இராகலை ரொக்லெண்ட் (மாவுசா) தோட்டம்; தன்னெழுச்சி முடக்கப்பட்டு அபிவிருத்தியில் அநாதைகளாக்கப்பட்ட தொழிலாளர்கள் | தினகரன் வாரமஞ்சரி

இராகலை ரொக்லெண்ட் (மாவுசா) தோட்டம்; தன்னெழுச்சி முடக்கப்பட்டு அபிவிருத்தியில் அநாதைகளாக்கப்பட்ட தொழிலாளர்கள்

இந்திய வம்சாவளி மக்கள் என்ற நாமத்தில் இந்த நாட்டில் மூன்றாம் பரம்பரையை தாண்டி வாழ்ந்து வரும் பெருந்தோட்ட சமூக மக்களில் தோட்ட தொழிலில் ஈடுப்பட்டு வருபவர்களின் வாழ்க்கை நிலையில் மாத்திரம் மாற்றங்கள் ஏற்படவில்லை.

இதற்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ தோட்டங்கள் காணப்படுகிறது. அதில் ஒன்று தான் நுவரெலியா மாவட்டம் வலப்பனை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட உடப்புஸ்ஸலாவை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் டெல்மார் தோட்ட பிரிவான ரொக்லண்ட் (மாவுசா) தோட்டமாகும்.

இத் தோட்டத்தில் வசிக்கும் தொழிலாளர் குடும்பங்கள் முகம் கொடுத்துவரும் வாழ்வாதாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி குறைபாடுகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு தொழிலாளர்கள் அங்கலாய்க்கின்றனர்.

ரொக்லண்ட் தோட்டம் ஆரம்பத்தில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி காலத்திருந்து பின் அரசு, இன்று கம்பனி நிர்வாகத்தில் இன்று இருந்து வருகிறது.

கடந்த காலத்தில் உடப்புஸ்ஸலாவை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த ரொக்லண்ட் மாவுசா தோட்டம் தற்போது மத்துரட்ட பெருந்தோட்ட கம்பனியின் முகாமைத்துவத்தின் கீழ் இருந்து வருகிறது.

இருந்த போதிலும் இத்தோட்டத்தில் தற்போது வசித்து வரும் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் மற்றும் அரசியல் வாதிகள் எதையும் செய்து கொடுக்கவில்லை அதனால் பல குறைபாடுகளுடன் சொல்லொணா துயரங்களுடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக குடிநீர்,வீட்டு வசதிகள்,மலசலக்கூடம் இன்றி பல ஆண்டுகளாக வசிக்கின்றனர்.

மேலும் இந்த தோட்டத்தில் முதலாம் இலக்க தொடர் வீட்டு தொகுதி கடந்த 2009ஆம் ஆண்டு திடீர் தீ விபத்துக்குள்ளாகியதுடன்,2015ஆம் ஆண்டு இலக்கம் மூன்று லயம் குடியிருப்பு மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

இந்த தோட்டத்தில் பணியாற்றிய 300க்கு அதிகமான தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின்னர் தோட்டத்தை தொடர்ந்து வழிநடத்த முடியாது தோட்ட நிர்வாகம் எஞ்சியுள்ள 19தொழிலாளர் குடும்பங்களுக்கு தேயிலை காணிகளை தற்காலிகமாக பிரித்து கொடுத்து அதில் விளைச்சல் தரும் தேயிலை கொழுந்தை பறித்து தோட்ட நிர்வாகத்திற்கு வழங்கி சம்பளம் பெற்று வரும் அவல நிலை தோன்றியுள்ளது.

இது இவ்வாறிருக்க இத்தோட்டம் சூரியக்கா பத்தனை கிராமத்துடன் இணைந்தே காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த காலங்களில் வலப்பனை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீள் குடியேற்றம் என்ற பெயரில் ரொக்லண்ட் மாவுசா தோட்ட தேயிலை காணிகளை பிரித்து வழங்கியுள்ளனர். இவ்வாறு வழங்கப்பட்ட காணிகளில் இன்று வீடுகட்டி வசிப்பவர்கள் நல்ல நிலையில் வாழ்கின்றனர்.

2015ஆம் ஆண்டு மண்சரிவு சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அத் தொடர் வீட்டுகளில் வசித்த 13குடும்பங்களுக்கு முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் டெல்மார் தோட்டத்தில் 13வீடுகளை அமைத்து கொடுத்துள்ளார்.

இருப்பினும் அவ்வீடுகளில் வசிப்பதற்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாது அரைகுறையாக காணப்படுவதாலும்,அங்கு குடி நீர் கூட இல்லாத நிலையில் மண்சரிவு சிவப்பு அறிக்கை விடப்பட்ட அதே தொடர் வீட்டுகளிலேயே தொடர்ந்தும் வசிக்கின்றனர்.

இந்த நிலையில் அபிவிருத்தியில் அநாதையாகவும், வாழ்வாதாரங்களை இழந்து தாம் வாழ்வதாக இத் தோட்ட தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

பெருமாள் சரஸ்வதி (60)

நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் தான் 2015ஆம் ஆண்டு மண்சரிவு ஏற்பட்டது.

இந்த மண்சரிவு முதலில் ஏற்பட்ட இடத்திற்கு முதல் வீட்டுக்கு அருகில் தான் நாம் வசிக்கின்றோம். மழைக்காலங்களில் உயிர் அச்சத்துடன் இருப்பதாக கூறுகிறார்.

பி.செல்லதுறை

வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் சிறப்பான பராமரிப்புடன் காணப்பட்ட இந்த தோட்டம் தேயிலையின் செழிப்பு இப்போது இழந்து காட்டாக மாறிவிட்டது.

செழிப்பான தேயிலை மலை, அழகான இயற்கை எழில் காணப்பட்ட தோட்டமாகும்.இன்று மனிதர்கள் வசிக்க முடியாத ஒரு தோட்டமாக மாறியுள்ளது.

அபிவிருத்திகள் ஏதும் இல்லை.பழங்கால மண்ணாலான லயத்தில் தான் இன்றும் வாழ்கிறோம்.

பழனியான்டி மயில்வாகனம்

(ஓய்வு பெற்ற தொழிலாளி)ரொக்லண்ட் தோட்டம் என்றால் அனைவரும் விரும்பும் ஒரு தோட்டமாக இருந்தது.

ஆனால் இன்று இந்த தோட்டத்தின் அபிவிருத்தியற்ற அவல நிலை காரணமாக இத்தோட்டத்தை அனைவரும் வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மக்கள் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர்.

2010ஆம் ஆண்டு எட்டாம் மாதம் 14ஆம் திகதி நான் வசித்து வரும் லயன் திடீரென தீ பற்றி எரிந்து விட்டது. இந்த லயன்களை புனரமைத்து தருமாறு தோட்ட நிர்வாகத்திடம் வழியுறுத்தினோம்,ஆனால் தோட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.

எஸ்.சுஜிகலா(வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்)

நான் டெல்மார் வட்டாரத்தில் மாவுசா தோட்ட மக்களின் வாக்கு ஆதரவுடன் வலப்பனை பிரதேச சபைக்கு தொழிலாளர் தேசிய சங்க கட்சியின் உறுப்பினராகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினராகவும் தெரிவான பெண் உறுப்பினர்.நான் இத்தோட்டத்தில் வசிக்கும் மக்களுடன் வாழ்ந்து வருகிறேன்.

இந்த தோட்டத்தில் சொல்லக்கூடிய அபிவிருத்தி என்றால் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் செய்யப்பட்ட அபிவிருத்தியை தவிர வேறு யாரும் செய்யவில்லை.

அத்துடன் இன்று இந்த தோட்டத்தில் எந்த அபிவிருத்தியும் இல்லை, திட்டமிட்டு தேயிலை காணிகள் பிரிக்கப்பட்டுள்ளன, வெளியாருக்கு தேயிலை காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் இதே தோட்டத்தில் காலம் காலமாக வசித்தவர்கள் வாழ்வாதாரம் இழந்து, அபிவிருத்திகள் இன்றி நாடோடிகளாக வாழ்வதை பார்த்து வேதனைப்படுகிறேன்.

ரமேஷ் ஆறுமுகம்

Comments