இந்தியா அரிசி ஏற்றுமதியை மேலும் கட்டுப்படுத்தியுள்ள நிலையில் உலகெங்கும் அரிசி விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
பாஸ்மதி அரிசிக்கு அது குறைந்தபட்ச விலையை நிர்ணயித்துள்ளது. ஒரு தொன் பாஸ்மதி அரிசியின் குறைந்தபட்ச விலை 1,200 டொலர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி வகைகளை பாஸ்மதி என்ற பெயரில் வர்த்தகர்கள் வெளிநாடுகளுக்குக் கடத்துவதைத் தவிர்க்க அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாஸ்மதி என்று பெயரிட்ட அரிசி மூட்டைகள் தொன்னுக்கு 360 டொலருக்கும் குறைவான விலையில் ஏற்றுமதி செய்யப்படுவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதற்கு முன் கடந்த வெள்ளிக்கிழமை (25) புழுங்கல் அரிசிக்கு 20 வீத ஏற்றுமதி வரி விதிப்பதாய் இந்தியா அறிவித்தது. அது குறைந்தபட்சம் ஒக்டோபர் மாத நடுப்பகுதி வரை நடப்பில் இருக்கும்.
கடந்த மாதம் இந்தியா பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளை ஏற்றுமதி செய்யத் தடை விதிப்பதாய் அதிரடியாய் அறிவித்தது. தற்போது அனைத்து வகையான அரிசி ஏற்றுமதிகளுக்கும் இந்தியா ஏதோ ஒரு வகையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு உலகளவில் அரிசி ஏற்றுமதியில் இந்தியா வகித்த பங்கு சுமார் 40 வீதமாகும். இந்தியா உள்ளூரில் விலையைக் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.
அது ஏழை நாடுகளைக் கடுமையாகப் பாதிக்கலாம் என்ற கவலை எழுந்துள்ளது.