மலையக மக்களின் எழுச்சியில் நீங்கா நினைவுகளை கொண்ட அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் | தினகரன் வாரமஞ்சரி

மலையக மக்களின் எழுச்சியில் நீங்கா நினைவுகளை கொண்ட அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான்

உலகிலேயே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர்கள், வழிகாட்டியவர்கள் என்றுமே போற்றப்படுபவர்கள். இந்த வரிசையில் மேற்குலக நாடுகள், மத்திய கிழக்கு, ஆபிரிக்கக்கண்டம், தெற்காசிய நாடுகளில் இன, மத வேறுபாடுகளைக் கடந்து மனித குலத்திற்கு வழிகாட்டியவர்களே அன்றும் இன்றும் போற்றப்பட்டு வருகின்றார்கள். இலங்கையில் குறிப்பாக மலையகத்தில் அமரர் சௌமிமூர்த்தி தொண்டமான் போற்றப்படுகின்றார்.

ரஷ்யாவில் புதிய சித்தாந்த கோட்பாடு முன்வைக்கப்பட்டது. இதற்குப் பின்னர் ஸ்ராலின் இதில் காலத்திற்கேற்ற மாற்றங்களை புகுத்தினார். சீனாவில் மாசேதுங் இவற்றை ஏற்று சீனாவிற்கு ஏற்ற விதமான பொதுவுடமைத் தத்துவத்தை உருவாக்கினார். ஸ்டாராஸ்க்கியும் சமதர்ம கோட்பாட்டை வழி நடத்தினார். இவர்களுடைய தத்துவங்கள் மார்க்ஸிஸம், லெனினிஸம், ஸ்டாலினிஸம், மாவோனிஸம் என போற்றப்படுகின்றனர். இந்த வகையில் மலையக தோட்டப்புறங்களில் ஆண்டாண்டு காலமாக தலைமுறை தலைமுறையாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் கிட்ட அன்று அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் தக்க வழிகளையும், கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளையும் சுட்டிக் காட்டினார்.

மலையகம் இவற்றை பின்பற்றி இன்று தலைநிமிர்ந்து தேசிய மட்டத்திலும், பாராளுமன்றத்திலும் இடம்பிடித்துள்ளது. அஞ்சா நெஞ்சத்துடன் மக்களின் அவல நிலையை சுட்டிக்காட்டி உரிய உரிமைகளுக்காக துணிச்சலோடு செயல்பட்டு மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து சாதனை படைத்துள்ளார்.இன்று இலங்கையில் இவருடைய வழிகளையும் கோட்பாடுகளையும் சுட்டிக் காட்டும் பொழுது தொண்டமானிஸம் என்று ஆணித்தரமாக குறிப்பிட முடியும்.

தொண்டமானிஸம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பல்துறை தொழில் வாய்ப்புக்கள், வாழ்வாதாரங்கள், வாழ்க்கைதர உயர்வு, சொந்த குடியிருப்பு ஆகியவற்றுக்கு துணிகரமாக மலையக சமூகத்தை அன்றும், இன்றும் செயற்பட தூண்டி வருகிறது,

தொண்டமானிஸம் சாத்வீக போராட்டங்களாலும், ஆன்மீக பிரார்த்தனைக் கூட்டங்களாலும் குறிக்கோள்களை நிறைவேற்றி வந்துள்ளது – வருகிறது. இந்த சாணக்கிய தொலைதூர கண்ணோட்டமுள்ள நெறிமுறைகளால் இந்நாட்டில் உள்ள ஏனைய சமூகங்கள் மலையக சமூகத்தை சந்தேக கண்கொண்டு பார்க்கவில்லை. அரசியலில் ஓரம் கட்டவும் முனையவில்லை. அதேவேளை பெரும்பான்மை தலைவர்களும், வடகிழக்கு தலைவர்களும் அவ்வப்போது தொண்டமான் காலத்திற்கேற்ற சமயோசித பணிகளையும், ஆலோசனைகளையும் ஏற்றும் பாராட்டியும் உள்ளார்கள்.

தொண்டமானிஸத்தை இன்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பேணிப்பாதுகாத்து வருகின்றது. இந்த கொள்கையையும் இ.தொ.கா மாத்திரமல்ல இ.தொ.காவிலிருந்து பிரிந்து தலைதூக்கி வரும் பிற சங்கங்களும் கடைப்பிடித்து வருகின்றன. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காட்டிய நெறிகள், வழங்கிய உபதேசங்கள் ஆகியவற்றை தவறாது கடைப்பிடித்தே தமது அங்கத்தவர்களின் குறைகளை தீர்க்கவும், தேவைகளை நிறைவேற்றவும் இச்சங்கங்கள் முனைகின்றன. இதிலிருந்து தொண்டமானிஸத்தின் பெருமையையும், அவசியத்தையும் முழு மலையகமே உணர்கின்றது.

இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் அபிலாஷைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் ஒரு காத்திரமான தீர்வை எடுக்கும் வல்லமை இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கு உண்டு. உள்ளுராட்சி சபைகள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றம் போன்ற அனைத்து மட்டங்களிலும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சிறந்த கட்டமைப்பாக இது வரையிலும் மிளிர்ந்து வருவது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தான்.

மலையகத் தமிழர்கள் என்று அறியப்படுகின்ற நமது இந்திய வம்சாவளி மக்களே இலங்கைச் சமூகத்தில் நமது குடியியல், அரசியல் உரிமைகள் மட்டுமன்றி பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளும் மறுக்கப்பட்ட ஒரு காலக்கட்டத்தில் 'ஒரு புறம் எதிர்ப்பு மறுபுறம் ஒத்துழைப்பு சமரசம்' என்ற ஒரு யதார்த்தமான தந்திரோபாய வழிமுறையைக் கையாண்டதன் மூலம் தமது வாழ்க்கைக் காலத்தில் தமது மக்களுக்கு பல உரிமைகளைப் பெற்றுத் தந்தவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களேயாகும்.

தலைவர் தொண்டமானின் வராலற்றுப் பதிவுகளை பாடசாலை மாணவர்களும் அறிந்து, தெரிந்துக் கொள்ளும் வகையில் பாடநூலாக வெளிவர வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும். குறிப்பாக மலையகத் தமிழர்களின் வரலாறு, தொழிற்சங்க வரலாறு போன்றன மாணவர்கள் அவசியம் தெரிந்து அறிந்து புரிந்துக்கொள்ள வேண்டும். இது ஒரு காலத்தில் மாணவர்களுக்கு பரீட்சை வினாத்தாள்களிலும் வினாக்களாகவும் வரக்கூடிய ஒரு சந்தர்ப்பமும் அமைய வேண்டும் என்பதோடு இலங்கையில் தேசப்பிதாக்கள் வரிசையில் பெரியார் அமரர் தொண்டமானுக்கும் இடமுண்டு என்பதையும் வரலாறுகள் சான்று பகரும்.

தேவதாஸ் சவரிமுத்து
ஊடக இணைப்பாளர்

Comments