ஈராக் தலைநகர் பக்தாதில் 2016 ஆம் ஆண்டு 300 பேர் கொல்லப்பட்ட வாகன குண்டு தாக்குதலுடன் தொடர்புபட்ட மூவர் தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
புனித ரமழான் மாதத்தின் இரவு நேரத்தில் மக்கள் ஒன்று கூடி இருந்தபோதே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றது. 2003 ஆம் ஆண்டு ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்புக்குப் பின்னர் இடம்பெற்ற அதிக உயிரிழப்புக் கொண்ட ஒற்றை குண்டு தாக்குதலாக இது இருந்தது.
இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் குழு பொறுப்பேற்றது. ஐ.எஸ் ஈராக்கில் தனது நிலங்களை இழந்து தோற்கடிக்கப்பட்டபோதும் அங்கு தொடர்ந்தும் இயங்கி வருகிறது. இந்த மரண தண்டனைகள் கடந்த ஞாயிறு அல்லது திங்கட்கிழமையில் நிறைவேற்றப்பட்டதாக ஈராக் பிரதமர் ஷியா அல் சுதானி தெரிவித்துள்ளார். எனினும் தூக்கிலிடப்பட்டவர்கள் விபரம் வெளியிடப்படவில்லை.
எனினும் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர் என்று சந்தேகிக்கப்படும் கஸ்வான் அல் சௌபாயீயும் தூக்கிலிப்பட்டவர்களில் இருப்பதாக அரச தரப்பை மேற்கோள் காட்டி ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சௌபாயீ 2021 ஆம் பிடிபட்டார்.
2016 ஜூலை 16 ஆம் திகதி ஈராக் தலைநகரில் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் கர்ரதா பகுதியில் உள்ள கடைத் தொகுதி ஒன்றுக்கு அருகில் வெடிபொருட்களை நிரப்பிய வாகனம் வெடித்தது. இந்த வெடிப்பினால் கட்டடத்தில் ஏற்பட்ட தீயினாலேயே அதிகம் பேர் கொல்லப்பட்டனர்.