'அழுக்குக் குண்டு'; இன்னொரு வைரஸ் தாக்குதலுக்கு தயாராகிறதா உலகு? | தினகரன் வாரமஞ்சரி

'அழுக்குக் குண்டு'; இன்னொரு வைரஸ் தாக்குதலுக்கு தயாராகிறதா உலகு?

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் மேற்கு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களிடம் உக்ரைன் அழுக்குக் குண்டுகளைப் வீசத் தயாராவதாக தெரிவித்துள்ளார். பிரிட்டன், பிரான்ஸ், துருக்கி மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்களிடம் அத்தகைய விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதனை அடியோடு மறுக்கும் மேற்கு நாடுகள் ரஷ்யா அத்தகைய தாக்குதலை நடாத்துவதற்காக இவ்வாறான பிரச்சாரத்தை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளன. அத்தகைய அழுக்குக் குண்டுகளின் தாயாரிப்பை அதிகம் கொண்டிருக்கக் கூடிய திறன் அனைத்து அணுவாயுதத்தைக் கொண்ட நாடுகளிடம் உண்டு என்றே தெரியவருகிறது. இது பெருமளவுக்கு யுரோனியம் போன்ற ரேடியோ கதிர்வீச்சுப் பொருட்களைக் கொண்டதாக அமைந்திருப்பதுடன் வெடிப் பொருட்களுடன் சேர்ந்து வெடிக்கும் ேபாது காற்றில் கலந்து பெரும்பாதிப்புகளை மனிதர்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் ஏற்படுத்தக் கூடியது. அணுக்குண்டு போன்று அதிக செலவின்றி தயாரிக்கக் கூடியது மட்டுமல்ல விரைவாக தயாரிக்கவும் இலகுவாக கைமாற்றவும் கூடியது. அதேநேரம் அணுக்குண்டைப் போல் உயிரினங்களை பாதிப்பதோடு பீதியை ஏற்படுத்தக் கூடியது. அழிவுகள் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கக் கூடியது. சிறிய அளவிலான குண்டும் பாரிய பிரதேசத்தை அழிவுக்குள்ளாக்கும் திறன் கொண்டது. இவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அழுக்குக் குண்டுகள் தொடர்பில் ஏன் ரஷ்யா அதிக பிரசாரத்தை மேற்கொள்கிறது என்பதே பிரதான கேள்வியாகும். அதற்கான விடையை தேடுவது அவசியமானது.

முதலாவது, நடைபெறும் போரில் உக்ரைன் வெல்ல வேண்டுமாயின் மட்டுமல்ல ரஷ்யா வெல்ல வேண்டுமாயினும் அணுவாயுதம் தேவையான ஒன்றாக மாறியுள்ளது. ஆனால் ரஷ்யாவிடம் அணுவாயும் உண்டு என்பதனால் ரஷ்யா பக்கமே அதிக வெற்றி வாய்ப்புள்ளதாக கணிப்பிடப்படுகிறது. அணுவாயுதத்தை பாவிப்பதென்பது முழுமையான உலகப் போரை ஏற்படுத்திவிடும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அதனால் அதற்கு சமமான தாக்குதல் ஒன்றுக்கான நகர்வை மேற்கொள்வது மாற்றத்தை ஏற்படுத்தும் என இரு தரப்பும் கருதுகின்றன. அதில் அதிக வாய்ப்பு ரஷ்யா பக்கமே உண்டு என்பதை உணரமுடிகிறது.

இரண்டாவது, ரஷ்யா நேட்டோ நாடுகளின் ஆயுத தளபாட விநியோகத்தை தடுக்க முடியாது போர்க்களத்தில் அதீதமான நெருக்கடியை எதிர் கொண்டுவருகிறது. அத்தகைய சூழலிலேயே அழுக்குக் குண்டு பற்றிய தகவல் பரஸ்பரம் ஆபத்தானது மட்டுமன்றி மக்கள் மத்தியில் அதிக அச்சத்தை ஏற்படுத்த முடியும் என்ற எண்ணத்தை கொண்டதாகவும் தெரிகிறது. அது தனித்து உக்ரைனை மட்டுமல்ல ஐரோப்பாவையும் பாதிப்புக்குள்ளாக்கும் என்ற அடிப்படையில் செயல்படுவதைக் காணமுடிகிறது. அதேநேரம் ரஷ்ய ஜனாதிபதி 26.10.2022 அன்று அணுவாயுத தாக்குதலை தடுக்கும் படையினரை தயார் நிலையில் வைத்துக் கொள்வது பற்றிய ஒத்திகைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக அணுவாயுதங்களை சுமந்து சென்று கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட உயரத்தில் பறந்து அதிவேகத்தில் விமானப்படைகளதும், கடற்படை இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளின் தயார்நிலை குறித்து ஒத்திகைகளையும் கிரெம்பிளின் நிகழ்த்தியுள்ளது. இது அணுவாயுதப் போருக்கு தயாராவதுடன் உலகத்தின் மத்தியில் அணுவாயுதப் போரை ரஷ்யா எதிர்கொள்ளவும் தாக்குதல் நிகழ்த்தவும் தயாராக உள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றது. ஏறக்குறைய உக்ரைன் போரை வெல்ல வேண்டுமாயின் அணுவாயுதமே அவசியம்' என்ற எண்ணத்தை ரஷ்யா கொண்டுள்ளது.

மூன்றாவது, இது ரஷ்யாவினதும் மேற்குலகத்தினதும் பிரசாரப் போராகவே தெரிகிறது. இதனால் உக்ரைனியர்கள் மட்டுமல்ல உலக மக்களும் நெருக்கடிக்கு முகங்கொடுப்பதற்கான தயார் நிலையை உருவாக்குவதாகவே தெரிகிறது. இதில் ரஷ்ய மக்களும் உக்ரைனிய மக்களும் நேரடியாகப் பாதிக்க வாய்ப்பு அதிகமாக உண்டு. மேற்கு குறிப்பிடுவது போல் ரஷ்யாவே அத்தகைய தாக்குதலை செய்ய முயல்வதாகவும், அதற்கு முன்பே உக்ரைன் மீது குற்றம்சாட்டுவதன் வாயிலாக ரஷ்யா தப்பிக்க முயலுகிறதென்பதாகவுள்ளது. இத்தகைய தாக்குதல்கள் ரஷ்ய மக்களையும் பாதிக்கக்கூடியதென்பதை ரஷ்யா உணராது செயல்படுகிறதா என்பது முக்கியமான குழப்பமாகும். ஏனெனில் அத்தகைய அழுக்குக் குண்டின் துகள்கள் காற்றின் மூலம் பரவலடைந்து பாரிய அழிவுகளை மேற்கொள்ளும் திறனுடையதென்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்துகின்றனர். இது வரை உலகத்தில் இத்தகைய குண்டின் பாவனைக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதே அன்றி தாக்குதல் நிகழ்த்தப்படவில்லை என்பதே தகவலாக உள்ளது. அதனாலும் நீண்ட காலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியதென்ற வகையிலும் ரஷ்யாவின் நகர்வுகளில் மட்டுப்பாடுகள் உள்ளதாகவே அமைய வாய்ப்புள்ளது.

நான்காவது, இத்தகைய தாக்குதல் வாயிலாக மீண்டும் ஒரு வைரஸை ரஷ்யா அல்லது மேற்கு பரவலடைய செய்ய முயலுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்திவருகிறது. குறி-ப்பாக கொரோனாவின் தாக்கம் ஐரோப்பாவை மட்டுமல்ல உலகத்தையே மாற்றத்திற்குள் நகர வேண்டிய நிலையையும் அதனால் உலக ஒழுங்கில் மாற்றத்தையும் சாத்தியப்படுத்தி வருகிறது. இதனை முழுமையாக அடையவும் மேற்கு அதீதமான நெருக்கடியை எட்டவும் வழிவகுக்கும் சூழலை உருவாக்க முயலுவதாகத் தெரிகிறது. ஏற்கனவே கொரோனா உருவாக்கம் என்று மேற்கும் அமெரிக்கா தயாரிப்பென கிழக்கு நாடுகளும் குற்றம்சாட்டியுள்ள நிலையில் மீளவும் ரஷ்யாவினது வைரஸ் பரவலடைய வாய்ப்புள்ளதாக மேற்கும் உக்ரைனூடாக மேற்கு அத்தகைய வைரஸை பரவலடையச் செய்யும் சூழலை ரஷ்யாவும் உரையாடத் தொடங்கியுள்ளன.

ஐந்தாவது, இது போரை வெற்றி கொள்வதற்காகவில்லையாயினும் போரை நிறுத்துவதற்கானதாக அமைய வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. அனைத்துத் தரப்பையும் அழிவுக்கு உள்ளாக்கும் அணுவாயுதப் போரை நிகழ்த்துவதென்பது சாத்தியம் குறைந்ததே. அதனால் அணுவாயுதத்திற்கு பதிலான தாக்குதலை மேற்கொள்ள முயலும் பிரசாரம் போரையும் போரை ஊக்குவிக்கும் நாடுகளையும் நெருக்கடிக்குள்ளாக்கக் கூடியது. அதனால் இத்தகைய பிரசாரத்தை பரஸ்பரம் நிகழ்த்துவதன் மூலம் போரை பலவீனப்படுத்தலாம் என இரு தரப்பும்' கருதுகிறது. அதில் அதீதமாக ரஷ்யாவும், அமெரிக்காவுமே கவனம் செலுத்துகின்றன.

எனவே அழுக்கு குண்டு பற்றிய பிரசாரப் போர் போர்க்களத்தை மற்றத்திற்கு உள்ளாக்கும் நகர்வாக மட்டுமன்றி அணுவாயுதப் போரை நிகழ்த்த முடியாத சூழலில் பிரயோகிக்கப்படும் போர் வழிமுறையாவே தெரிகிறது.

உலகளாவிய அரசியல் போக்கில் ஏற்பட்டுவரும் மாற்றமானது புதிய உலக ஒழுங்கை அடையாளப்படுத்த ஆரம்பித்துள்ளது. குறிப்பாக பொருளாதார கட்டமைப்பில் ஏற்பட்டுவரும் நெருக்கடி ஐரோப்பாவை தொடர்ச்சியாக அபாயமான நிலைக்குள் தள்ளிவருவதை அவதானிக்க முடிகிறது. பிரித்தானியா போன்று பிரான்ஸிலும் அதேநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. உலகளாவிய அரசியலின் பலமானது பொருளாதார பலத்திலேயே தங்கியிருந்தது. அதனை எண்ணைவள நாடுகளும் பெற்றோலியத்தை கொண்டுள்ள பிராந்தியமும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் முன்னேற்றத்தை அடைந்துவருகின்றன. அதில் மேற்கு ஆசிய மற்றும் எண்ணெய்வள நாடுகளைவிட ரஷ்யா செல்வாக்கு செலுத்தும் நாடாக விளங்குகிறது. காரணம் ரஷ்யா ஏற்கனவே வல்லரசு நாடாக விளங்கியதுடன் அமெரிக்கா உட்பட மேற்குலகத்திற்கு எதிரான தேசமாக கட்டமைக்கப்பட்டுள்ளதென்பது ரஷ்யாவின் தனித்துவமாகும். பொருளாதார நெருக்கடியால் மேற்கு அதிக குழப்பத்தை அடைந்த போதும் ரஷ்யாவுக்கு எதிரான அணுகுமுறையை கைவிடுவதாக இல்லாத சூழலில் ரஷ்யா அணுவாயுதத்தை அல்லது அதற்கு சமமான தாக்கத்தை தரக்கூடிய ஆயுதத்தை பிரயோகிக்க முயலலாம் என்ற குழப்பம் நியாயமானதாகவே தெரிகிறது. இக்கட்டுரையும் Dirty Bomb என அழைக்கப்படும் அணுக்கழிவுகளை கொண்ட தாக்குதலுக்கு பரஸ்பரம் இருதரப்பும் முயல்வதாக கூறப்படுவதன் நோக்கத்தை தேடுவதாக உள்ளது.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ்.பல்கலைக்கழகம்

Comments