இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள காலி மாவட்டத்தின் சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் அண்மையில் (2023 ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில்) மரணமடைந்தனர். மேலும் சில கைதிகள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களது மரணத்துக்கு நோய்க்கிருமியொன்று காரணமென முதலில் அறிவித்த மருத்துவ துறையினர், இரண்டொரு தினங்களுக்குள் அந்த நோய்க்கான காரணியை சரியாக அடையாளம் கண்டு அறிவிக்கவும் தவறவில்லை.
என்றாலும் நோய்க் காரணியொன்றினால் இரு கைதிகள் உயிரிழந்த விடயம் தென் பகுதி உட்பட நாட்டின் பல பிரதேசங்களிலும் பேசுபொருளாகியது. இந்நிலையில் அந்நோய்க்காரணி மெனின்ஹோ கொக்கல் (Meningococcal) என்ற பக்றீரியா தான் என்று குறிப்பிட்ட சுகாதாரத் துறையினர், இப்பக்றீரியா மக்கள் மத்தியில் பரவவில்லை என்றும் கூறினர். அதனால் இப்பக்றீரியா குறித்து மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த அச்சம் நீங்கியது. ஆனால் அந்த அச்சம் முற்றாக நிங்கிவிடவில்லை.
காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த எட்டு மாதக் குழந்தையொன்று இப்பக்றீரியா தொற்றினால் கடந்த 26 ஆம் திகதி (அகஸ்ட் மாதம்) உயிரிழந்தமை இதற்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கொனர சோமரட்ன, ‘இக்குழந்தை மெனின்ேஹா கொக்கல் பக்றீரியா தொற்றினால் உயிரிழந்துள்ள போதிலும் இக்குழந்தைக்கும் ஏற்கனவே உயிரிழந்த இரு சிறைக் கைதிகளுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இருக்கவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் இப்பக்றீரியா குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் நிலை மக்கள் மத்தியில் மீண்டும் ஏற்பட்டுள்ளது. காலியில் இரண்டு கைதிகள் மற்றும் எட்டு மாதக் குழந்தையின் மரணத்திற்கு காரணமாக அமைந்த பக்றீரியாவின் தொற்றுக்குள்ளான நபரொருவர் இரத்மலானையிலுள்ள நிறுவனமொன்றில் அடையாளம் காணப்பட்டுள்ளார். 49 வயது மதிக்கத்தக்க இந்நபர் ஜா−எல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் கடமையாற்றும் நிறுவனத்தில் அவருடன் பணிபுரியும் சுமார் 30 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் இரத்மலானை சுகாதார மருத்துவ அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
காலியில் சிறைக்கைதிகள் சிலரில் முதலில் அடையாளம் காணப்பட்ட இப்பக்றீரியா, சில தினங்களுக்குள் இச்சிறைச்சாலைக்கு வெளியே காலிப் பிரதேசத்திலேயே பதிவானதோடு நில்லாது ஜா− எலவில் வசிக்கும் இரத்மலானையில் தொழில் புரியும் நபரொருவருக்கும் தொற்றி இருப்பது அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இது இப்பக்றீரியா மெதுமெதுவாக வியாபிப்பதன் சமிக்ஞையாக விளங்குகிறது. ஆன போதிலும் அந்நபரும் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்.
காலி சிறைச்சாலையில் முதலில் அடையாளம் காணப்பட்ட இப்பக்றீரியா தொற்று தற்போது மேல் மாகாணத்திலும் பாதிவாகி இருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவும் செய்திருக்கிறது. ஏனெனில் இப்பக்றீரியா தாக்கத்திற்கு உள்ளானவர்களாக இற்றை வரையும் பத்துக்கு உட்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் மூவர் உயிரிழந்துமிருப்பது இப்பக்றீரியா தொடர்பிலான அச்சத்திற்கு வழிவகுத்துள்ளது. அதனால் இந்நோய் குறித்து அறிந்து கொள்வதும் அதற்கேற்ப செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதும் பெரிதும் பயன்மிக்கதாக இருக்கும்.
மெனின்ஹோகொக்கல் மூளைக்காய்ச்சல் அல்லது மெனின்ஹோகொக்கல் மெனின்ஜி என அழைக்கப்படும் இந்நோய் சாதாரணமான ஒன்றல்ல. உரிய நேர காலத்தில் இந்நோயை அடையாளம் கண்டு துரிதமாகச் சிகிச்சை அளிக்கத் தவறினால் கடும் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தக்கூடியதே இந்நோய்.
1805 இல் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவை அண்மித்த பிரதேசங்களில் இந்நோய் பெரிதும் பரவியது. அதன் விளைவாகப் பலரது உயிரிழப்புக்கும் மேலும் பலரது கடும் உடற் பாதிப்புகளுக்கும் காரணமானது இந்நோய்க்காரணி. இப்பின்புலத்தில் இந்நோய்க்கான காரணி குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் பயனாக 1887 இல் நெய்ஸ்செரியா மெனின்ஹிடிடிஸ் (Neisseria meningitidis) என்ற பக்றீரியாவே இந்நோய்க்கு மூலகாரணி என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதில் ஏ,பி,சி மற்றும் டப்ளியூ 135 என நான்கு முக்கிய வகைகள் காணப்படுவது மருத்துவ உலகினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்நோயானது எந்த வயது மட்டத்தினருக்கும் தொற்றலாம். அதனால் தான் தொற்றுநோயியல் தடுப்பு பிரிவு, ‘இந்நோய்க்கு உள்ளானவர்களை பரவலாக அடையாளம் காண முடியாவிட்டாலும் இந்நோய்க்காரணி நாம் வாழும் சூழலில் பரவிக் காணப்படக்கூடியது. மக்களில் குறிப்பிடத்தக்க அளவிலானோர் இந்த பக்றீரியாவுடன் நோய் அறிகுறிகள் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளதோடு தற்போதைய அதிநவீன அறிவியல் தகவல்களின் படி, வேறு விலங்குகளிலோ அல்லது வெளிச்சுற்றாடலிலோ உயிருடன் காணப்படக்கூடிய ஆற்றல் இந்நோய்க்காரணிக்கு இல்லை’ எனவும் தெரிவித்திருக்கிறது.
இந்நோய்க் காரணியானது இந்நோய்த் தொற்றுக்கு உள்ளான நோயாளர் தும்மும் போதும் இருமும் போதும் சளித்துளிகளில் பெருமளவில் வெளிப்படும். அது சுகதேகியின் சுவாசத்தொகுதி ஊடாகத் தொற்றக்கூடியதாகும். குறிப்பாக இந்நோய்த் தொற்று ஏற்பட நோய்க்கு உள்ளானவருடன் நீண்ட நேரம் நெருக்கமான தொடர்பாடலை மேற்கொள்ள வேண்டும்.
ஆனாலும் இத்தொற்றுக்கு உள்ளான எல்லோருக்கும் அதற்கான அறிகுறிகள் வெளிப்படுவதில்லை. நோய்க்கு உள்ளானவருடன் நெருக்கமாக வாழ்பவர்கள் மத்தியில் இந்நோய் பரவுவது வேகமாக இருக்கலாம்.
இதேவேளை புகைப்பிடித்தல் பழக்கம் கொண்டுள்ளவர்கள் மத்தியிலும் சுவாசத்தொகுதி நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்கள் மத்தியிலும் இந்நோய் வேகமாகப் பரவுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் இந்நோயின் நோயரும்புக் காலம் 2 முதல் 10 நாட்களாகும்.
பொதுவாக இந்நோய்க்கு உள்ளாகின்ற ஒருவருக்கு கழுத்தில் பிடிப்பு, கடும் காய்ச்சல், வெளிச்சத்தைப் பார்ப்பதில் (கூச்சம்) சிரமம், தலைவலி, வாந்தி, குளிர், சோர்வு, கை மற்றும் கால் பாதங்கள் குளிர்ந்த நிலையில் காணப்படல் போன்றவாறான அறிகுறிகள் வெளிப்படலாம். சிலருக்கு உடல் தோலில் சிகப்பு நிறப்புள்ளிகளும் ஏற்படலாம். இவ்வறிகுறிகள் வெளிப்பட்டு இரண்டொரு நாட்களிலேயே அசாதாரண நிலையை அடையக்கூடிய அச்சுறுத்தல்களும் உள்ளன.
அதனால் இந்நோய்க்கு உரிய சிகிக்சையை தாமதமின்றி விரைவாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்நோய்க்குரிய சிகிச்சை பெற்றுக்கொள்பவர்கள் கூட உயிராபத்து அச்சுறுத்தலை மாத்திரமல்லாமல் மூளைப் பாதிப்பு, செவிப்புலன் இழப்பு, கற்றல் திறன் பாதிப்பு போன்றவாறான தாக்கங்களுக்கு உள்ளாகக்கூடிய அபாயமும் காணப்படவே செய்கின்றன.
ஆனால் இந்நோய்க் காரணியை அழித்துக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான பல நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் புழக்கத்தில் காணப்படுகின்றன. அதனால் நோயை ஆரம்ப கட்டத்திலேயே அடையாளம் கண்டு துரிதமாக சிகிச்சை அளிப்பதன் ஊடாக உயிராபத்து அச்சுறுத்தலையும் நெருக்கடிகளையும் தவிர்த்துக்கொள்வது மிகவும் முக்கியமானது.
அத்தோடு இந்நோய்க்கு உள்ளானவருடன் நெருங்கிப் பழகியுள்ளவர்களை விரைவாக அடையாளம் கண்டு இந்நோய்த்தொற்று அச்சுறுத்தலைக் குறைப்பதற்கான மாத்திரைகளை அவர்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும். மேலும் இந்நோய்த்தொற்றுக்கான அதிக அச்சுறுத்தலைக் கொண்டுள்ளவர்களுக்கு நோய்த் தவிர்ப்புக்கான தடுப்பு மருந்து பெற்றுக்கொடுக்கப்படுவதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.
இந்நோயையும் சுவாசத்தொகுதியில் ஏற்படும் வைரஸ் தொற்றுக்களையும் ஆரம்ப கட்டத்தில் பிரித்தறிய முடியாதிருக்கலாம். ஆனால் இந்நோய்க்குரிய ஒரிரு அறிகுறி தென்பட்டாலும் தாமதமின்றி துரிதமாக மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதேவேளை, மெனின்ஹோகொக்கல் நோய்க்காரணி பரவுவதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் அவசியத்தை விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார். ஆகவே இந்நோய்த் தொற்றைத் தவிர்த்துக்கொள்வதிலும் அதன் தாக்கங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதிலும் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். அதன் ஊடாக இந்நோயின் பாதிப்புக்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம்.
இதைவிடுத்து நோய் குறித்த கவனயீனங்களும் தாமதங்களும் கடும் நெருக்கடிகளைக்கூட ஏற்படுத்திவிடலாம் என்பதை மறந்துவிடலாகாது.
மர்லின் மரிக்கார்