நாடு மீதான அக்கறை கிடையாது தங்களது நலன்களிலேயே அக்கறை! | தினகரன் வாரமஞ்சரி

நாடு மீதான அக்கறை கிடையாது தங்களது நலன்களிலேயே அக்கறை!

நாட்டைப் பற்றிச் சிந்திக்காமல், தம்மைப் பற்றிய சிந்தனை மேலோங்கி நிற்கிறது என்பதையே தேசியப் பேரவையைப் புறக்கணிக்கும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் புலப்படுத்துகின்றன என்று நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார். தற்போதைய அரசியல் நிலைமை குறித்து எமக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கே: முன்கூட்டியே தேர்தலை அறிவிப்பதே அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு என்று சிலர் கூறுகின்றனர். எவ்வாறாயினும், நாமல் ராஜபக்ஷ போன்ற சில உறுப்பினர்கள் "இந்த நேரத்தில் தேர்தல் பற்றிப் பேசக்கூடாது" என்றும் "நாட்டை ஸ்திரப்படுத்த அனைவரும் ஜனாதிபதிக்கு தங்கள் ஆதரவை வழங்க வேண்டும்" என்றும் கூறியுள்ளனர். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. நீங்கள் தேர்தலுக்குச் சென்றால் நாங்கள் ஜனநாயகத்தைப் பாதுகாக்கிறோம் என்று மகிழ்ச்சியுடன் வாதிடலாம். மற்றைய வாதம் என்னவென்றால், நீங்கள் தேர்தலுக்குச் செல்லும்போது எல்லா விஷயங்களும் நிச்சயமற்றதாகி விடும். "உங்கள் தேர்தலை முடித்துவிட்டு மீண்டும் வாருங்கள்" என சர்வதேச நாணய நிதியம் கூறும். அரசியல் நிச்சயமற்ற தன்மையால் இலங்கைக்கு நன்கொடை கொடுப்பதில் கூட ஈடுபட முடியாது என்று பல்வேறு நாடுகளும் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, இந்தத் தருணத்தில் தேர்தலை நடத்துவதற்கு திறைசேரியினால் முடியுமா என்பது எனக்குத் தெரியாது.

கே: உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் அரசாங்கம் மீண்டும் தேர்தல் முறையை மாற்றியமைக்க முயற்சிப்பதாக முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் சில பிரிவுகள் குற்றம் சாட்டுகின்றன. இது பற்றிய உங்கள் பார்வை என்ன?

பதில்: எனது அறிவுக்கு எட்டியவரை யாரும் தேர்தலை ஒத்திவைக்க விரும்பவில்லை. அதைத் தள்ளிப்போட என்ன நோக்கமிருக்கிறது என்று தெரியவில்லை. தற்போது ஜனாதிபதி கூறுவது என்னவென்றால், உள்ளூராட்சி மன்றங்களின் வருமானம் அந்த உள்ளூராட்சி மன்றங்களை பராமரிக்க போதுமானதாக இல்லாததால் இந்த உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தும் பயனற்றதாகி விட்டன என்பதாகும்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக 8,400ஆக உயர்த்தியுள்ளோம். அந்த உறுப்பினர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்கள். எனவே, நாங்கள் அதை நெறிப்படுத்த வேண்டும். அதனால்தான் தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும் என்று கூறுகிறோம். அதற்கு அரசியல் கட்சிகளில் உள்ளவர்களில் பெரும்பாலோர் சம்மதித்தால், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை காலஅவகாசம் இருப்பதால், இந்த மாற்றங்களைச் செய்வதற்கு அதிக காலம் எடுக்காது.

கே: தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண முன்மொழியப்பட்ட தேசிய சபையை பல அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் சபையின் எதிர்கால வாய்ப்புகள் என்னவாக இருக்கும்?

பதில்: நமது அரசியல்வாதிகளுக்கு நாட்டைப் பற்றி அவ்வளவு அக்கறை இல்லை. அவர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. உண்மையில், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் தேசிய பேரவைக்கான முன்மொழிவை நான் முதலில் கொண்டு வந்தேன்.

தேசிய பேரவை, இடைக்கால அரசு, சர்வகட்சி ஆட்சி வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தவன் நான். அப்போது அனைத்து அரசியல் கட்சிகளும் அதை நிராகரித்தன. அதன்பின்னரே பிரச்சினைகள் மற்றும் எதிர்ப்புக்கள் அனைத்தும் தொடங்கியிருந்தன. பிரச்சினைகள் தீவிரமடைந்த பின்னரே எல்லோரும் தேசிய பேரவைக்கான கோரிக்கையை முன்வைத்தனர். இருப்பினும், அவர்களால் இன்னும் ஒருமித்த கருத்துக்கு வர முடியவில்லை. அதன் பிறகு நாங்கள் ஆட்சி அமைக்க வேண்டியதாயிற்று. மீண்டும் பெரும்பாலான கட்சிகள் தேசிய பேரவையில் பங்கேற்க விரும்பவில்லை என்று கூறுகின்றன. இது அவர்களின் நிகழ்ச்சி நிரல் ஆகும்.

உண்மையில் நாட்டின் மற்றும் மக்களின் கவலைகள் அல்ல என்பதையே இது காட்டுகிறது. அவர்களின் கவலை அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல் பற்றியது மட்டுமேயாகும்.

கே: உத்தேச புனர்வாழ்வு சட்டமூலம் குறித்து பல்வேறு பிரிவுகளால் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. மேலும் இந்தச் சட்டம் போராட்டக்காரர்கள் மற்றும் அரசியல் ரீதியாக எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்களை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பும் திட்டம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. இது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: சில குறிப்பிட்ட பிரிவினர் எப்படி நினைக்கிறார்கள் என்பது வெறும் கட்டுக்கதையே. இந்தச் சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் 2010ஆம் ஆண்டே ஆரம்பமாகியிருந்தன. குறிப்பாக எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பது இதன் நோக்கமாக இருந்தது. தற்போது, புனர்வாழ்வுப் பணிகளை செய்து வருகிறோம். கந்தகாடு பகுதியிலும் ஏராளமானோர் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற இன்னும் பல இடங்கள் உள்ளன, ஆனால் சிலர் கைதிகளாக செல்கின்றனர். எனவே, இதுபோன்ற சட்டம் கொண்டு வருவதற்கு சில யோசனைகளும் எதிர்ப்புகளும் இருந்தன.

இவ்வாறான செயற்பாடுகளை முறைப்படுத்துவது மற்றும் மறுவாழ்வுக்கான சட்டபூர்வ பொறிமுறையை உருவாக்குவதே இச்சட்டமூலத்தின் பிரதான நோக்கமாகும். இரண்டாவது விடயம் என்னவெனில், போதைக்கு அடிமையானவர் போன்ற ஒருவரை மறுவாழ்வுக்காக அனுப்ப வேண்டும் என்றால், நீதிமன்ற உத்தரவைப் பெற வேண்டும். இப்போது போதைக்கு அடிமையானவர்களின் சில பெற்றோரும் உறவினர்களும் நீதிமன்றத்திற்குச் செல்லாமல் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்கின்றனர். ஏனெனில் இது அவர்களின் குடும்பத்திற்கு களங்கத்தை ஏற்படுத்துவதைப் போன்றதாகும். இப்போது நீதிமன்ற உத்தரவு இல்லாதவரை நாங்கள் யாரையும் புனர்வாழ்விற்காக அழைத்துச் செல்ல எந்த ஏற்பாடும் இல்லை. இப்போது நாம் இன்னும் தன்னார்வ புனர்வாழ்வை எளிதாக்க வேண்டும்.

நான் அமைச்சராவதற்கு முன், இச்சட்டமூலம் தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்கள் சட்டமூலத்தை உருவாக்கும் போது காலிமுகத்திடலைப் பற்றி அவர்கள் சிந்திக்கவே இல்லை என்று நினைக்கிறேன். இது மக்களை வழிதவறிச் சென்றவர்களை நல்ல குடிமக்களாக மாற்றுவதற்கு மட்டுமே. இப்போது அது உச்சநீதிமன்றத்தில் உள்ளது. நாங்கள் எதையும் வலுக்கட்டாயமாக செய்ய விரும்பவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். கட்டமைப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும்.

கே: மேற்குலகின் அனுசரணையில் இலங்கையின் மனித உரிமைகள் பதிவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, அதற்கு ஆதரவாக 20நாடுகளும், எதிராக 7நாடுகளும் வாக்களித்திருந்ததுடன், 20நாடுகள் நடுநிலை வகித்திருந்தன. இது இலங்கைக்கு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்?

பதில்: நாம் சார்ந்திருக்கும் நாடாக இருப்பதால் அது எங்களை மிகவும் மோசமாக பாதிக்கும். நமது ஜி.எஸ்.பி பிளஸ் இல்லாவிட்டால், நமது பொருளாதாரத்தை நிலைநிறுத்த மீன் ஏற்றுமதி மற்றும் அது போன்ற விஷயங்களைத் தொடர்வது கடினம். எனவே, மிகக் கடுமையான கஷ்டங்களும், பின்விளைவுகளும் ஏற்படலாம். ஆனால் தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கியவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். உள்ளக உரையாடல் மூலம் பிரச்சினையைத் தீர்க்க நாங்கள் முயற்சிக்கிறோம், மேலும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுப்பதற்கான எங்கள் உண்மையான முயற்சிகளையும் காட்டுகிறோம். இது தொடர்பாக நான் ஏற்கனவே பல தூதுவர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகளிடம் பேசியுள்ளேன்.

அர்ஜூன்

Comments