Home » நமக்குள் மறைந்திருக்கும் நிந்தவூர் கலைஞன் எம்.ஐ. உஸனார் ஸலீம்

நமக்குள் மறைந்திருக்கும் நிந்தவூர் கலைஞன் எம்.ஐ. உஸனார் ஸலீம்

by admin
September 10, 2023 6:09 pm 0 comment

நிகழ்கால இலக்கியத்தளத்தில் வளர்ந்து வரும் கலைஞர்கள் தமக்கு முன்னின்ற கலைஞர்களுக்கான உரிய இடத்தை வழங்கிட முன் வராத காரணங்களால் நமது பல நல்ல கலைஞர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிறந்தகத்திலே மறைந்த முகங்களாகவே பார்க்கப் படுகின்றனர். இருப்பினும் அவர்களின் சிறந்த எழத்துக்களுக்கு எங்கேயோ ஒரு வாசகன் இல்லாமல் இருந்ததில்லை.

அந்த வகையில் நிந்தவூரில் 1963/04/20 இல் பிறந்து அவ்வூரிலே வாழ்ந்து வரும் பல்துறை கலைஞர் என்று சொல்லலாம். அவர்தான் நிந்தவூர் எம். ஐ. உஸனார் ஸலீம். அவரைப் பற்றிய நேர்காணலின் தொகுப்பைத் தருகிறேன். 1975 காலப் பகுதியில் இலங்கை வானொலி தேசிய சேவையில் ‘பாராளுமன்றத்தில இன்று ‘ எனும் நிகழ்ச்சியை அதன் தொகுப்பாளர் ‘அண்டனி ராசைய்யா’ தொகுத்து வழங்கி வந்தார். அந்நிகழ்வினை பாராட்டி ‘நேயர் கடிதம் ‘ ஒன்றை இலங்கை வானொலிக்கு அனுப்பி வைத்தேன். அடுத்த கிழமை அந்தக் கடிதம் வாசிக்கப்பட்டது. இதுவே எழுதுவதற்கான ஆர்வத்தை எனக்குள் ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இலங்கை வானொலி முஸ்லிம் சேவையிலும் வர்த்தக சேவையிலும் நாடகம், சிறுகதை, கட்டுரை என்னால் பிரதிகள் எழுதப்பட்டு அது ஒலிபரப்பப்பட்டது.

ஓலி மஞ்சரி, வாலிப வட்டம், ஆடவர் அரங்கு, இளைஞர் இதயம், இளைஞர் மன்றம், போன்ற வானொலி நிகழ்ச்சிகளுக்கு ஆக்கங்கள் எழுதியதோடு மட்டுமல்ல இவர் இந்நிகழ்ச்சிகளில் நேரடியாகவும் பங்கு பற்றியுள்ளார்.மேலும் இவர் 1985 ஆம் ஆண்டு ‘புன்னகை’ எனும் ரோணியோ சஞ்சிகை இதழை வெளியீடு செய்துள்ளார். அச்சஞ்சிகை மட்டக்களப்பு சர்வோதயம் நடாத்திய அகில இலங்கை மட்டத்திலான இலக்கிய புத்தக கண்காட்சியில் ரோனியோ சஞ்சிகை இதழுக்காக இரண்டாமிடம் பெற்று பரிசினைப் பெற்றுக்கொண்டது தனக்கு சந்தோஷம் தருவதாக கலைஞர் உஸனார் ஸலீம் குறிப்பிடுகிறார்.

அதனைத் தொடர்ந்து “தேன்மழை” என்ற கையெழுத்துப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தேன். பின்னர் அப்பத்திரிகையை நிந்தவூர் எழுத்தாளர் சங்க வெளியீடாக தேன் மழை வலம் வந்தது என்பதையும் எம். ஐ.உஸனார் ஸலீம் ஞாபகப்படுத்தினார். இவர் 350 மெல்லிசைப் பாடல்களை எழுதியுள்ளார். அதில் 300 பாடல்கள் இலங்கை வானொலி தேசிய சேவையிலும் மற்றும் முஸ்லிம் சேவையிலும் ஒலிபரப்பப்பட்டது. நூர்ஜஹான் மர்சூக்,நிசார் ரஹிம்,எம். எச். பெளசூல் அமீர்,கலாவதி சின்னச்சாமி,முத்தழகு,எஸ். கணேஷ் வரன் போன்ற சிரேஷ்ட அறிவிப்பாளர்கள்,பாடகர்கள் இவரெழுதிய பாடல்களை பாடியுள்ளார்கள். அந்த வகையில் இவரொரு பாடலாசிரியராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது பாராட்ட வேண்டிய தருணமாகும்.
கண்ணுக்குள் ஒரு வெள்ளை நிலா – பெரு
மின்னலிட்டுச் சிரிக்குதடா..!
கன்னங்களில் இரு பள்ளநிலா – என்னை
கண்ணமிட்டே வதைக்குதடா ..!
என்ற பாடலை அறிவிப்பாளரும் பாடகருமான எஸ். கணேஷ்வரன் வர்த்தகசேவை முத்து விதான நிகழ்ச்சியில் இப்பாடலை பாடியபோது பலரது உள்ளங்களை கவர்ந்ததுடன் பாடலும் பிரபலமானது. அதே நிகழ்ச்சியில் சிரேஷ்ட அறிவிப்பாளராக இருந்த கே.ஜெயகிருஷ்ணா அவர்கள் இப்பாடலை பாடிய பாடகர் எஸ். கணேஷ்வரனை 10 நிமிடங்கள் இப்பாடல் பற்றி நேர்காணல் செய்தார்.

அக்காலத்தில் மேற் சொல்லிய பாடல் பிரபல்யமடைந்ததன் காரணமாக இப்பாடல் பின்னர் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப் பட்டது. முதன் முதலில் இலங்கை வானொலி ஒலிபரப்புத் கூட்டுத் தாபனத்தில் கணனி மூலம் இசையமைக்கப்பட்ட பாடலாகவும் இது அமைகிறது. இசையமைத்தவர் இசையமைப்பாளர் திரு.சரத் விக்ரமசிங்க என்பதும் குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சியில் இவரது மூன்று நாடகங்கள் ஒளிபரப்பப்பட்டன. அதில் இரண்டு நாடகங்கள் “மபாஹிர் மௌலானாவின்” தயாரிப்பில் ஒளிபரப்பப் பட்டது என பெருமையாக கூறிக் கொண்டார்.

பத்திரிகைத்துறையை பொருத்தவரை இவர் தினகரன் நாளிதழ், தினகரன் வாரமஞ்சரி, சிந்தாமணி,தினபதி, வீரகேசரி, சூடாமணி, சுடர்ஒளி, மித்திரன் வாரமலர், ஜனனி, விடிவெள்ளி,மற்றும் சஞ்சிகைகளுக்கும் பல்வேறு ஆக்கங்கள் எழுதியுள்ளார். பத்திரிகையில் தனது முதல் ஆக்கம் தினகரன் பத்திரிகையில் கல்விப்பகுதியில் “கல்வி வளர்ச்சியில் பெரியோர்களின் பங்களிப்பு” என்ற கட்டுரையின் மூலமே அறிமுகமானதாகவும் அப்போது தான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம் எனவும் கலைஞர் உஸனார் ஸலீம் குறிப்பிடுகிறார். இவர் எழுதிய பாடல்கள் தொலைக் காட்சியிலும் ஒளிபரப்பப் பட்டுள்ளது. அந்தப் பாடல் வரிகளை பகிர்ந்து கொண்டபோது
குயிலே உன் பாட்டுக்கு அர்த்தம் என்ன?
கூவென்று இசைபாடும் ஏற்கமென்ன?
வயலோரச் சோலையில் அலைவதென்ன
வண்ண மாங்குயிலின் சேதியென்ன?
இப்பாடலை கலாவதி சின்னச்சாமி அவர்கள் பாடியிருந்தார் என்று அப்பாடகரையும் நினைவு கூர்ந்தார்.

1997 இல் இலங்கை ஒலிபரப்புத் கூட்டுத்தாபனமும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சும் இணைந்து நடாத்திய நாடகப் பிரதி எழுதும் போட்டியில் இரண்டாமிடம் பெற்றதாகவும் அதில் இலங்கை நாடகத் துறையின் தந்தை என அழைக்கப் படும் அராலியூர் ந.சுந்தரம் பிள்ளை முதலாம் இடம் பெற்ற தகவலையும் எம். ஐ. உஸனார் ஸலீம் கூறிக்கொண்டார். இவர் தமிழ் தினப் போட்டிகளில் மற்றும் இலக்கிய போட்டிகளில் நடுவராக கலந்து கொண்டுள்ளார். வானொலி,பத்திரிகை, தொலைக்காட்சிகளின் கலை இலக்கிய பங்களிப்புக்காக கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் பிரதேச செயலக கலாசார பிரிவும் சேர்ந்து வாழ்நாள் சாதனையாளர் விருதும் மற்றும் கலைஞர் சுவந்தம் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பதையும் அறியத் தந்தார்.

இவர் அரசினர் கலவன் முஸ்லிம் பாடசாலை மற்றும் நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை,சம்மாந்துறை தொழிற்நுட்ப கல்லூரி என்பவற்றின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் எழுதி வைத்திருக்கும் பிரதிகள் நூலாக வெளிவர ஒத்துழைப்பு வழங்கி இவரது கலை இலக்கிய சேவைகள் தொடர வாழ்த்துவோம்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division