ரயில்வேக்கு மேலும் 3,000 ஊழியர்கள் | தினகரன் வாரமஞ்சரி

ரயில்வேக்கு மேலும் 3,000 ஊழியர்கள்

சேவை உதவியாளர்களாக இணைத்துக்ெகாள்ள அரசு முடிவு

மக்களுக்கு ரயில் சேவையை தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கும் வகையில் அரசாங்கம் அதிரடி தீர்மானம்

ரயில் சேவைகளை தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கும் வகையில் ரயில்வே திணைக்களத்திற்கு 3,000 ஊழியர்களை புதிதாக இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை அனுமதி மற்றும் அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றின் அனுமதியுடன் அரசாங்க சேவையில் உள்ளீர்க்கப்பட்டுள்ள பல்வகை அபிவிருத்தி செயலணியிலிருந்து 3,000 பேரை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் வழிகாட்டலுக்கிணங்க இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ரயில்வே திணைக்களத்தின் கீழ் அரசாங்கத்தின் ஓய்வூதியம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளும் அரசாங்கத்தின் நிரந்தர ஊழியர்களாக அவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் பொதுமக்களின் போக்குவரத்து சேவையை தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் வகையிலும், தற்போது நிலவும் ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையிலும் இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Comments