மாத்தளை – எல்கடுவ பகுதியில் வீடொன்று உடைக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, பாராளுமன்றத்தில் நேற்று சற்று பரபரப்பு நிலை ஏற்பட்டது. சபை நடுவில் அமர்ந்து தீடிரென தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாத்தளை ரத்வத்தை தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட உதவி முகாமையாளரை உடனடியாக கைது செய்யுமாறு தமிழ் எம்.பிகள் நேற்றைய பாராளுமன்ற அமர்வின்போது சபை நடுவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சியை சேர்ந்த மலையக எம்.பிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிகளுமே பாராளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்ட நிலையிலேயே, பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
ரத்வத்தை பகுதியில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர், வெளியேற்றப்பட்டமைக்கு எதிர்கட்சி த் தலைவர் சஜித் பிரேமதாச தமது எதிர்ப்பை வெளியிட்டார்.
பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லையென சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தினார்.
சபையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, பெருந்தோட்ட அமைச்சர் ரமேஸ் பத்திரண பதிலளித்தார்.
அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரில் சென்று விடயங்களை ஆராய்ந்திருந்தாலும், கடமையை நிறைவேற்ற தவறியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் தெரிவித்தார்.
மாத்தளை – எல்கடுவ – ரத்வத்தை பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நியாயம் கிடைக்கவில்லை என தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் அமளிதுமளியில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் பொலிஸ் மாஅதிபர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன உறுதியளித்தார்.
மாத்தளை – ரத்வத்தை பகுதியில் இடம்பெற்ற சம்பவம், பெருந்தோட்ட மக்களுக்கு மாத்திரமன்றி, இலங்கை பிரஜைகளின் நற்பெயருக்கு களங்கதைத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய போது குறிப்பிட்டார். மலையக மக்களின் பிரஜாவுரிமை முழுமைப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார். மலையக மக்கள் மீதான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டார்;.
பெருந்தோட்டக் காணிகள், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமில்லை எனவும், அது அரசாங்கத்திற்கு சொந்தமானது எனவும் அவர் தெரிவித்தார்.