எங்கே தவறிழைத்தோம்? | தினகரன் வாரமஞ்சரி

எங்கே தவறிழைத்தோம்?

ஆரம்ப சுற்றில் நமீபியாவிடம் தோற்றபோது இலங்கை அணியால் அதனை சுதாகரிக்க முடிந்தது. ஏனென்றால் அடுத்து இருந்த ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான போட்டிகள் அத்தனை சவாலானது அல்ல.

நினைத்தபடி அந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டிய இலங்கை சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி முதல் போட்டியில் அயர்லாந்தை தோற்கடித்தது நல்ல ஆரம்பம்.

ஆனால் அடுத்து நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தோற்றதற்கு இலங்கையின் திறமைக்கு அப்பால் வெளிப்புற காரணிகளையும் நியாயமாகச் சொல்லிவிடலாம். ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை சந்தித்தது மோசமான தோல்வி. அந்தத் தோல்வியுடனேயே இலங்கை அணியின் உலகக் கிண்ண கனவு கலைந்துவிட்டது.

எப்போது அரையிறுதிக்கு முன்னேற மற்றொரு அணியின் தயவை எதிர்பார்க்கும் சூழல் ஏற்பட்டதோ அப்போது அதிர்ஷ்டத்தை நம்ப வேண்டி இருந்தது. அதுவும் அயர்லாந்து அல்லது ஆப்கானின் வெற்றிதான் இலங்கையின் அரையிறுதியை தீர்மானிக்கும் என்றபோது இலங்கை அதிர்ச்சி முடிவு ஒன்றையே காத்திருந்தது.

எதிர்பார்த்தபடி முடிவு கிடைக்காமல் இலங்கை உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியது ஏமாற்றம் தந்தாலும், அணியின் திறமை, போட்டியின் போக்குகளை பார்க்கும்போது அது எதிர்பார்த்ததுதான்.

ஆசிய கிண்ணத்தை வென்று பெரும் நம்பிக்கையுடனேயே இலங்கை அணி இம்முறை உலகக் கிண்ணத்திற்கு சென்றது. என்றாலும், இலங்கை அணி எங்கே தவறிழைத்தது?

உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு ஏற்பட்ட முதல் தடங்கல் காயங்கள்தான். அது போட்டித் திட்டங்களையே குழப்பிவிட்டது. போட்டிகள் ஆரம்பிக்கும் முன்னரே பெரும் எதிர்பார்ப்பாக இருந்த இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க காயமடைந்து வெளியேறினார்.

பின்னர் இலங்கையின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீர காயமடைந்து வெளியேறினார். தொடர்ந்த மதுஷங்கவுக்கு பதில் அணிக்கு அழைக்கப்பட்ட மற்றொரு இடது கை வேகப்பந்து வீச்சாளரான பினுர பெர்னாண்டோவுக்கும் காயம்.

துடுப்பாட்ட வீரர் மற்றும் அவசரத்திற்கு பந்துவீச்சிலும் பயன்படுத்த முடியுமான தனுஷ்க குணதிலக்கவும் காயமடைய மேலதிகமாக மூன்று வீரர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டி ஏற்பட்டது.

அணியில் இருந்து வெளியேறாதபோதும் பத்தும் நிசங்க மற்றும் பிரமோத் மதுஷானின் காயங்கள் அவர்கள் போட்டியில் ஆட முடியாத நிலையை ஏற்படுத்தியது.

வேகப்பந்து வரிசை பலவீனம் அடைந்ததால் சுழற்பந்து வீச்சாளர்களான வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷனவை அதிகம் நம்ப வேண்டி இருந்தது. வேகப்பந்துக்கு அதிகம் சாதகமான ஆஸி. அடுகளங்களில் அது எப்போதும் உதவாது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி இதற்கு நல்ல உதாரணம். வனிந்து ஹசரங்கவின் பந்துவீச்சு முழுமையாக செல்லாமல்போனது. அவர் 3 ஓவர்களுக்கு 53 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து தனது சர்வதேச கிரிக்கெட்டில் மோசமான பந்துவீச்சை காண்பித்தார். அவரை நம்பியிருந்த இலங்கை அணி கடைசியில் மோசமான தோல்வியை சந்திக்க வேண்டி ஏற்பட்டது.

இலங்கை பந்துவீச்சில் ஏற்பட்ட பலவீனம் முக்கியமான போட்டிகளில் தெளிவாகத் தெரிந்தது.

துடுப்பாட்டத்திலும் யாரும் பிடிகொடுத்து ஆடியதாகத் தெரியவில்லை. இந்தத் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற இலங்கை வீரராக குசல் மெண்டிஸ் இருந்தபோதும் அவர் பலமான அணிகளான அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் முறையே 5, 4 ஓட்டங்களையே பெற்றார்.

மறுபுறம் பத்தும் நிசங்கவின் ஆட்டத்தில் வழக்கமான வேகம் இருக்கவில்லை. பந்து வழக்கத்தை விட அதிகம் மேலெழும் அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் அவர் அதிகம் பழக்கப்படவில்லை என்பது அவர் துடுப்பை சுழற்றும் பாணியிலேயே தெரிகிறது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவர் 40 ஓட்டங்களை எடுத்தபோதும் அதனைப் பெற 45 பந்துகளுக்கு முகம்கொடுத்து வெறுமனே 2 பௌண்டரிகளை மாத்திரம்தான் எடுத்தார்.

தனஞ்சய டி சில்வாவின் பந்தை தேர்வு செய்து துடுப்பெடுத்தாடும் பாணி அவுஸ்திரேலிய ஆடுகளங்களுக்கு கச்சிதமாக பொருந்துகின்றபோதும் ஆப்கானுக்கு எதிரான போட்டியில் தான் ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களை பெற்று கைகொடுத்தார்.

குணதிலக்க காயமடைந்த பின்னர் இரண்டாவது வரிசையில் வந்த சரித் அசலங்க இன்னும் தனது வழக்கமான அட்டத்திற்கு திரும்பவில்லை.

ஆரம்ப வரிசை சற்று தடுதாற்றம் கண்டதால் பானுக்க ராஜபக்ஷ மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானக்க மத்திய வரிசையில் தடுமாற வேண்டி ஏற்பட்டது. ஒன்று அவர்கள் முன்கூட்டியே துடுப்பெடுத்தாட வந்து முழுமையாக அணியை சுமக்க வேண்டி ஏற்பட்டது, இல்லையென்றால் கடைசி நேரத்தில் அதிக ஓட்ட வேகத்தை பிடிக்க வேண்டி ஏற்பட்டது.

இதற்கு சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்னவிடம் இருந்தும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. கருணாரத்ன இந்தத் தொடரில் முழுமையாக சோபிக்கவில்லை. கருணாரத்ன அடிய ஏழு போட்டிகளிலும் 32 ஓட்டங்களையே பெற்றதோடு பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளையே வீழ்த்தினார். இதனால் ஆப்கானுக்கு எதிரான போட்டியில் அவரை சேர்க்காமல் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இலங்கை அணியில் இப்போது இருக்கும் முழுமையான வேகப்பந்து சகலதுறை வீரர் கருணாரத்னதான். தசுன் ஷானக்க இப்போதெல்லாம் அதிகம் பந்துவீசுவதில்லை. துடுப்பாட்டத்தில்தான் அதிகம் கவனம் செலுத்துகிறார்.

எனவே கருணாரத்ன அணியில் தனது பாத்திரத்தை நன்றாக புரிந்து கொண்டு செயற்பட வேண்டி இருப்பதோடு மாற்று வேகப்பந்து சகலதுறை வீரர் ஒருவரின் தேவையும் அணியில் உள்ளது.

இவை எல்லாவற்றையும் விட களத்தடுப்புதான் பெரும் பிரச்சினை. துடுப்பாட்ட வீரர்கள், பந்துவீச்சாளர்கள் எத்தனை தான் திறமையாக ஆடினாலும் களத்தடுப்பு என்பது ஆட்டத்தை திசை திருப்பக்கூடியது.

இலங்கை அணியின் களத்தடுப்பு நிலையாக இல்லை. ஆசிய கிண்ணத்தில் சிறப்பாக இருந்த களத்தடுப்பு உலகக் கிண்ணத்தில் மோசமாகிவிட்டது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கிளன் பிலிப்ஸின் கைக்கு வந்த பிடியெடுப்பை பத்தும் நிசங்க தவறவிட்டது என்பது ஊருக்கே தெரிந்த கதை.

அதுதான் போட்டியையே திசைதிருப்பியது. இலங்கையின் தலையெழுத்தையே மாற்றியது என்று சொன்னாலும் தப்பில்லை.

இது மட்டுமல்ல இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி கிட்டத்தட்ட எட்டு பிடியெடுப்புகளை தவறவிட்டிருக்கிறது. இது ஏனைய அணிகளுடன் ஒப்பிடுகையில் அதிகம். எனவே இந்தக் குறையை சரிசெய்வது அவசியம்.

Comments