மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இன்று (03) அதிகாலை நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர பகுதியில் தனது விவசாய காணியில் பாதுகாப்புக்காக அனுமதியின்றி பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா சாந்திபுர பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 66 வயதுடைய மைக்கல் அக்குலஸ் டி சில்வா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பயிர்களைப் பாதுகாப்பதற்காக குறித்த நபர் தனது வீட்டில் இருந்து விவசாய நிலத்திற்கு சட்டவிரோதமான முறையில் மின்சார கம்பிகளை இழுத்துள்ளதாகவும், இன்று அதிகாலை மின்சார கம்பிகளில் சிக்குண்டு சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா நீதவான் ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தலவாக்கலை குறூப் நிருபர்