மாத்தளை மாவட்டத்திலுள்ள எல்கடுவ பிளாண்டேசனுக்கு உட்பட்ட ரத்தவத்தை தோட்ட கீழ்ப்பிரிவில் தோட்டத் தொழிலாளர் குடும்பத்தவர்கள் வசித்து வந்த தற்காலிக வீடொன்று அதே தோட்டத்தின் அதிகாரியின் தலைமையில் கடந்த வார இறுதியில் தகர்த்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அக்குடியிருப்பில் குடியிருந்ததாகக் கூறப்படும் மூன்று குடும்பங்கள் இருப்பிடத்தை இழந்துள்ளன.
இச்சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கண் முன்பாகவே இடம்பெற்றுள்ளதோடு அவர்களது பிள்ளைகள் கதறி அழுத போதிலும் அவற்றைக் கருத்தில் கொள்ளாது பலவந்தமாக உடைத்து தற்காலிக குடியிருப்பு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்திற்கு கடும் ஆட்சேபனைகளும் எதிர்ப்புக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஸ்தலத்திற்கு சென்று உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அதேநேரம் இச்சம்பவத்திற்கு பாராளுமன்றத்திலும் கடும் ஆட்சேபனைகளும் எதிர்ப்புக்களும் நேற்றுமுன்தினம் தெரிவிக்கப்பட்டன.
குறித்த தற்காலிக குடியிருப்பை உடைத்து அப்புறப்படுத்தியமையை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டு ஆட்சேபனை வெளிப்படுத்திய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் பிரதிநிதிகள் பதாகைகளை ஏந்தி பாராளுமன்ற சபா பீடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட உதவி முகாமையாளரை கைது செய்யுமாறு அவர்கள் கோரிக்கையும் விடுத்தனர். இந்நிலையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் சில நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன.
பெருந்தோட்ட மக்கள் என்பவர்கள் இந்நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய துறையில் பணியாற்றுபவர்களாவர். அவர்கள் இந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக அளப்பரிய பங்களிப்பை நல்குபவர்களும் கூட. இரண்டு நூற்றாண்டுகளாக இந்நாட்டுக்காக உழைத்துவரும் இவர்கள், இந்நாட்டின் குடியுரிமையும் பெற்றவர்களும் ஆவர்.
ஆன போதிலும் இம்மக்களின் ஒரு தொகையினருக்கு இன்னும் காணி உரிமை இல்லாதுள்ளது. அவர்களுக்கு 10 பேர்ச் படி காணி வழங்கி அந்த உரிமையைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
காணி உரிமை இல்லாத பெருந்தோட்ட மக்களில், மாத்தளை மாவட்டத்தின் ரத்தவத்தை தோட்ட கீழ்ப்பிரிவில் இத்துரதிர்ஷ்டகர சம்பவத்திற்கு முகம்கொடுத்துள்ள குடும்பத்தவர்களும் அடங்குவர். அவர்கள் தோட்ட நிர்வாகத்தினரிடம் பல ஆண்டுகளாக விடுத்து வந்த கோரிக்கைக்கு அமைய தோட்ட நிர்வாகத்தின் தற்போதைய முகாமையாளருக்கு முன்பாக நிர்வாகத்தில் இருந்த முகாமையாளர் வழங்கிய சிறிய காணியில் சில தினங்களுக்கு முன்னர் அக்குடும்பத்தினர் தற்காலிக குடியிருப்பை அமைத்து வசித்து வந்துள்ளனர். அக்குடியிருப்பையே தற்போதைய உதவி முகாமையாளர் தோட்ட அதிகாரிகளுடன் இணைந்து உடைத்து அப்புறப்படுத்தியுள்ளார்.
இது முற்றிலும் நியாயப்படுத்த முடியாத நடவடிக்கையாகும். இவ்விடயத்தில் தோட்ட நிர்வாகம் நேரடியாக சம்பந்தப்பட்டு சட்ட ரீதியில் அப்புறப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம். இதைவிடுத்து உதவி முகாமையாளர் சட்டத்தைக் கையில் எடுத்து இவ்வாறு செயற்படவே முடியாது. அதுவே எல்லா மட்டத்தினரதும் கருத்தாகும்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பெருந்தோட்ட அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன, ‘இச்சம்பவம் குறித்து அரசாங்கம் வருத்தம் தெரிவித்து கொள்வதாகக் குறிப்பிட்டதோடு, இவ்வாறான சம்பவம் உண்மையில் இடம்பெற்று இருக்கக்கூடாது. ஆன போதிலும் இச்சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட சகலருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் இவ்விடயத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட உதவி முகாமையாளர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு விடுமுறை வழங்கப்பட்டு, எதிரான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன’ என்றும் கூறியுள்ளார்.
இச்சம்பவத்திற்கு அரசாங்கத்தின் வருத்தத்தை தெரிவித்ததன் ஊடாக ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தின் அமைச்சர் என்பதை அமைச்சர் ரமேஷ் பத்திரன வெளிப்படுத்தியுள்ளார். இதனை மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாதிருப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். அதற்கு ஏற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என மக்கள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக காணி உரிமையற்ற பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட வேண்டும். அப்போது இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் இடம்பெற வாய்ப்பு இருக்காது. அதுவே மக்களின் எதிர்பார்ப்பும் ஆகும்.