Home » ஜி-20 புதுடில்லி மாநாடு; மேற்கு-கிழக்கு பொருளாதார இழுபறியின் மையமாகிறதா?

ஜி-20 புதுடில்லி மாநாடு; மேற்கு-கிழக்கு பொருளாதார இழுபறியின் மையமாகிறதா?

by admin
September 10, 2023 6:49 pm 0 comment

உலக அரசியலின் அதிகாரத்துக்கான போட்டியானது கூட்டுக்களை பலப்படுத்துவதிலும், நிறுவனங்களை கட்டமைப்பதிலும் தங்கியுள்ளது. கூட்டுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் கொள்கையிலும் வல்லரசுகளது வலு தங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. அந்த வரிசையில் ஜி-20 முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக விளங்குகிறது

ஜி-20 நாடுகளது தலைவர்களுக்கான மாநாடு இந்தியாவின் தலைமையில் புதுடில்லியில் நிகழ்ந்து வருகிறது.(09-,10-.09.2023) இந்த மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்குவதனால் மேற்குலக அதிகார சக்திகளும் கீழைத்தேச அதிகாரம் மிக்க நாடுகளும் கலந்து கொள்வதில் கவனம் கொண்டுள்ளன. ஆனால் இதில் ர‌ஷ்யா மற்றும் சீனத் தலைவர்கள் கலந்து கொள்ளாததே அதிக குழப்பங்களை தந்துள்ளதாக தெரிகிறது. இக்கட்டுரையும் மேற்கு-, கிழக்கு இழுபறியின் மையமாக ஜி-20 காணப்படுகிறது என்பதை தேடுவதாக அமையவுள்ளது.

இந்தியா தலைமை தாங்கும் ஜி-20 நாடுகளின் மாநாட்டுக்கு வளர்ச்சியடைந்த மேற்கு நாடுகள் அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் கனடா போன்ற நாடுகளின் தலைவர்கள் வருகை தந்துள்ளனர். இதில் இந்தியாவின் நீண்ட நட்பு நாடான ரஷ்யாவும் அதிக முரண்பாடும் போட்டியுமுள்ள நாடான சீனாவின் தலைவர் கலந்து கொள்ளாமையும் கவனத்தை அதிகம் பெற்றுள்ளது. இந்தியா தனது பண்பாட்டையும் பாரம்பரியங்களையும் வெளிப்படுத்தும் அதேநேரம் உலகளாவிய அதிகாரத்துக்கான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த விடயங்களுக்கும் மாநாட்டின் பின்னரான உடன்படிக்கைகளுக்கும் திட்டமிட்டுள்ளது.

அதுமட்டுமன்றி சீனாவுடனான இராஜதந்திர உறவினைப் பற்றிய உரையாடலை முதன்மைப்படுத்தத் திட்டமிட்டது. ஆனால் தற்போது அத்தகைய சீனாவின் பங்கினை சீனப்பிரதமர் லீ கியாங் கலந்து கொண்டு வழங்கப் போவதாக சீன வெளியுறவு அமைச்சு மாவோ நிங் அறிவித்துள்ளார். இரு நாட்டுக்குமான இராஜதந்திர உறவுக்கான ஒருமித்த கருத்தினை எட்டுவதுடன் சீனா எப்போதும் இந்தியாவுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளதெனவும் இரு நாட்டின் உறவின் வளர்ச்சிக்கு உதவுமெனவும் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

இதேநேரம் ரஷ்யாவின் தலைவர் மீதான குற்றவியல் நீதிமன்றத்தின் நடவடிக்கை மற்றும் உக்ரைன் மீதான போர் என்பன ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஜி-20 மகாநாட்டில் கலந்து கொள்வதை தவிர்க்க காரணமாக அமைகிறது. அண்மையில் தென்னாபிரிக்காவில் நிகழ்ந்த பிறிக்ஸ் மகாநாட்டிலும் புட்டின் கலந்துகொள்ளாமை கவனத்திற்குரியதாகும். இதற்கான வலுவான பின்னணியானது இந்தோனேசியாவின் தலைநகரான பாலியில் நிகழ்ந்த ஜி-20 மகாநாட்டில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை கண்டித்து கூட்டுத் தீர்மானத்தை முன்னெடுக்க எடுத்த முயற்சியே அடிப்படையானது. அதனை இந்தியா முழுமையாக மறுத்ததோடு தற்போதுவரை ரஷ்யாவின் நடவடிக்கையை இந்தியா கண்டிக்கவில்லை என்பதே அமெரிக்கா உட்பட்ட மேற்குலகத்தின் நடவடிக்கையின் அதிருப்தியாக உள்ளது. புதுடில்லி மகாநாட்டில் புட்டினுக்கு பதிலாக ரஷ்ய வெளியுறவு அமைச்சரே கலந்து கொள்வார் என ரஷ்யா அறிவித்துள்ளது.

ஜி-20 மாநாடு இந்தியாவின் தலைமையில் நிகழும் போது இரு பிரதான நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளாமைக்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகிறது. அத்தகைய அம்சங்களை விரிவாக நோக்குவது அவசியமானது.

ஒன்று, மேற்கு அதிகார சக்திகளுக்கும் மேற்கு அல்லாத அதிகார சக்திகளுக்குமான முரண்பாட்டின் வடிவமாக இதனை விளங்கிக் கொள்ள வேண்டும். சீனா கீழைத்தேச அதிகார சக்தியின் மைய நாடாக உள்ளதனால் மேற்குலகத்திற்கான பொருளாதார வாய்ப்புகளை தடுக்கவே முனைகிறது. காரணம் மேற்கின் பொருளாதா வாய்ப்புக்கள் கீழைத்தேசத்தின் வளங்களிலேயே தங்கியுள்ளது என்பதை மையப்படுத்தியே சீனா நகருகிறது. இன்றைய பொருளாதாரத்தின் பிறப்பு சந்தையிலும் வர்த்தகத்திலுமே தங்கியுள்ளது. அதுவே நிதிச்சந்தையையும் முதலீடுகளையும் சாத்தியமாக்குகின்றது. இதனை தடுப்பதில் சீனாவின் அக்கறை அதிகமாக உள்ளது. அதனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கீழைத்தேசத்தின் ஆதிக்கத்தை பொருளாதாரத்தில் நகர்த்த முடியுமென சீனா கருதுகிறது. இதனையே வோஷிங்டனில் இயங்கும் தென் ஆசியாவுக்கான வில்சன் நிலையத்தின் பணிப்பாளர் மைக்கல் குகில்மன் குறிப்பிட்டுள்ளார்.

அவரது வாதம் மேற்கு, மேற்கு அல்லாத அதிகார சக்திகளுக்கிடையிலான உடைவாகவும் இவை இரு பிரிவுகளாக மாறுகின்றன எனவும் விவாதிக்கின்றார். பொருளாதார ரீதியில் இரு முகாம்கள் கட்டமைக்கப்படுகின்றன என்கிறார். இதனால் இந்த மகாநாடு தொடங்குவதற்கு முன்பே தோல்வியடைந்து விட்டதாகவும் இதற்கான அடிப்படையில் உக்ரைன் மீதான ரஷ்யப் போர் காரணம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இதனால் உணவுப் பாதுகாப்பு, கடன் பரிமாற்றம், காலநிலைக்கான உலகளாவிய ஒத்துழைப்பு போன்றன பாதிப்பை எட்டியுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.

இரண்டு, இதில் இந்தியாவின் நிலைப்பாடே அதிக முரண்பட்டதாக உள்ளது. இந்தியா எப்போதும் நடுவுநிலை என்ற போலியான கொள்கையை முதன்மைப்படுத்திக் கொள்ள முயலுகிறது. அது ரஷ்யாவுடனும் அமெரிக்காவுடனும் சமமான வெளியுறவைக் கொள்வதாக கூறிக் கொண்டாலும் அடிப்படையில் ரஷ்யாவின் நட்பு நாடாகவே இயங்குகிறது.

இந்தியாவின் முரண்பாடான கொள்கையினால் மேற்கு நாடுகள் இந்தியாவை அதிகம் பயன்படுத்திக் கொள்ளவும் சீனாவுக்கு எதிராக அணிதிரட்டவும் முனைவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதில் இந்திரா காந்தியை தவிர இந்தியாவை ஆட்சி செய்த தலைமைகளும் பலவீனமான கொள்கையைக் கொண்டவர்களாகவே உள்ளனர். அதாவது தெளிவான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிராத போக்கொன்றை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அணிசேராமை, நடுவுநிலமை, அகிம்சை மற்றும் சமாதானம் எனக் கூறிக்கொண்டு பிராந்திய மட்டத்தில் பல படையெடுப்புக்களையும் போர்களையும் மேற்கொண்டுள்ளது என்பது அதன் கொள்கை மீதான குழப்பத்தை தருகிறது.

அவ்வாறே மேற்குடனான மற்றும் கிழக்கு நாடுகளுடனான வெளிறவு கொள்கை அமைந்துள்ளது. மேற்கு இந்தியாவை முன்னிறுத்தியே கீழைத்தேசத்தின் வளர்ச்சியையும் இருப்பையும் குலைத்து வருகிறது என்ற விமர்சனம் நியாயமானதாகவே தெரிகிறது. அது மட்டுமல்ல அதன் போக்கு கீழைத்தேசத்தை மட்டுமல்ல இந்தியாவையும் அதன் பலம்வாய்ந்த வளர்ச்சியையும் தடுக்கிறது. இந்திரா காந்தியை படுகொலை செய்த வல்லரசுடன் இந்திய ஆளும் வர்க்கம் கைகோர்த்து செயல்படுகிற நிலை இந்தியாவின் வளர்ச்சிக்கானதா அந்த நட்புறவு என்ற கேள்வி தர்க்க ரீதியானதே. இந்தியச் சந்தையை வைத்துக் கொண்டு வல்லரசுகளும் மேற்கு நாடுகளும் தமது பொருளாதாரத்தை பலப்படுத்திக் கொள்கின்றன.

மூன்று, இந்திய- ரஷ்ய நட்புக்கு பின்னரும் அமெரிக்கா இந்தியாவுடனான நட்புறவை பாதுகாத்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு பின்னரும் அமெரிக்க இந்திய நெருக்கம் ஆரோக்கியமானதாகவே உள்ளது. அப்படியாயின் அமெரிக்கா உக்ரைனுக்கு விசுவாசமாக செயல்படுகிறதா? அல்லது இந்தியாவுக்கு சாதமானதாக இயங்குகிறதா? அல்லது தனது நலனில் கவனம் கொண்டு இந்தியாவையும், உக்ரைனையும் பயன்படுத்துகிறதா? என்ற கேள்விகள் நியாயமானதாகவே தெரிகிறது. போருக்கு உக்ரைன், பொருளாதாரத்துக்கு இந்தியா என்ற விதியை அமெரிக்கா பின்பற்றுவதாகவே தெரிகிறது. அமெரிக்காவுடன் இந்தியா கூட்டுவைத்திருப்பதால் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடைகிறது என்ற விவாதமும் உண்டு.

அது எந்தளவுக்கு நியாயமானதாக உள்ளது என்பது இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கரது வெளியீடுகளிலிருந்து கண்டு கொள்ள முடிகிறது. அவ்வாறே மேற்கு-, இந்திய நட்புறவு என்பது தனித்து பொருளாதாரத்துடன் நிறைவடைவதல்ல. அதனிடம் தெளிவான அரசியல் உள்நோக்கமும் உண்டு அதனை நிறைவேற்றவே இந்தியா பக்கம் மேற்கு செயல்படுவது போல் விளங்குகிறது. அதில் ஒன்றாகவே ஜி-20 மாநாட்டின் முக்கியத்துவமாகும். நான்கு, மைக்கல் குகில்மன் குறிப்பிடுவது போல் புதுடில்லி மாநாடு மேற்கு நாடுகளின் செல்வாக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

ஆனால் சீனாவினதும், ரஷ்யாவினதும் தலைமைகள் இல்லாத போதும் அதன் அடுத்தகட்டத் தலைவர்கள் கலந்து கொள்வது அதிக நெருக்கடியை மேற்கு நாடுகளுக்கு ஏற்படுத்தும் என எதிர்பார்க்க முடியும். குறிப்பாக உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீதான அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. அல்லது மேற்கு அதனை தவிர்த்து செயல்படவும் முனையலாம். காரணம் மேற்கு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்ள முனையலாம்.

எனவே ஜி-20 மகாநாடு இந்தியாவின் தலைமையில் நிகழும் போது அதன் விளைவுகளை மேற்கு தனதாக்க முயலலாம். அதற்கான வாய்ப்பும் அதிகமானது. சீனா, ரஷ்யாவின் தலைமைகளின் நிலைப்பாடு மேற்கை நிராகரிப்பதாக அமையுமே அன்றி இந்தியாவை நிராகரிப்பதாக அமைய வாய்ப்பு குறைவானது. காரணம் இந்தியா, ரஷ்யா, சீனா என்பன புதிய நாணயத்தையும் பொருளாதார திட்டமிடல்களையும் ஏற்கனவே பிரயோகிக்க தயாராகிவிட்டன. மீண்டும் இந்தியா டொலரில் தனது ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை சாத்தியப்படுத்த விளையாது. இந்தியாவுக்கு தற்போது கிடைத்துள்ள புவிசார் பொருளாதார இயங்குதிறனை கட்டிவளர்க்கவே விரும்பும். இது கீழைத்தேச நாடுகளுக்கு இலாபகரமான செய்முறையாகவே அமையும்.

பேராசிரியர்
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division