தொழிற் சந்தைக்கு ஏற்ற தெரிவால் மாகாண கல்விநிலை ஏறுமுகத்தில் செல்லும் | தினகரன் வாரமஞ்சரி

தொழிற் சந்தைக்கு ஏற்ற தெரிவால் மாகாண கல்விநிலை ஏறுமுகத்தில் செல்லும்

மாணவர்கள் தமது அடைவு மட்டத்திற்கு பெறுபேறுகளுக்கு, விருப்பத்திற்கு, திறந்துகிடக்கிற மூன்றாம் நிலைக் கல்விக்கு, தொழிற் சந்தைக்கு ஏற்ற பாடப்பிரிவுகளை, பாடத் தெரிவுகளை எடுக்கும் சுதந்திரத்தைப் பெறுகின்ற போது, மாகாணத்தின் கல்விநிலை ஏறுமுகத்தில் மேம்பட்டுச்செல்லும் என்கிறார் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் மார்க்கண்டன் ரூபவதனன், தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது கூறினார்.

ஊவா மாகாணத் தமிழ்க் கல்வித்துறை எந்த நிலையிலுள்ளது?

ஊவா மாகாணக் கல்வித்துறை ஆரோக்கியமாக இருக்கின்றது. கடந்த சில வருடங்களின் பெறுபேறுகளைத் தொகுத்து நோக்கின் அது நன்கு புலப்படும். ஏனைய மாகாணங்களோடும் மாவட்டங்களோடும் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து ஊவா மாகாணம் மற்றும் பதுளை, மொனராகலை மாவட்டங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளன அல்லது தமது நிலைகளைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன எனலாம். எடுத்துக்காட்டாக 2020 மற்றும் 2021 பரீட்சைகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் ஊவா மாகாணம் தொடர்ந்து 4வது நிலையில் உள்ளது. பதுளை மாவட்டம் 6வது இடத்தையும் பெற்றுள்ளதோடு, மொனராகலை மாவட்டம் 10வது நிலையிலிருந்து 8வது நிலைக்கும் முன்னேறியிருக்கிறது. க.பொ.த சாதாரணப் பெறுபேறுகளின் அடிப்படையில் பதுளை மாவட்டம் 15வது நிலையிலிருந்து 12வது நிலைக்கும் மொனராகலை மாவட்டம் 21வது நிலையிலிருந்து 10வது நிலைக்கும் பாய்ந்திருக்கிறது. க.பொ.த சாதாரணப் பெறுபேறுகள் மகிழ்ச்சியும் பெருமையும் தரக்கூடியனவாகவும் உள்ளன. 2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பதுளை மாவட்டம் 11வது நிலையிலிருந்து 2வது நிலைக்கும் மொனராகலை மாவட்டம் 19வது நிலையிலிருந்து 11வது நிலைக்கும் உயர்ந்ததனால் ஊவா மாகாணம் சகலதுறைகளிலுமாக 2வது நிலையை அடைந்தது. சிறப்பாகக் கலைப்பிரிவில் 1ஆவதாக வந்தது.

மொழிமூலம் சார்ந்து பார்த்தால் ஊவா மாகாணத் தமிழ்க் கல்வித்துறையும் படிப்படியாக முன்னேற்றம் அடைந்துள்ளது, என்பதோடு ஒட்டுமொத்த ஊவாவின் வெற்றிக்கும் பங்களிக்கின்றது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். குறிப்பாக 2021 க.பொ.த உயர்தர கலைப்பிரிவு 1வது நிலையிலும் வர்த்தகப் பிரிவு 2வது நிலையிலும் வருவதற்குத் தமிழ் மொழிமூலப் பெறுபேறுகளும் பெரும் பங்காற்றியுள்ளன என்பது மிக முக்கியமானது. கடந்த பல ஆண்டுகளாக இப் பிரிவுகளில் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றுப் பல்கலைக்கழக சட்டபீடங்களுக்குத் தெரிவாகிய பலர் இன்று சட்டத்தரணிகளாகவும், இதர பீடங்களுக்குத் தெரிவாகிய பலர் பல்கலைக்கழக மற்றும் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்களாக, நிருவாக அதிகாரிகளாக, பாடசாலை அதிபர்களாக, ஆசிரியர்களாக, பொதுசன நிருவாக உத்தியோகத்தர்களாக சேவையாற்றுகின்றமை பெருமைப்படக்கூடிய விடயமே.

இதேவேளை 2021 க.பொ.த உயர்தர கணித விஞ்ஞானப் பிரிவுகளில் 8ஆம் 7ஆம் இடங்களில் இருப்பதற்கும் தமிழ் மொழிமூல மாணவர்களின் பங்களிப்புக் கிடைக்காமையும் காரணமாகும் என்பதையும் உரியவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

எனவே அனைவரதும் அடிப்படை உரிமையாகிய கல்வியைப் பாகுபாடின்றி பன்மைத்துவத்தை ஏற்றுப் பரவலாக்கம் செய்து வழங்குகின்றபோது ஊவா மாகாணக் கல்வித்துறையும் சிறப்பாகத் தமிழ்க் கல்வித்துறையும் சீரான, சிறப்பான வளர்ச்சியைக் கண்டு முன்னோக்கி சென்று முன்னுதாரணமாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ்க் கல்வியின் பின்னடைவிற்கான காரணங்கள் எவை எனக் கருதுகிறீர்கள்?

தமிழ்க் கல்வி பின்னடைந்துள்ளதா எனக் கேள்வி எழுப்புகின்றபோது ஆம் அல்லது இல்லை என அதற்கான விடையை அளித்துவிட முடியாத அளவிற்கு சிக்கல்தன்மை நிறைந்தது. இதற்கான விடையை பன்முக நோக்கில் தேடவேண்டியுள்ளது. வரலாற்று ரீதியாகவும், பொருளாதார அபிவிருத்தி நோக்கிலும், அரசியல் அதிகாரங்களின் பின்னணியிலும், கல்விக் கோட்பாடுகளின் அமுலாக்கல் தொடர்பிலும் நாம் இதை நோக்கவேண்டியுள்ளது.

ஊவா மாகாண தமிழ்ப் பாடசாலைக் கல்வி 3 தளங்களில் வளர்ந்துள்ளது. 1. பெருதோட்டப் பாடசாலைகள், 2. தனியார் பாடசாலைகள், 3. சமய நிறுவனங்கள்சார் பாடசாலைகள். இவற்றுள் பெருதோட்டப் பாடசாலைகள் எண்ணிக்கையில் அதிகமானவை. 1942இல் இலங்கையில் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தியபோதும் ஏறத்தாழ 35 வருடங்களின் பின்னரே 1977இல் தோட்டப் பாடசாலைகளை அரசுடைமை ஆக்கி இலவசக் கல்வி கிடைக்கப் பெறலானது. ‘அரச’ பாடசாலைகளுக்கான பௌதிக, மனித வளங்களின் ஒதுக்கீடு, பகிர்வு மற்றும் பெருக்கம் என்பன குறிப்பிடத்தக்க கல்வி வளர்ச்சியைக் காண உதவின என்பதை மறுப்பதற்கில்லை.

வரலாற்று ரீதியாக, தொடக்கத்தில் ஆரம்பக் கல்வியும் பின்னர் இடைநிலைக் கல்வியும் தொடர்ந்து உயர்கல்வியும் பெறும் வசதிவாய்ப்புகள் படிப்படியாக இம் மாகாண மாணவர்களுக்குக் கிடைக்கப்பெற்றன. அருகில் உள்ள மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு வந்து கல்விபெற்றுச் சென்ற சிறப்பும் வரலாறும்கூட ஊவாவிற்கு உண்டு. மறுபக்கம் பொருள்வசதி மற்றும் தொடர்புசார் உறவுகளின் நிமித்தம் பிற மாகாணங்களுக்குச் சென்று அங்குள்ள பாடசாலைகளில் கற்று ஊவாவைச் சேர்ந்தவர்கள் பிரகாசித்த வரலாறுகளும் உண்டு. பல்கலைக்கழகங்களில் மறைந்த பேராசிரியர்களான சின்னத்தம்பி, சோ. சந்திரசேகரம், இந்நாள் பேராசிரியர் ச. விஜயச்சந்திரன், எஸ். இராஜலக்ஷ்மி, சோபனாதேவி, கலாநிதி ஆர். ரமேஷ், ஓய்வுபெற்ற எம். வாமதேவன் தற்போதுள்ள இரட்ணகுமார் உள்ளிட்ட இலங்கை திட்டமிடல் சேவை, நிருவாக சேவை அதிகாரிகள் திருமதி யோ. கலையரசி உள்ளிட்ட கல்வி நிருவாக சேவை மற்றும் ஆசிரிய கல்விச் சேவை அதிகாரிகள் எனப் பலர் குறிப்பிடத்தக்கவர்கள்.

முன்யைக காலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது அண்மைக் காலங்களில் ஊவா மாகாணத் தமிழ்க் கல்வி பின்னடைந்துள்ளது என்ற ஒரு தோற்றப்பாடு எம் எல்லார் மத்தியிலும் அவ்வப்போது வந்து போகின்றது. அது உண்மை. ஆனால் அதற்கான காரணங்கள் சில சூக்சுமமானது. சில ஸ்தூலமானவை.

நமது மாகாணத்தைச் சேர்ந்த கெட்டிக்கார வசதி கிடைக்கும் மாணவர்கள் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் க. பொ. த. சாதாரண தர பரீட்சைகளின் பின் பிற மாகாணங்களை நோக்கிச் சென்று கல்வி கற்று அப் பாடசாலைகளுக்குப் பெருமை சேர்த்துக் கொடுக்கிறார்கள். அவ்வாறு சித்திபெற்றுப் பொறியியல் பீடங்களுக்குச் சென்ற சிலர் நாட்டின் பல பாகங்ளிலும் பொறியலாளர்களாகச் சேவையாற்றுகின்றனர். மருத்துவ பீடங்களுக்குச் சென்ற சிலர் வைத்தியர்களாகவும் இதர அறிவியல் பீடங்களுக்குச் சென்றவர்கள் தத்தம் துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள், ஆயினும் சனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப இவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவே.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலை, வர்த்தகம் தவிர்ந்த பிரிவுகளில் கல்விகற்கும், பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள், மிக மிகக் குறைவாகக் காணப்படுகின்றனர். சொந்த மாகாணத்தில், மாவட்டத்தில், தமது மொழியில், தாம் படித்த பாடசாலையில் கணித உயிரியல் மற்றும் தொழிநுட்பப் பிரிவுகளில் படிக்கப் பரீட்சை எழுத வாய்ப்புக் கிடைத்தால் அவர்கள் சாதித்துக் காட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

மற்றையது கலைப் பிரிவிலும் பாடத்தெரிவுகள் மாணவர்களுக்கு கிடைக்காமை. குறிப்பாக மொழிகள் - ஆங்கிலம், பிரெஞ்சு, சமஸ்கிருதம், ஹிந்தி, சீனம், ஜப்பான் முதலிய மொழிகளை மற்றும் அழகியல், தொழிநுட்பப் பாடங்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படுமிடத்து மாணவர்கள் தேசிய ரீதியில் சிறந்து விளங்குவதற்கும் பேசப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்

ஊவா மாகாணத் தமிழ்க் கல்வித்துறையை மேப்படுத்தும் வகையில் உங்களிடம் எவையேனும் திட்டங்கள் உள்ளனவா? அவைபற்றி விபரியுங்கள்.

கல்வித்துறையை மேம்படுத்துவது என்பது ஒரு கூட்டுமுயற்சியால் சாத்தியமாகக்கூடிய ஒன்றே. வளமான, தூரநோக்குடைய தனிமனித சிந்தனைகள், திட்டங்கள், ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் அதற்குப் பங்களிக்கலாம். மேலும் கல்வித்துறைசார்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பணிப்பாளர்கள், அரசியல் செல்வாக்குடையோர் எனப் பலரும் காலத்திற்குத் தேவையான தம்மாலான பங்களிப்புகளை, தமக்குரிய பொறுப்பு மற்றும் கடமைகளை சரியாக வழங்கும்போது கல்வி உரிய மேம்பாட்டை அடையும்.

எடுத்துக்காட்டாக ஊவா மாகாணத்தில் தமிழ் மொழிமூலம் கணித, உயிரியல் மற்றும் தொழிநுட்பப் பிரிவுகளில் கல்வியை மேற்கொள்ள வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது.

இதனால் மாகாணத்தில் சராசரியாக 45 தொடக்கம் 50 வீதம் வரையிலான சித்தியே காணப்படுகிறது. இந்த வீதம் இங்குள்ள மாவட்டங்களை 19 மற்றும் 23 ஆம் இடங்களுக்குத் தள்ளிவிட்டுள்ளது. எனவே அனைத்து தரப்பினரும் பரந்த சிந்தனையுடன் செயற்படவேண்டிய உடனடித் தேவை உள்ளது.

மாணவர்கள் தமது அடைவு மட்டத்திற்கு பெறுபேறுகளுக்கு, விருப்பத்திற்கு, திறந்துகிடக்கிற மூன்றாம் நிலைக் கல்விக்கு, தொழிற் சந்தைக்கு ஏற்ற பாடப்பிரிவுகளை, பாடத் தெரிவுகளை எடுக்கும் சுதந்திரத்தைப் பெறுகின்ற போது, அத்தகைய மாணவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொறுப்பாளர்கள் உரிய உதவிகளைச் செய்கின்றபோது மாகாணத்தின் கல்விநிலை ஏறுமுகத்தில் மேம்பட்டுச்செல்லும் என்பது எமது திண்ணம்.

இம் மாகாணத் தமிழ்ப் பாடசாலைகளில் உள்ள க.பொ.த. உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகள் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?

ஊவா மாகாணத்தில் குறிப்பிட்ட ஓரிரு பாடசாலைகளில் க.பொ.த. உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளில் பல ஆண்டுகளாக மாணவர்கள் கல்விகற்று வருகிறார்கள். (17 ஆம் பக்கம் பார்க்க)

முருகேசுபிள்ளை செல்வராஜா
பதுளை தினகரன் விசேட நிருபர்

Comments