‘இனமத பேதங்கள் இனிமேல் வேண்டாம்’ என்கிறார் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க
எமது நாட்டில் இன,மத பேதங்கள் ரீதியிலான சச்சரவுகளும் மோதல்களும் இனிமேல் தேவையில்லை. முப்பதாண்டுகால மோதலில் எமது தேசத்தின் மக்கள் பல்வேறு துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்து விட்டனர்.இந்த நிலைமையை மீண்டும் எமது பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நாம் கௌரவமான சமாதானத்துக்காக அர்ப்பணிப்புடன் உள்ளோம். இதற்காக இயலுமான அனைத்தையும் எமது அமைச்சு மற்றும் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன என்று கலாசார அலுவல்கள் பௌத்த விவகார அமைச்சரும் களுத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலை பிரெட்ரிக் கோட்டை (Trincomalee Fort Fredrick) மற்றும் புராதன சின்னங்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் கடந்த பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் சரித்திர முக்கியத்துவத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கான பிரவேச அட்டை விநியோகத்தை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அண்மையில் ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“தேசத்தின் கிழக்கு மாகாணத்தின் தலைநகரான திருகோணமலையில் கிறிஸ்துவ வருடம் 1505 இல் நிர்மாணிக்கப்பட்ட இந்த ஒல்லாந்தர் கோட்டை பின்னர் ஆங்கிலேயர்களினால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. அரச கலாசார நிதியத்தின் திருகோணமலை திட்டத்தின் கீழ் பாரிய நிதிச் செலவில் இதனைப் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
எமது நாட்டுக்கு வெளிநாட்டுச் செலாவணி ஈட்டித்தரும் பிரதான துறையாக உல்லாசப் பயணத்துறை விளங்குகின்றது.நாட்டின் சரித்திர முக்கியத்துவமிக்க இடங்களையும் மரபுரிமைகளையும் கண்டுகளிக்க சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். முக்கிய இடங்கள் தொடர்பில் காலாகாலமாக கவனம் செலுத்தப்படவில்லை. அதனால் இவை கைவிடப்பட்ட உக்கிய நிலையில் காணப்பட்டன.இவற்றை மீண்டும் பொலிவூட்டிப் பாதுகாத்து விஷேடமானதாக மக்கள் பார்வைக்கு செய்துள்ளோம்.
இதன் சுற்றாடல் கட்டமைப்பையும் பாதுகாத்து இங்கு வாழும் மக்களின் தேவைகளையும் கவனித்து சுற்றுலா வலயமாக்க எண்ணியுள்ளோம். தற்போது திட்டமிடப்பட்டுள்ள திருகோணமலை புதிய அபிவிருத்தி திட்டத்துக்கு உட்பட்டதாகவே சுற்றுலா வலயத்துக்கான பிரேரணைகளும் அடங்கியுள்ளன. இதுதொடர்பிலான பூர்வாங்க வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த கோட்டைச் சுவர் , யுத்த பீரங்கிப் பிரிவு மற்றும் தொழில்நுட்ப ரீதியில் முக்கியமான பல்வேறு இடங்களையும் புராதன சின்னங்களையும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கும் வாய்ப்பு தற்போது உதயமாகியுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மூன்று வலயங்களை உள்ளடக்கிய இந்த சரித்திர முக்கியத்துவமிக்க இடத்தைப் பாதுகாப்பது சுற்றுலாப் பயணிகளின் பொறுப்பாகும். இந்தக் கோட்டைக்குள் இருக்கும் இரகசிய சுரங்கம் மற்றும் வெடிபொருள் களஞ்சியம் என்பவற்றையும் பாதுகாக்க செயல்பாடுகள் மேற்கொண்ட பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்துவிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எம்.எஸ்.எம் முன்தஸிர்-…
(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)