் அண்ணளவாக இருபதாயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டி வரும். அவ்வாறு வரி செலுத்தும் போதும் அவர் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கும் வரியினைச் செலுத்த வேண்டிய நிலையும் உள்ளது. அவ்வாறு செய்வதால் நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க முடியும் என்று மக்களுக்கு உறுதியளிக்க முடியுமா?

பதில்:-ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவர்கள் சுமார் இருபதாயிரம் ரூபாவினை வரியாகச் செலுத்த வேண்டி வரும். இவை நேரடி வரிகள். ஆனால் எமது நாட்டில் இன்னமும் அதிகமாக இருப்பது மறைமுக வரிகளேயாகும். உயர் வருமானம் பெறுபவர் தொடக்கம் குறைந்த வருமானம் பெறுபவர் வரைக்கும் மறைமுக வரிச் சுமையினைச் சுமக்கின்றார்கள். நமது வரி கட்டமைப்பில் உள்ள தவறுகளில் ஒன்று 80சதவீதம் மறைமுக வரிகளாக இருப்பதாகும். நேரடி வரிகள் 20வீதமே உள்ளது. எனவே நேரடி வரிகளை அதிகரிக்க வேண்டும். உலக நாடுகளை நோக்கும்போது ஈரான் மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகளைத் தவிர குறைந்த வரி வருமானம் இருப்பது இலங்கையிலாகும். மேற்குறிப்பிட்ட இரு நாடுகளுக்கும் வரி வருமானம் தேவைப்படுவதில்லை. காரணம் அங்கு எண்ணெய் வள வருமானம் இருக்கின்றது ஆனால் எம்மிடம் அவை எதுவுமே இல்லை. எனவே, குறுகிய காலத்தில் வருமானம் ஈட்டிக் கொள்வதற்காக நாம் இந்த வரிகளை விரும்பியோ விரும்பாமலோ வசூலிக்க வேண்டும். தற்போதுள்ள வரி கட்டமைப்பில் அதிகரிக்கக்கூடியதாக இருப்பது மறைமுக வரிகளைத்தான். எனினும் இங்கு குறைந்த வருமானம் பெறுபவர்களால் அதனை விளங்கக் கூடியதாக இருக்கும். எனவேதான், மறைமுக வரிகளை 60சதவீதமாகக் குறைத்து நேரடி வரிகளை 40சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என மத்திய வங்கி பரிந்துரைக்கிறது.

அந்த வகையில் பயணிக்கும் போது அதன் முதற்கட்டம்தான் உழைக்கும் போது வருமானத்தில் வரி அறவிடுவதாகும். கடந்த காலங்களில் உழைக்கும் மக்கள் எட்டு மில்லியனுக்கும் அதிகமாக இருந்தனர். எனினும் வரி செலுத்துவது இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் மாத்திரமேயாகும். வரி செலுத்தும் எண்ணிக்கையைப் பார்க்கும் போது நியாயமற்ற கட்டமைப்புப்போலக் காணப்படலாம். வரி செலுத்தும் இரண்டரை இலட்சம் பேருடைய கோவைகளே இருக்கின்றதென்றால் வருமானம் ஈட்டுபவர்கள் தமது பொறுப்பைச் செய்யவில்லை என்றுதானே அர்த்தம். முன்னேறிச் செல்லும் போது இப்போதிருக்கும் வரிக் கொள்கை 9வீதத்திலிருந்து 14வீதம் வரை அதிகரித்துச்செல்ல வேண்டும். நாட்டின் பொருளாதாரம் அடுத்த வருடம் நிலையானதாக மாறினால் வரி அதிகரிக்கும். பொருளாதாரம் நிலையாகும் போது நிறுவனங்கள் இலாபம் ஈட்டலாம். அப்போது வருமான வரியின் அளவினை உயர்த்த முடியும். அப்போது ஒரு இலட்சம் ரூபா என்பதனை ஒன்றரை இலட்சமாக உயர்த்த முடியும்.

கேள்வி:- நீங்கள் உருவாக்கும் பொருளாதாரக் கொள்கைகளால் திட்டமிட்டுகுற்றம்செய்யும் பணக்கார முதலைகளைப் பிடிக்க முடியுமா? ஏனெனில் அவர்கள் வரி செலுத்துவதிலிந்து மிகத் தந்திரமாகத் தப்பித்துக் கொள்வார்கள். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா?

பதில்:-நாட்டில் வரி அறவிடப்படும் முறையும், வரி அறவிடும் நிறுவனங்களும் நிலையானதாக இருக்க வேண்டும். இலங்கையில் மூன்று நிறுவனங்கள் வரி அறவீடு செய்கின்றன. வருமான வரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் என்பனவே அந்நிறுவனங்களாகும். இந்நிறுவனங்கள் சுயாதீனமாக இயங்க வேண்டும். வரி அறவிடுவதற்கு அந்த நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டும். நேர்மையான முறையில் வரி செலுத்துவோருக்குச் சுமையை ஏற்படுத்தாமல், உழைக்கும் அனைவருக்கும் வரிச்சுமை நியாயமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். வரி வலையிலிருந்து யாரையும் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது.

தனுஷ்க ராமநாயக்க,
பணிப்பாளர் நாயகம்,
ஜனாதிபதி ஊடகப்பிரிவு
தமிழில்: முஸப்பிர்

 

Comments