கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீராதா கிருஷ்ண ஆலய கிருஷ்ண ஜயந்தியும், ஜன்மாஷ்டமி விழாவும், செப்டம்பர் 6ஆம் 7ஆம் திகதிகளில் வெகுசிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் கொண்டாடப்படும்.
இந்த விழாவில் விஷேட அம்சமாக செப்டம்பர் 7ஆம் திகதி மாலை 7 மணிக்கு புதுச்செட்டித்தெரு தெரு ஸ்ரீராம் மண்டபத்தில் உலகப் புகழ் நடனக் கலைஞர்களான இந்தியாவைச்சேர்ந்த ஹரி, சேத்தனா ஆகியோர் வழங்கும் கதக் நடனம் இடம்பெறும்.
கிருஷ்ண பகவான் அவதரித்த இந்த நாளில் உலகெங்குமுள்ள கிருஷ்ண பக்தர்கள் அவருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை நைவேத்தியம் செய்தும் கிருஷ்ணரை நன்கு அலங்கரித்தும் கொண்டாடி மகிழ்கின்றனர். அத்துடன் பூஜை, பஜனை, சிறப்பு வழிபாடுகள் என்பனவும் நடத்தப்படுகின்றன.
கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீராதாகிருஷ்ணா ஆலயத்தில் வருடாந்தம் கொண்டாடப்படுவதுபோல் இவ்வருடமும் விசேட வழிபாடுகளும், கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
6ஆம் திகதி புதன்கிழமை காலை 5.30 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் ஆரம்பமாகும் இவ்விழாவில் தொடர்ந்து துளசி ஆரத்தி, தர்சன ஆரத்தி, குருபூஜை ராஜபோக ஆராத்தி, தூப ஆராத்தி என்பன இடம்பெறும்.
மாலை 6.30 மணிக்கு சந்தியா ஆரத்தியைத்தொடர்ந்து ஹரே கிருஷ்ணா இசை நாட்டியக் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
7ஆம் திகதி வியாழனன்று காலை மங்கள ஆரத்தியுடன் ஆரம்பமாகும் விழாவில் நகர சங்கீர்த்தனமும், குழந்தை கிருஷ்ணர் ஊர்வலமும் நடைபெற்று குழந்தை கிருஷ்ணருக்கு பாலாபிஷேகமும், தொட்டிலிலிட்டு தாலாட்டும் வைபவமும் இடம்பெறும்.
இரவு 11.00முதல் நள்ளிரவு 12.00 மணிவரை ஸ்ரீஸ்ரீராதாகிருஷ்ணருக்கு மஹா அபிஷேகமும், விஷேட ஆராதனைகளும் இடம்பெற்று அருட்பிரசாதம் வழங்கப்படும்.
அபிஷேகத்துக்குவேண்டிய பால், இளநீர், பழம், பூக்கள், மற்றும் அன்னதானத்திற்குவேண்டிய சகல பொருட்களையும் பக்தர்கள் வழங்கலாம்.
கிருஷ்ணப்பிரியன்