இலங்கையின் இன்றைய பொருளாதார நிலைமைக்கு முக்கிய காரணம் கடந்த காலத்தில் இலங்கையை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் இந்த நாட்டு மக்களை மத ரீதியாகவும் இன ரீதியாகவும் பிரித்து ஆட்சி செய்தமையே என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சர்வதேச புகழ் பெற்ற சீதையம்மன் ஆலயத்தின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நடைபெற்ற சர்வதேச மத நல்லினக்க 7ஆவது மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொழுதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டின் இலங்கை பிரதிநிதியாக இலங்கை சர்வோதய அமைப்பு செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மத நல்லிணக்கம், இன ஒற்றுமை என்பனவற்றை முதன்மைப்படுத்தி 7வது சர்வதேச மாநாடு நுவரெலியாவில் நேற்று முன்தினம் (01) ஆரம்பமானது.
இந்த மாநாட்டில் இந்தியா பங்களாதேஷ் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்த 39 பேர் கலந்து கொண்டுள்ளதுடன், இலங்கையின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்து, பௌத்த, முஸ்லிம் கிறிஸ்தவ மதங்களை பிரதிநிதித்துவப்படுத்திய மதத்தலைவர்களும், அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாடானது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எஸ்.தியாகு