Home » வடக்கு, கிழக்கின் சில பகுதிகளில் அரச அனுசரணையுடன் காணிகள் அபகரிப்பா?

வடக்கு, கிழக்கின் சில பகுதிகளில் அரச அனுசரணையுடன் காணிகள் அபகரிப்பா?

- சந்தேகத்தில் CV விக்கி முறைப்பாடு

by admin
September 3, 2023 3:37 pm 0 comment

வடக்கு, கிழக்கில் குருந்தூர், தையிட்டி, செட்டிகுளம், நாவற்குழி போன்ற இடங்களில் அரச அனுசரணையுடன் காணி அபகரிப்புகள் இடம்பெறுகின்றன எனும் உண்மையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கையினூடாக வெளிக்கொணரப்பட வேண்டுமென, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடர், ஜெனிவாவில் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் 13ஆம் திகதிவரை ஒருமாத காலம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரின் முதல்நாள் அமர்வில், இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இருப்பினும், கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான மிக மோசமான குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமான நியாயபூர்வமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவில்லையென்ற விமர்சனம் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரின் போது, இலங்கை தொடர்பாக வலியுறுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக கருத்துரைத்த போதே, சி.வி.விக்கினேஸ்வரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரில் முன்னைய அமர்வுகளின் போது, இலங்கையிடம் எதிர்பார்க்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவை உரியவாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா? என்பது தொடர்பாக ஆராயப்படும்.

குறிப்பாக, மனித உரிமைகள் பேரவையின் முன்னைய அறிக்கையில் பாதுகாப்புத் துறைசார் செலவினங்களை கட்டுப்படுத்தல், ஊழலை இல்லாதொழித்தல், கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நியாயமான விசாரணையை மேற்கொள்ளல், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக நியாயமான விசாரணையை மேற்கொள்ளல், வடக்கு, கிழக்கில் படையினரின் எண்ணிக்கையை குறைத்தல், படையினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கமைவாக திருத்துதல், ஊடக சுதந்திரத்தைபாதுகாத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் வலியுறுத்தப்பட்டன” எனத் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division