மாத்தளை ரத்வத்தை தோட்டத்தில் தோட்ட உதவி முகாமையாளர் நடந்து கொண்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அரசாங்கம் உடனடியாக அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம் பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மாத்தளை ரத்வத்தை தோட்டத்தில் அரசாங்க காணியிலிருந்த தற்காலிக வீட்டை உடைத்த சம்பவம் தொடர்பில், நேற்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியிலுள்ள மலையக தமிழ் எம்.பிக்கள் நீதி கோரி சபையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இதன்போதே மனோ கணேசன் எம்பி இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாத்தளை, ரத்வத்தை தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் முழு உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சம்பவம் எமது சமூத்துக்கு ஏற்பட்ட அநீதி மாத்திரமல்ல ஒட்டுமொத்த இலங்கைக்கும் ஏற்பட்ட அகெளரவமாகும்.
தோட்ட மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினை தொடர்பாக கடந்த பாராளுமன்ற அமர்வின்போது, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கருத்துக்களை முன்வைத்தோம்.
மலையக மக்களுக்கான அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றே, இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறான நிலையில் தோட்ட உதவி முகாமையாளர் ஒருவர் மேற்கொண்ட அடாவடித்தனத்தை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசாங்கம் அதனை கவனத்திற் கொண்டு சம்பந்தப்பட்ட உதவி முகாமையாளரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.
சம்பவ இடத்துக்கு அமைச்சர் ஒருவர் சென்றதாக தெரிவித்தனர். நானும் அங்கே போயிருக்க முடியும். எனினும், நான் மனோ கணேசன். மாறாக சிவாஜி கணேசனோ, ரஜனிகாந்தோ அஜித்தோ அல்ல. நான் ஒரு பொறுப்புவாய்ந்த மக்கள் பிரதிநிதி.
இலங்கையர் என்ற வகையில் நாம் அனைவரும் சமமாக வாழவேண்டும். யாரும் எம்மை அடித்தால் நாமும் திருப்பி யடிக்க முடியும். அதனால் தான் அடித்தால் திருப்பியடிக்குமாறு நான் தெரிவித்திருந்தேன். தோட்டங்கள் அரசாங்கத்தின் சொத்து.தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமானவையல்ல.
அவை,குத்தகைக்கே வழங்கப்பட்டுள்ளன .
லோரன்ஸ் செல்வநாயகம்